மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயல்லிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இத்திரைப்படம் ஒரு பயோ ஃபிக்ஷன் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் ஜெயா எனும் கேரக்டரில் வரும் கங்கனா ரனாவத், தான் விரும்பாமல், தனது தாய் விரும்பியதால் நடிகை ஆகிறார். நடிகையானது முதல் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் பொருளாதாரம், ஆணாதிக்கம், பொறாமை, வஞ்சகம், துரோகம், உறவு, தனிமை என, தான் சந்தித்த துயரங்களில் இருந்து மீண்டு துணிச்சலுடன் எப்படி வெற்றியாளர் ஆகிறார் என்பதை தொகுத்து திரைப்படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் விஜய்.
தேர்ந்த நடிப்பால், கேரக்டரை முழு நேர்மையுடன் பிரதிபலிக்கிறார் கங்கனா. எம்ஜிஆரை நினைவுபடுத்தும் எம்.ஜெ.ஆர் எனும் கேரக்டரில் வரும் அரவிந்த் சுவாமி, துள்ளலிலும் சரி, தோற்றத்திலும் சரி, கச்சிதமாக பொருந்துகிறார். அர்ப்பணிப்பான ஒரு நடிகராக எம்ஜிஆர், மக்களை நேசிக்கும் எம்ஜிஆரின் பாங்கு, அரசியல் சூழ்ச்சிகளை எதிர்கொள்ளும்போதும் எம்ஜிஆரின் நாகரிகம் என அனைத்தையும் கவித்துவமான குரல்மொழி வழியாக அரவிந்த் சுவாமி கடத்துகிறார்.
தனது இறுக்கமான உடல்மொழி வழியாக எடுத்து கொண்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து கைத்தட்டல்களை அள்ளுகிறார் சமுத்திரக்கனி. கொஞ்ச நேரம் வந்தாலும் கண்ணில் நிற்கிறார் ரெஜினா கேசண்ட்ரா. கலைஞர் கருணாநிதியின் கதாபாத்திரத்தையும் குரலையும் நினைவுபடுத்தும் கருணா எனும் கேரக்டரில் நாசர், நெகிழவைக்கும் குணச்சித்திர நடிப்பை அவ்வப்போது வெளிப்படுத்தும் தம்பி ராமையா, சசி எனும் கேரக்டரில் வந்து போகும் பூர்ணா, ஜானகி அம்மாளாக மிகையில்லாத நடிப்பால் கவரும் மதுபாலா, நடிகர் சண்முகநாதன், எம்.ஆர்.ராதாவை நினைவுபடுத்தும் ராதாரவி மற்றும் நடிகை பாக்யஶ்ரீ ஆகியோர் இக்களத்திற்கேற்ற கச்சிதமான தேர்வுகள்.
ஆங்காங்கே வசன உச்சரிப்பில் சறுக்கல். ராஜீவ் காந்தியிடம் கங்கனா (ஜெயா) தமிழில் பஞ்ச் வசனம் பேசும்போது அவர் புரிந்துகொண்டு சிரிக்கிறார். ஆனால் மற்ற இடங்களில் அவருக்கு புரிய வைக்க சமுத்திரகனி ஆங்கிலம் பயன்படுத்துகிறார். ஜெயலலிதா என்றே எல்லா இடங்களிலும் அழைக்கப்பட்டிருக்கலாம். பெரியார், அண்ணா பெயர்களை பயன்படுத்தும் திராவிட கட்சிகளை பற்றிய இந்த வரலாற்றுப் படத்தில் ‘திராவிட’ என்கிற சொல் தவிர்க்கப்பட்டிருப்பது கேள்விக்குரியது.
ஒரே ஒரு இடத்தில், அதாவது பாரளுமன்றத்தில் மட்டும் ஜெயலலிதா என முழுப்பெயர் சொல்லப்படுகிறது. திராவிட மக்கள் என கங்கனா ஆங்கிலத்தில் உரையாடுகிறார். மற்ற இடங்களிலும் அவை தொடர்ந்திருக்கலாம். கடைசியில் ‘தமக’ ஆட்சி ஏன் கலைகிறது? என்பதற்கு காரணம் சொல்லப்படாதது சிக்கல். கருணாவாக நாசரை நடிக்க வைத்தது போல், எம்ஜிஆர் அரசியலில் இருக்கும்போது அவருக்கு நிகராக மெயின் ஸ்ட்ரீம் மார்க்கெட்டில் தவிர்க்கமுடியாமல் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கேரக்டரின் முக்கியத்துவத்தை காட்டியிருக்கலாம். குறைந்தபட்சம் முகமறிந்த ஒரு பிரபலத்தையாவது நடிக்க வைத்திருக்கலாம்.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், குட்டி குட்டி சூழலுக்கேற்ற பாடல்களும் கதையை கைப்பிடித்து அழைத்துச் செல்வது படத்திற்கு பெரும் பலம். அரசியல் காட்சிகளின் பரபரப்பை சிறப்பாக இசையின் மூலம் நமக்குள் கடத்துகிறார். விஷால் விட்டலின் கேமராவின் ஒவ்வொரு ஃப்ரேமும் பளீச். திரைப்பட படப்பிடிப்பு முதல் அரசியல் காட்சிகள் வரை ஒளிப்பதிவு, தலைவர்களை கண்முன் காட்டும் ஒப்பனை, கட்சிக்கொடிகள், சிலைகள், அந்த கால ஸ்டூடியோக்கள் என பீரியட் படத்துக்கு தேவையான செட் வொர்க்குகளை கண்முன் கொண்டுவரும் ஆர்ட் டைரக்ஷன், கச்சிதமான காஸ்ட்யூம்ஸ், வாள் வீச்சு சண்டைப்பயிற்சி, தலைவர்களை இமிட்டேட் செய்யும் குரல் பாவனைகள் என படத்தில் பணியாற்றியுள்ள ஒவ்வொரு துறையும் காட்டியிருக்கும் உழைப்புக்கு பாராட்டுக்கள்.
இதற்கு முன்பே நாம் பார்த்த, கேட்ட உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இக்கதை உருவாகியிருந்தாலும், அதை அஜயன் பாலாவின் ‘தலைவி’ நூலை அடிப்படையாகக் கொண்டு சுவாரஸ்யமாக கொண்டு சென்றதில் விஜயேந்திர பிரசாத்தின் எழுத்து திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. கார்க்கி தனது பளீர் சுளீர் வசனங்களால் கூடுதல் கூர்மை சேர்க்கிறார். குறிப்பாக எந்த வருடம் எந்த நிகழ்வுகள் நடந்தன என்று ஆய்வு செய்துள்ளது சிறப்பு. ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பு சம்பவம், அதே சமயம் அமெரிக்கா செல்லும் எம்ஜெஆர், அமெரிக்காவில் இருந்தே எம்ஜிஆர் ஆட்சியை பிடித்தது என வரலாற்று மெய்சிலிர்க்கும் அனுபவ நிகழ்வுகளை கச்சிதமாக தொகுத்துள்ளார்கள்.
எப்போதுமே தனது திரைப்படங்களை அழகியலோடு கலந்து சொல்லும் இயக்குநர் விஜய், இப்படத்திலும் அதற்கு முழு கேரண்ட்டி கொடுக்கிறார். முதல் ஷாட்டிலேயே படத்துக்குள் சென்றுவிடுவது, படம் முழுக்க கட்சி பேதமில்லாமல் ஆணாதிக்க அரசியலை எதிர்கொள்ளும் பெண்ணியக் கதையாக கொண்டுவந்ததில் என அனைத்துக்கும் சல்யூட்!
பால்யத்தில் குறும்பும் கொஞ்சலும், தன்னை சுற்றி நடக்கும் அரசியலுக்கு எதிரான கோபமும், அதன் மீதான வெறுப்பும், அதற்குள் சிக்கும்போதும் - நம்பினோர் கைவிடும்போது வலியும், துரோகம் செய்வோரை எதிர்கொள்ளும்போது பெண்களுக்கு உத்வேகம் தரும் கம்பீரமும், ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை வரும்போது அம்மா எனும் உணர்வுச்சொல்லாக மாறுவதும் என தலைவி நிச்சியமாக கங்கனாவின் ஒன் வுமன் ஷோ!