எபி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள திரைப்படம் தேன். தருண்குமார், அபர்நதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நேரடியாக தியேட்டர்களில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.
குறிஞ்சி மலை கிராமத்து வாசிகளான வேலுவும் ( தருண்குமார்) பூங்கொடியும் (அபர்நதியும்) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக பூங்கொடி கடுமையான வயிற்று வலியில் தவிக்க, அவரை மலையில் இருந்து ஊருக்கு அழைத்து வந்து சிகிச்சை பார்க்கிறார் வேலு. ஊரில் அதிகார வர்க்கத்திற்கு இடையில் தனது மனைவியை காக்க அவர் நடத்தும் போராட்டங்கள் என்ன.? அதில் வேலு வெற்றியடைந்தாரா என்பதே மீதிக்கதை.
குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும், தகராறு உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் நமக்கு பரிச்சியமான தருண்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். மனைவியின் நிலை கண்டு கலங்கும் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு வலுவாக இருக்கிறது.
ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமடைந்த அபர்நதிக்கு கனமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரம். இப்படியான தேர்வை தனது கரியரின் ஆரம்பத்திலேயே கொடுத்து ஆச்சர்யமளிக்கிறார் அபர்நதி.
சூப்பர் குட் லட்சுமணன், தேவராஜ் மற்றும் சில கிராமத்து மணிதர்கள் அந்த களத்தின் கதாபாத்திரங்களாக கச்சிதம் காட்டுகிறார்கள். குழந்தையாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு நிச்சியம் பாராட்டுதலுக்குரியது. க்ளைமாக்ஸ் காட்சிகளில் நம்மை கலங்க வைத்து விடுகிறார். சனத் பரத்வாஜின் பின்னணி இசை படத்தின் உணர்வுகளோடு ஒன்றி பயணிக்கிறது. பாடல்கள் இரண்டுமே மனதை வருடுகின்றன. மேலும் ஒளிப்பதிவாளர் சுகுமார் அந்த மலை கிராமத்தின் சூழலை அப்படியே நமக்குள் கொண்டு வருகிறார். தகராறு திரைப்படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இப்படியான களத்தில் சிறப்பாக இக்கதையை சொல்லியிருக்கிறார். சில வசனங்கள் உரக்க நிஜத்தை பேசுகிறது.
கார்ப்பரேட் அரசியல், அரசாங்க ஆபீஸ்களில் நடக்கும் விஷயங்கள் எல்லாமே பார்த்து பழகிய க்ளீஷேக்களாகவே இருப்பது திரைக்கதையை தொய்வடைய செய்து பலவீனப்படுத்துகிறது. குடும்பத்துக்கு வெளியில் நடக்கும் அரசியல் உள்ளதுதான் என்றாலும் அவற்றின் பாதிப்பின் வலியை தருண்குமாரின் குடும்பத்தினர் வாழ்க்கை வழியே காட்டியிருக்கலாம்.
நகரில் இருப்பவர்களை விடவும் இன்னும் கொஞ்சம் உயிர்களோடும் உயிர்ப்போடும் உறவாடிக் கொண்டிருக்கும் மலைக்கிராம மக்கள், நகரத்து மனிதர்கள் போல ‘அட்டாச்மெண்ட்டே’ இல்லாமல் காட்டப் படுகிறார்கள். தேனிப் பகுதிகளின் சாதாரண நிலப்பரப்புகளில் வாழும் மக்களைப் போன்றே மலைக்கிராம மக்களின் வட்டார வழக்கு மொழியும் இருக்குமா? என்று கேள்வி எழுகிறது.
எனினும் பொதுவான போராட்டங்களுக்கு மத்தியில் இல்லாமல், எளிய மனிதர்களின் உணர்வுகள் மூலம் அணுகப்பட்ட விதத்துக்காக ‘தேன்’ நம்மை திரும்பிப் பார்க்க வைக்கிறது.