ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் டெடி. ‘படம் எப்படி இருக்குனு தெரிஞ்சுக்க ஆர் யூ ரெடி?’
சயீஷாவுடன் கஜினிகாந்தில் நடித்த ஆர்யா எல்லாவற்றையும் மறக்கிறார் என்றால் இந்த ஆர்யா எதையுமே மறப்பதில்லை. அலட்டல் இல்லாத முகத்துடன் சீரியஸாகவும் ஜீனியஸாகவும் மிரட்டுகிறார். நவரச நாயகி என்றே பெயர் சூட்டலாம். அந்த அளவுக்கு வசீகரிக்கும் எக்ஸ்ப்ரஷன்களை கொடுக்கும் சயீஷா மருத்துவ மாஃபியாவால் பத்தாவது நிமிடத்தில் கோமா நிலைக்கு செல்கிறார். சயீஷாவின் எனர்ஜி டெடிக்குள் செல்கிறது. அதன் பின் சயீஷாவின் உடலை கண்டுபிடித்து டெடிக்குள் இருக்கும் சயீஷாவை ஆர்யா எப்படி மீட்கிறார் என்பதே மீதிக்கதை. ‘ஆமாம், உங்களுக்கு டெடியா மாத்துறதுக்கு வேற ஆளே கெடைக்கலயா பாஸ்?’ - சயீஷா ஆர்மி சார்பாக கண்டனங்கள்! :)
சாக்ஷி அகர்வால் கொடுத்த பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கான கதாபாத்திரம் இல்லை. ‘ஹீரோவாகி கூட நடிக்கிற ஹீரோயினை கரெக்ட் பண்ணிடு’, ‘உனக்கெல்லாம் எங்க வீட்டு மாப்பிள்ளைனு ஷோ வெச்சுதான் கல்யாணம் பண்ணனும்’ என அளவான கவுண்ட்டர்களில் லைக்ஸ் அள்ளுகிறார் சதீஷ். இரண்டாம் பாதியில் வரும் கருணாகரன் கதையின் விறுவிறுப்புக்கு உதவுகிறார்.
டெடி ரொம்ப க்யூட். குட்டியாக குடுகுடுவென ஓடுவதும், நடப்பதும், சேட்டைகள் செய்துவிட்டு திருதிருவென முழிப்பதும், என குழந்தைகளின் ஃபேவ்ரைட் பொம்மையாகவே மாறிவிட்டது. ஆர்யாவுக்குப் பிறகு படத்தின் இரண்டாவது முக்கியக் கதாபாத்திரமாக வலம் வருகிறாள் ‘நண்பி’ டெடி பியர். இயக்குநர் மகிழ் திருமேனி, அறிமுக நடிகராகவும் நேர்கொண்ட பார்வையும் தெளிவான பேச்சும் என வில்லனாகவும் மனதில் நிற்கிறார். அவரின் கதாபாத்திரத்துக்கு கனம் கூட்டியிருக்கலாம். ஆனால் திரைக்கதையில் அதற்கு ஸ்கோப் இல்லை.
யுவாவின் கேமரா மீண்டும் ஒரு மேன்லியான, அதே சமயம் டெடி பியருடன் கம்பெனி கொடுத்து பெர்ஃபார்ம் பண்ணும் மென்மையான ஆர்யாவையும் தத்ரூபமான டெடி பியரையும் அழகாகக் காட்டுகிறது. ஆக்ஷன் த்ரில்லர் டிராமவை அதன் விறுவிறுப்பு குறையாமல் வெட்டிக் கோர்த்திருக்கிறார் எடிட்டர் சிவநந்தீஸ்வரன். ஆர்யாவுக்கு நண்பி டெடி என்றால், நண்பன் ஃபைட் காட்சிகள் தான். ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் கச்சிதமாக கம்போஸ் பண்ணியிருக்கிறார் மாஸ்டர் ஷக்தி சரவணன். அனிருத் குரலில் நண்பியே, சித் ஸ்ரீராம் குரலில் என் இனிய தனிமையே என டி.இமானின் பாடல்கள் கதையோடு சேர்ந்து காதுக்கும் காட்சிக்கும் மியூசிக்கல் ட்ரீட்! பின்னணி இசையைப் பொறுத்தவரை இந்த படத்தில் வித்தியாசமும் காட்சிக்கு காட்சி வெரைட்டியும் காட்டியிருக்கிறார் டி.இ.
டெடியை அனைவரும் எளிமையாக கடந்துபோவதும், சர்வதேச வில்லன்களை டெடி மிக ஈஸியாக அட்டாக் செய்வதும், எம்பஸி அதிகாரிகளை சுத்தலில் விட்டு கோமாளிகளாக்குவதும் நம்ப முடியாததாக உள்ளது. உள்ளூரில் டெடி எந்த சிசிடிவியிலும் கண்டுபிடிக்கப் படாதது முதல், ஆர்யா வெளிநாட்டுக்கு சென்று சயீஷாவை கண்டுபிடிப்பது வரை படத்தில் பல லாஜிக் சறுக்கல்கள். யூகிக்கக் கூடிய முடிவுதான் என்பதால் இரண்டாம் பாதியின் நீளத்தையாவது குறைத்திருக்கலாம். கடைசி 10 நிமிட காதல் காட்சிகளில் கூட கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.!