கொனிடேலா பிக்சர்ஸ் தயாரிப்பில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. சுரேந்தர் ரெட்டி இந்த படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
மெட்ராஸ் மாகாணத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் மக்களுக்கு அதிகப்படியான வரிகள் விதிக்கிறது. மேலும் அப்பகுதியின் விளைபொருட்களை மக்களின் அனுமதியின்றி தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறது. இத்தகைய அநியாயங்களை ஆந்திராவின் குறுநில மன்னரான நரசிம்மா ரெட்டி தனது சகாக்களான வீரா ரெட்டி, ராஜ பாண்டி, அவுக்கு ராஜூ ஆகியோருடன் எப்படி எதிர்க்கிறார் என்பதே படத்தின் கதை.
நரசிம்மா அவதாரம் என மக்கள் சொல்வதற்கேற்ப சிவந்த கண், உறுமலுடன் ஆக்ரோசமாக பேசும் பஞ்ச் என ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் சுமர்ந்திருக்கிறார் சிரஞ்சீவி. குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் தெறி. படம் முழுக்க அவரது ராஜ்ஜியம் தான்.
சிரஞ்சீவியின் குரு கோசாயி வெங்கண்ணாவாக அமிதாப் பச்சன். ஆங்கிலேயர்களை எதிர்க்க வேகம் மட்டும் பத்தாது, விவேகமும் முக்கியம் என சிரஞ்சீவிக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி தனது முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார். நல்லவரா ? கெட்டவரா ? என்று கணிக்க முடியாத வேடத்தை திறம்பட கையாண்டு படத்தின் முக்கிய திருப்பங்களில் பெரிதும் பயன்பட்டிருக்கிறார் கிச்சா சுதீப்.
ராஜ பாண்டி என்ற தமிழ் மன்னனாக தெனாவட்டான உடல் மொழி, நக்கலான டயலாக் டெலிவரி என விஜய் சேதுபதி தோன்றும் காட்சிகளில் விசில் பறக்கிறது. நரசிம்மா ரெட்டியின் காதலியாக தமன்னா , மனைவியாக நயன்தாரா என இருவரும் நிறைவான நடிப்பை வழங்கி சென்டிமென்ட் காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.
சுதந்திர போராட்ட காலத்து இந்தியா, போர் காட்சிகள் என தத்ரூபமாக படம் பிடித்து படத்துக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. பின்னணி இசையின் மூலம் காட்சிகளுக்கு வலுவூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் அமித் திரிவேதி.
படத்தின் போர் காட்சிகள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் அரண்மனையில் வைத்து ஆங்கிலேயர்களுடன் நடைபெறும் சண்டைக்காட்சிகள் சிறப்பு. அதனைத் தொடர்ந்து தான் யார் என்று காட்டிக் கொள்ளாமல் நேரில் சென்று ஆங்கிலெயர்களிடம் சவால் காட்சியில் மாஸ் காட்டுகிறார் சிரஞ்சீவி. யாரை கேட்கிறாய் வரி என கட்டபொம்மன் ஸ்டைலில் அவர் பேசும் வசனங்கள் அனல் பறக்கிறது. விஜய் சேதுபதி தன் பங்கிற்கு மாஸ் காட்டுகிறார். இரண்டாம் பாதியில் ஆங்காங்கே வரும் ட்விஸ்டுகள் படத்தை சுவாரஸியப்படுத்துகின்றன.
முதல் பாதியில் கதைக்குள் செல்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும் சிரஞ்சிவியின் அதிகப்படியான ஹீரோயிஷம் படத்தின் நம்பகத்தன்மையை குறைக்கிறது. இருப்பினும் சுவாரஸியமான போர்காட்சிகளுடன் கூடிய சுதந்திர போராட்டத்தை சொன்ன விதத்தில் கவனம் ஈர்க்கிறது.