மனைவி, மகனை பிரிந்து சென்று நீண்ட வருடங்களுக்கு பிறகு திருநங்கையாக வீடு திரும்புகிறார் விஜய் சேதுபதி. வீட்டிற்கு வரும் காதலன் மரணிக்க, எதிர்பாராத விதமாக சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள் சமந்தாவும், அவரது கணவன் ஃபஹத் பாசிலும். சுனாமியின் பிடியில் இருந்து தன்னை காப்பாற்றிய சிலையை கடவுளாக வணங்குகிறார் மிஷ்கின். பின்னர் அந்த சிலையிடம் நோய்வாய்பட்டவர்களுக்கு வேண்டிக்கொள்ளும் அவரது மகன் விபத்து ஒன்றில் கடுமையான காயமடைகிறார்.
தன்னை தவறாக புரிந்து கொள்ளும் மகன் காயமடையும் போது காப்பாற்ற துடிக்கும் தாயாக ரம்யாகிருஷ்ணன். ஒரு சிறிய தவறிலிருந்து தப்பிக்க அடுத்தடுத்து தவறுகள் செய்யும் பதின்ம வயது இளைஞர்கள். ஒரே நாளில் இவர்களது பிரச்சனைகள் தீர்ந்ததா? முடிவு என்ன ஆனது? என்பதே இந்த படத்தின் கதை.
இந்த கதையை கேட்கும் போது குழப்பமாக இருக்கலாம். ஆனால் இந்த அனைத்துக் கதைகளையும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி சுவாரஸியப்படுத்துகிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இந்த படத்தின் ஆகச் சிறந்த பலம் அந்தந்த கதாப்பாத்திரத்துக்கான நடிகர்கள் தேர்வும், அதனை அந்த நடிகர்கள் கையாண்டிரு்ககும் விதமும் தான். படத்தை பார்த்த பிறகு வேறு நடிகர்களை அந்த இடத்தில் நாம் நிச்சயம் பொறுத்தி பார்க்க முடியாது.
திருநங்கையாக விஜய் சேதுபதி. மகனுடன் தன்னை பார்க்கும் போலீஸ் சந்தேகத்துடன் பிடித்துக்கொண்டு போக, அது தனது மகன் தான் என போலீஸாரிடம் மன்றாடும் காட்சிகளில் நம் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கிறார். எந்த வேடம் கொடுத்தாலும் அதை தன் அளவுக்கு சிறப்பாக செய்ய முடியாது என்பதை இந்த படம் மூலம் மற்றுமொருமுறை நிரூபித்திருக்கிறார் ஃபஹத்.
திருநங்கைகள் குறித்து இதுவரை கேலியாக மட்டுமே சித்தரிக்கப்படும் படங்களுக்கு மத்தியில் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை நேரடியாக முதன்மை கதாப்பாத்திரத்தின் மூலம் பேசியிருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது. திருநங்கைகள் மட்டுமல்ல. பெரும்பாலும் நாம் தமிழ்சினிமாவில் பார்க்க முடியாத முகங்கள் தான் இந்த படத்தின் கதை மாந்தர்கள்.
ரெட்ரோ ஸ்டைலில் வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் இந்த படத்தின் திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் பிஎஸ் வினோத் மற்றும் நீரவ்ஷா. பின்னணி இசைக்கான வேலையை பெரும்பாலான இடங்களில் இளையராஜா பாடல்களே எடுத்துக்கொள்ள, கிடைத்திருக்கும் கேப்பில் தனது உணர்வுப்பூர்வமான மற்றும் மிரட்டலான இசையால் காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.
மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் ஆகியோர் எழுதியுள்ள கூடுதல் திரைக்கதையை கோர்வையாக சுவாரஸியமான முடிச்சுகளால் ஒன்று சேர்த்திருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. ஃபஹத் பாசில் - சமந்தா மற்றும் பதின்மவயது இளைஞர்களுக்கிடையான உரையாடல்கள் நன்றாக சிரிப்பை வரவழைக்கின்றன.
ஊரே திருநங்கையான விஜய் சேதுபதியை கேலி செய்து பேசும் போது, அவரை தனது தந்தையாக குறைகளோடு அப்படியே மகன் ஏற்றுக்கொள்ளும் காட்சிகள் அழகியல். மேலும், ஒருபுறம் தன்னை காப்பாற்றும் சிலையை கடவுளாக பூஜிப்பதும், அதே சிலையால் காப்பாற்றப்படும் மற்றொருவர் அதனை வெறும் கல்லாக பார்ப்பதும் என நமது மத ரீதியான நம்பிக்கைகளை இந்த காட்சிகள் கேள்வி எழுப்புகிறது.
அது மட்டுமல்ல இந்த படம் மிகவும் சரியானதாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையின் மறுபக்கத்தை பொட்டில் அடித்தார் போல பேசியிருக்கிறது இந்த படம். ''இப்ப தப்பா இருக்குறதுலாம் 100 வருஷத்துக்கு பிறகு சரியா இருக்கும், ஆனா நாம அப்போ இருக்க மாட்டோம்'' ''ஷகிலா, சன்னிலியோன் போன்றவர்களுக்கும் மகன் குடும்பம்லாம் இருக்கும்ல'' என்பது போன்ற வசனங்கள் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.
ஆனாலும் சுவாரஸியத்துக்காக மட்டுமே பேசப்படும் சில இரட்டை அர்த்த வசனங்கள், எந்த பின்புலமும் இல்லாமல் குற்றங்களை வெகு இலகுவாக செய்யும் இளைஞர்கள், ஒரு மரணத்தை மறைக்க சமந்தா - ஃபஹத் எடுக்கும் முயற்சிகள் என படத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்வி எழுப்புகின்றன. மேலும் படத்தின் இரண்டாம் பாதியின் நீளம் சற்று குறைவாக இருந்திருக்கலாம்.
இருப்பினும் வாழ்வின் மீதான புரிதலை, எதிர்கால சிக்கல்களை எதிர்கொள்வதற்கு தேவையான நம்பிக்கையை வழங்கும் புதிய அனுபவமாக இந்த படம் இருக்கும்.