வால்மேட் எண்டர்டெயிமென்ட் தயாரிப்பில் வைபவ் ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் படம் சிக்ஸர். இந்த படத்தை சாச்சி எழுதி, இயக்கியிருக்கிறார்.
6 மணிக்கு மேல் கண் தெரியாத, மாலைக்கண் நோய் உடையவராக வைபவ். எதேச்சையாக ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ள, அரசியல்வாதியை பகைத்துக் கொள்கிறார். அதே போராட்டத்தின் விளைவாக பல்லக் லால்வானியின் மீது காதல் கொள்கிறார்.
மாலைக்கண் நோயுடன் அரசியல்வாதியை சமாளித்து தன் காதலை எப்படி கரம் பிடிக்கிறார் என்பதே இந்த படத்தின் கதை. மாலைக்கண் நோயுடன் பகலில் தைரியமாக அட்ராசிட்டி செய்வது , இரவில் பயந்து பதுங்குவது என தன் வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் வைபவ்.
ஹீரொயின் பல்லக் லால்வானி. லிப் சிங்க் பிரச்சனையிருந்தாலும் தனது நடிப்பால் ஓரளவுக்கு நியாயம் செய்ய முயற்சித்திருக்கிறார். கதாநாயகியின் அப்பாவாக ராதாரவி. சமீபத்தில் மிகவும் சீரியஸான வேடங்களில் மட்டுமே பார்த்து வந்த அவர் இந்த படத்தில் முழுக்க காமெடி அரிதாரம் பூசியிருக்கிறார்.
மது போதையில் வைபவ் பற்றி உண்மை தெரிந்து கோபத்தில் திட்டுவதும் போதை தெளிந்த பிறகு வைபவை மரியாதையாக நடத்துவது என படத்தின் காமெடி அத்தியாயங்களுக்கு பெரிதும் பயன்பட்டிருக்கிறார். வைபவின் நண்பனாக சதீஷ், படம் முழுக்க தனது ஒன் லைனர்களால் சிரிப்பை வரவழைக்கிறார்.
இரவில் கண் தெரியாத போது ரௌடியான விஜய் டிவி ராமரிடம் மாட்டிக்கொண்டு வைபவ் தப்பிக்க முயற்சிக்கும் இடம் சிறப்பு. மாற்றுத்திறனாளி வேடத்தை நேர்மறையாக சித்தரித்தற்கு நிச்சயம் பாராட்டலாம்.
பாடல்கள் , பின்னணி இசை என படத்துக்கு பெரும் பலம் சேர்க்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். காமெடி படம் என்றாலும் சில லாஜிக் குறைபாடுகள் படத்தின் சுவாரசயத்தை குறைகின்றன. போராட்டங்கள் மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர்களை காமெடியாக சித்தரிப்பதை தவிர்த்திருக்கலாம். சண்டைக்காட்சிகள் நம்பும்படி இல்லை. இருப்பினும் ஒரு காமெடி எண்டர்டெயினராக கவனம் ஈர்க்கிறது இந்த சிக்ஸர்.