அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி. பிள்ளை தயாரித்து சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்து வெளியாகியிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. பிச்சைக்காரன் என்ற மாபெரும் வெற்றி படத்துக்கு பிறகு இயக்குநர் சசி இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
பெற்றோர்கள் இல்லாமல் ஒருவருக்கொருவர் துணை என மிகுந்த பாசமாக வளர்கிறார்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது அக்காவான லிஜிமோல் ஜோஷ். பைக் ரேஸிங்கின் போது , போக்குவரத்து காவலரான சித்தார்த் தன்னை அசிங்கப்படுத்த அவரை பகைத்துக்கொள்கிறார் ஜி.வி.பிரகாஷ். பின்னர் சித்தார்த் தான் தனது அக்காவிற்கு பாத்திருக்கும் மாப்பிள்ளை என்று தெரியவருகிறது. பின்னர் அவர்கள் மூவருக்குள்ளும் நடக்கும் பாசப்போராட்டமே படத்தின் கதை.
போக்குவரத்து காவலராக விறைப்பும் முறைப்புமாக தன் வேடத்தை சரியாக செய்திருக்கிறார் சித்தார்த். தன் மனைவியின் பாசத்திற்காக, அவரது மச்சானுக்கு பரிந்து பேசும் இடங்களில் நடிப்பில் மிளிர்கிறார். தனது அக்காவிற்கு தன்னை அப்பாவாக பாவித்துக்கொண்டு அதீத அன்பு காட்டும் இடங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஒரு பைக் ரேஸராகவும் அந்த வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் அக்காவாக லிஜிமோல் ஜோஷ், தனது வேடம் தான் கதையின் ஆனி வேர் என்பதை உணர்ந்து உணர்ச்சிகரமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
வில்லனாக குறைவான நேரமே வருகிறார் மதுசூதனன். ஜி.வி.பிரகாஷின் காதலியாக காஷ்மீரா, அத்தையாக நக்கலைட்ஸ் தனம், சித்தார்த்தின் அண்ணனாக பிரேம், அம்மாவாக தீபா ராமானுஜம் உள்ளிட்டோர் படத்துக்கு நிறைவாக பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
நாங்க ஆம்பளைங்க டிரஸ் போடும்போது அதை அசிங்கமா நினைக்கிறது இல்ல. ஆனா நீங்க பொண்ணுங்க டிரஸ் போடும்போது மட்டும் அத அசிங்கமா நினைக்கிறீங்க என்ற வசனம் நன்றாக இருந்தது. அதனை படத்தின் முக்கிய திருப்பத்திற்கு பயன்படுத்தியிருப்பது சிறப்பு. மச்சான் என்ற உறவுக்குள்ள அப்பா தம்பி இந்த எல்லா உறவும் அடங்கும் என்று சித்தார்த் வசனம் பேசும் இடம் உணர்ச்சிகரமான மூமென்ட்.
தன் மனைவி கர்ப்பமாக இருப்பதை சித்தார்த் சொல்ல, அதற்கு நக்கலைட்ஸ் தனம் திணறும் இடம் நல்ல காமெடி. ஜி.வி.பிரகாஷை காஷ்மீரா காதலிப்பதற்கான காரணத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். ஒரு சில செயற்கையான காட்சிகளையும், லாஜிக் மீறல்களை குறைத்திருக்கலாம்.
அக்கா - தம்பி மற்றும் மாமன் - மச்சான் போன்ற உறவுகளின் முக்கியத்துவத்தை அழகான திரைக்கதையில் ஃபேமிலி ஆடியன்ஸ் ரசிக்கும்படி உரக்கசொல்லியிருக்கிறார் இயக்குநர் சசி.