மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி நடிப்பில் நேரடியாக OTT-யில் வெளியான திரைப்படம்தான் ''சைலன்ஸ்''. இந்த படத்தின் டைரக்டர் ஹேமந்த் மதுக்கர். கோபி சுதாகர் இசையமைத்துள்ளார். மேலும் இதில் ஷாலினி பாண்டே, மைக்கெல் மேட்ஸன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். People Media Factory மற்றும் Kona Film Corporation படத்தை தயாரித்துள்ளது.
படம் முழுவதுமே அமெரிக்காவில்தான் நடக்கிறது. 1983-ல் ஒரு வீட்டில் இரண்டு காதலர்கள் இறந்து போகிறார்கள். இதை தொடர்ந்து அந்த வீடு, ஒரு பேய் வீடாக பார்க்கப்படுகிறது. 46 வருடங்கள் கழித்து, அதே வீட்டில் மேலும் மர்மமாக கொலை நடக்கிறது. இதிலிருந்து தொடங்குகிறது திரைப்படம்.
மஹா (அஞ்சலி) - ஒரு க்ரைம் டிடக்டிவ். எடுத்த கேஸில் எல்லாம் வெற்றி கண்ட ஒருவருக்கு, விளக்கம் கிடைக்காமல் இருக்கிறது ஒரு கேஸ். அது என்னவென்றால், ஆண்டனி (மாதவன்) மற்றும் சாக்ஷி (அனுஷ்கா ஷெட்டி)-யின் கேஸ்தான். இவர்கள் இரண்டு பேரும் ஒரு காதல் பாடலில், காதலோடு அறிமுகமாகிறார்கள். சாக்ஷி வாய் பேச முடியாத பெண்ணாகவும், ஆண்டனி ஒரு இசைக்கலைஞராகவும் இருக்கிறார். இதையடுத்து, இருவரும் அந்த பேய் வில்லாவை அடைகிறார்கள். அந்த வில்லாவில் இருக்கும் பெயின்டிங்கிற்காக அந்த வீட்டுக்குள் இருவரும் நுழைய, தொடக்கத்திலேயே ஆண்டனி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். மேலும் சாக்ஷி அங்கிருக்கும் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
இந்த கேஸை கேப்டன் (மைக்கெல் மேட்சன்) கையில் எடுக்கிறார். அவருடன் இருக்கும் போலீஸ்வுமன்தான் மஹா. இப்படி போலீஸ் விசாரிக்க, சாக்ஷி அவர்களிடம் ஆண்டனி கொல்லப்பட்டதையும், அதற்கு முன்னர் அவர்களுக்குள் நடந்த காதல் கதையையும் விவரிக்கிறார். இதன் முடிவில், ஆண்டனியை கொலை செய்தவர்கள் யார், இதுவரை எந்த கேஸிலுமே தோற்றிராத மஹா, இந்த கேஸை எப்படி முடித்துவைத்தார், ஆண்டனி - சாக்ஷி இருவருக்குள்ளும் என்ன நடந்தது, உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை கொடுப்பதே இத்திரைப்படத்தின் க்ளைமாக்ஸ்.
சாக்ஷியாக அனுஷ்கா ஷெட்டி. நீண்ட நாட்களுக்கு பிறகு, அவரது ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் கொடுத்துள்ளார். ரொமான்ஸ் காட்சிகளாகட்டும், பயந்து நடங்கும் பரபரப்புகளாகட்டும், அம்மணி நடிப்பில் இன்னும் அருந்ததிதான் என்பதை நிருபிக்கிறார். அதே போல மாதவன், ஆண்டனி கதாபாத்திரத்துக்கு சரியான தேர்வு. மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே, கேப்டனாக வரும் மைக்கெல் மேட்சன் வரை, கதைக்கு தேவையான கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
இசையமைப்பாளர் கோபி சுதாகரின் பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தும், பெரிதும் ஈர்க்காமல் போனது வருத்தமே. ஆனால், அதை பின்னணி இசையில் தீர்த்து வைத்துவிட்டார் மனிதர். ஒரு த்ரில்லர் படத்திற்கே உரிய திகில் இசையை சரியாக கொடுத்திருக்கிறார். அதே போல ஒளிப்பதிவாளர் ஷனீல்-ன் கேமராவை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.
இந்த ஜானருக்கு தேவையான ஒளிப்பதிவை ஒருதுளி குறைவில்லாமல் கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன ஷாட்கள் கூட மிரட்சியை ஏற்படுத்தும் அளவில் ஒளிப்பதிவை அமைத்திருப்பது அழகு. இது போன்ற த்ரில்லர் படங்களுக்கு முக்கியமானதாக கருதப்படுவது எடிட்டிங். படத்தொகுப்பாளர் ப்ரவீன் புடி, ஃப்ளாஷ்பேக் காட்சிகளில், இவரின் எடிட்டிங் முக்கிய பங்கு வகிக்கிறது.
நல்ல பர்ஃபார்மன்ஸ் இருந்தும், கதையில் புதுமை மிஸ்ஸிங். நிறைய ஃப்ளாஷ்பேக் காட்சிகளும், திரைக்கதையில் பெரிய டிவிஸ்டுகள் இல்லாதது பெரிய மைனஸ். டீசரில் இருந்த சுவாரஸ்யம் படத்தில் இருந்திருந்தால், சைலன்ஸ் இன்னும் என்கேஜ் செய்திருக்கும்.