நந்த கிஷோரின் இயக்கத்தில் B.K.கங்காதரின் ஸ்ரீ ஜகத்குரு மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் செம திமிரு. படம் 'செம' என்று 'திமிராக' சொல்லலாமா? பார்ப்போம்.
மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் உடன் பிறந்த சகோதரரும், ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சகோதரியின் மகனுமான துருவா சர்ஜா இப்படத்தின் நாயகன். சிரஞ்சீவி சர்ஜாவுக்கு நினைவஞ்சலி செலுத்தி படம் தொடங்குகிறது.
நாயகன் துருவா சர்ஜா சிறுவயதிலேயே தந்தையை இழந்து விடுதியில் வளர, அவருடைய அம்மா ரவிஷங்கரை 2வதாக திருமணம் செய்ய, வளர்ந்த பின்னர் இது தெரியவர, தாயை மட்டும் தன்னுடன் வர சொல்லி கேட்கிறார். அவரது குடும்பத்துக்கு கஷ்டத்தை கொடுக்கிறார். துருவாவின் அம்மாவோ தனது 2வது கணவர் ரவிஷங்கரை தந்தையாக ஏற்று, குடும்பத்துடன் சேர்ந்து வாழச் சொல்கிறார். இதனிடையே விரக்தியில் பணத்துக்காக அடிதடி, ரவுடீசம் என வளர்கிறார் துருவா. தான் இருக்கும் ஏரியாவில் தவ்லத்தாக சுற்றும் துருவா, தன் தேவைக்காக ஏரியா மக்களை பாடாய் படுத்துகிறார்.
ஒரு கட்டத்தில் ரஷ்மிகாவுடன் காதலில் விழுகிறார். ஆனாலும் அவர் மாறவில்லை. பின்னர் தனது தாயின் குடும்பத்துடன் மீண்டும் எப்படி இணைகிறார்? தனது தந்தையை கொன்ற 'பெரிய கை' சம்பத் ராஜின் கையாளாக மாறி இறுதியில் அவரின் சாம்ராஜ்ஜியத்தை எப்படி தவிடுபொடியாக்குகிறார்? துருவாவை நல்லவராக மாற்றும் அவரது தங்கை செய்த 'அந்த ஒரு விஷயம் என்ன?' என்பதே மீதிக்கதை.
"ஊரையே எதிர்ப்பது பார்னாலதான்.. அந்த பாரையே எப்படி எதிர்க்குறது?", "புள்ளைங்கள பார்த்து கண்ணடிக்குறதே தப்பு.. நீ கன்னத்துலயே அடிக்குறியா?" என தமிழில் சாந்தி அஷோக்கின் பஞ்ச் வசனங்கள் பறக்கின்றன. குறிப்பாக "பசங்க ஒரு முறை கமிட் பண்ணிட்டா மண்ணுக்குள் போகும் வரை மாற மாட்டார்கள்" என்கிற வசனத்துக்கு தமிழ் தியேட்டர்களில் 10 பேர் இருந்தாலும் விசில் பறக்கிறது.
படத்தில் ரொமான்ஸ்க்கு ஸ்கோப் இல்லை. துருவா டான்ஸ், ஃபைட், ஆக்ஷனில் பட்டையை கிளப்புகிறார். தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நாயகி ரஷ்மிகாவுக்கு முதல் பாதியில் பெரிதாக வேலை இல்லை. அவரது அழகை வாயைப் பிளந்து பார்ப்பதற்குள் காட்சி மாறி விடுகிறது. பிற்பாதியில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் செம மாஸாக ஒரு ரொமான்ஸ் வசனம் பேசுகிறார் ரஷ்மிகா. துருவாவின் தாயும் ரவிஷங்கரும் கதாபாத்திரங்களின் வலிமை உணர்ந்து நடித்துள்ளனர்.
S.D.விஜய் மில்டனின் ஒளிப்பதிவு கலர்ஃபுல். பில்டப், ஆக்ஷன், சென்டிமென்ட், ரொமான்ஸ் என அனைத்துக்கும் இசையிலும் பின்னணி இசையிலும் படத்தோடு இணைந்தே இருக்கிறார் சந்தன் ஷெட்டி. சண்டைக்காட்சிகள் படத்தின் இரண்டாவது ஹீரோ. அதுவும் க்ளைமேக்ஸில் ஹீரோ துருவாவுடன் மோத, உலக லெவல் பாடி பில்டர் பிரபலங்களான Morgan Aste மற்றும் Kai Greene ஆகியோரை களமிறக்கி இருக்கிறார்கள்.
காதல், குடும்பம், வில்லன்கள் என எதிலும் இடைவேளைக்கு பின்னும் கூட கதை நகர நேரம் எடுக்கிறது. படத்தின் ஆணி வேராக இருப்பது அன்புக்காக ஏங்கும் துருவாவின் உணர்வுகள் தான். அதை இன்னும் வலுவான காட்சிகளின் மூலம் பதிவு செய்திருக்கலாம். மற்றபடி லாஜிக்கை மறந்து குடும்பங்களுடன் சென்று பார்க்க ஏற்ற மாஸ் பொழுதுபோக்கு திரைப்படம் தான் 'செம திமிரு'.