வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என அடுத்தடுத்து 2 ஹிட்களைக் கொடுத்த சிவகார்த்திகேயன்,சூரி, பொன்ராம், இமான் கூட்டணியில் இன்று வெளியாகியிருக்கும் படம் சீமராஜா. வெற்றிக்கூட்டணி என்பதாலும், சமந்தா,சிம்ரன்,நெப்போலியன்,லால் ஆகியோர் நடித்திருந்ததாலும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.பல்வேறு தடைகளைத் தாண்டி இன்று வெளியான 'சீமராஜா' ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.
புளியம்பட்டி, சிங்கம்பட்டி என்ற 2 கிராமங்களுக்கு இடையிலான மோதலும், பகையும் சிவகார்த்திகேயன் அவரது காதலி சமந்தா மற்றும் அங்குள்ள விவசாயிகளை வெகுவாகப் பாதிக்கிறது. ஒருகட்டத்தில் இந்த பகையானது விஸ்வரூபமெடுக்க, இதற்குள் சிக்கிக்கொள்ளும் சிவகார்த்திகேயன் எதிரிகளைச் சமாளித்து காதலியை கரம் பிடித்தாரா? என்பதே கதைக்களம்.
சிவகார்த்திகேயனின் நடிப்பு அவரது வசனம் ஆகியவை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. குறிப்பாக கடம்ப வேலனாக சிவகார்த்திகேயன் வரும் காட்சிகள் படக்குழுவின் மொத்த உழைப்பையும் உறக்கச்சொல்லும் விதமாக அமைந்துள்ளது. சூரியின் ஒன்லைன் வசனங்களும், அவரது காமெடியும் நன்றாக உள்ளது.அதிலும் நான் செல்வி(சமந்தா) ரூமுக்கு போறேன் யாரையும் வர விடாத என சிவா சொல்ல, பதிலுக்கு நாக சைதன்யாவே வந்தாலும் விட மாட்டேன் என சூரி சொல்லும் போது தியேட்டர்களில் சிரிப்பு சத்தம் பலமாகக் கேட்கிறது.
படத்தில் சிலம்பம் ஆசிரியராக சமந்தா நன்றாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகள்,பாடல் காட்சிகளில் சிவாவுடன் இயல்பாக சமந்தா பொருந்திப்போகிறார்.கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு ரசிகர்களுக்கு நிச்சயம் சர்ப்ரைஸ் ஆக இருக்கும். அதேபோல எதிர்மறைக் கதாபாத்திரத்தில் சிம்ரன் நன்றாக நடித்திருக்கிறார்.அனுபவ நடிகர்கள் என்பதை நெப்போலியன்,லால் இருவரும் தங்களது நடிப்பின் மூலம் நிரூபித்துள்ளனர்.இதேபோல சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷும் தனது கதாபாத்திரத்தினை செவ்வனே செய்துள்ளார்.
படத்தில் வரும் போர்க்களக்காட்சிகள் இயல்பாகவும் அதே சமயத்தில் தத்ரூபமாகவும் உள்ளன. இதற்காக படத்தின் விஎப்எக்ஸ்(VFX) குழுவினரை நாம் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.இதேபோல நடப்பு நிகழ்வுகளை படம் முழுவதும் ஆங்காங்கே தூவிய இயக்குநர் பொன்ராமும் பாராட்டப்பட வேண்டியவரே.குறிப்பாக கலை இயக்குநர் முத்துராஜ் படத்தின் முதுகெலும்பாகவே அமைந்துள்ளார். வரலாற்றுப்பின்னணி, கிராமம் என சீமராஜாவுக்கு கலர்புல்லான ஒளிப்பதிவை பாலசுப்ரமணியம் அளித்திருக்கிறார்.டி.இமானின் பின்னணி இசையும்,காஸ்ட்யூம் டிசைனரின் கலர்புல் ஆடைகளும் படத்திற்கு திருவிழா போல கொண்டாட வைக்கிறது.
எல்லாமே பாசிடிவ்வா சொல்றீங்களே படத்துல எந்த குறையும் இல்லையா? என கேட்டால், கண்டிப்பாக இருக்கிறது. படத்தின் நீளம் சற்றே அதிகம் அதேபோல ஆங்காங்கே சில கிளிஷே காட்சிகளுக்கு கத்திரி போட்டிருந்தால் 'சீமராஜா' இன்னும் விறுவிறுப்பாக இருந்திருப்பார்.