யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ், அருண் விஜய் , ஷ்ரத்தா ஸ்கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சாஹோ. இந்த படத்தை சுஜித் எழுதி இயக்கியுள்ளார்.
சர்வதேச அளவில் மிகப்பெரிய மாஃபியா கும்பலின் தலைவர் ஜாக்கி ஷெராஃப். ராய் குரூப்ஸ் என்ற பெயரில் ஒரு பெரும் வணிக சாம்ராஜ்ரத்தை நடத்தி வருகிறார். ஒரு சதியின் காரணமாக அவர் இடத்தை யார் பிடிக்கிறார்கள் என்ற அதிகாரப் போட்டியே படத்தின் கதை.
படத்தின் ஆகப் பெரும் பலம் பிரபாஸ். அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகளில் தனது அநாயசமான உடல் மொழியால் அசரடிக்கிறார். தான் யார் வெளிப்படுத்தக்கூடாத சந்தேகப்பட வைக்கக்கூடிய தோற்றத்தை சரியாக கையாண்டிருக்கிறார்.
ஹீரோயினாக ஷ்ரத்தா கபூர் ரொமான்ஸ் மட்டுமல்லாது ஆக்சன் காட்சிகளிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார். அருண் விஜய் படத்தின் முக்கியத் திருப்பங்களில் நிறைவான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராஃப், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் தங்கள் வேடங்களுக்கு நியாயம் செய்திருக்கின்றனர்.
ஜிப்ரான் தனது பின்னணி இசையால் கூடுதல் பரப்பு சேர்த்திருக்கிறார். மதியின் கேமரா கோணங்கல் ஆக்சன் காட்சிகளை துல்லியமாக பதிவு செய்திருக்கிறது.
ஆக்சன் காட்சிகளின் வடிவமைப்பும் அதனை படமாக்கியவிதமும் மிகச் சிறப்பாக இருந்தது. விஎஃப்க்ஸ் காட்சிகளும் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. முதல் பாதியில் இடைவேளைக்கு முன்பு வந்த ட்விஸ்ட்டும் அதனை படமாக்கியவிதமும் சிறப்பாக இருந்தது.
படத்தில் ஏகப்பட்ட கிளைக்கதைகள் கூறப்படுவதால் அதனை புரிந்து கொள்ள சற்று சிரமமாக இருக்கிறது. மேலும் இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்டுகள் ஒரு கட்டத்துக்கு மேல் சுவாரசியத்தை குறைக்கிறது. இருப்பினும் ஹாலிவுட் தரத்திலான ஆக்சன் காட்சிகளும் ஆங்காங்கே வரும் சுவாரசியமான திருப்பங்களும் படத்தின் கவனம் ஈர்க்கின்றன.