தமிழக கடைக்கோடி கிராமமான புதூர் என்ற ஊரில் உள்ள பள்ளி ஒன்றில் புதிய தலைமை ஆசிரியராக நுழைகிறார் கீதா ராணியான ஜோதிகா. அதுவரை ஆசிரியர் , மாணவர்.என யாரிடமும் ஒழுங்கில்லை. அதனை எடுத்த எடுப்பிலேயே மாற்ற முயல்கிறார்.
அரசு பள்ளி தரமானதாகி விட்டால் தமது பள்ளியின் மாணவர் சேர்க்கை பாதிக்கப்படுமோ என பயம் கொள்கிறார் தனியார் பள்ளி முதலாளி. அதனால் ஜோதிகாவை எதிர்க்கிறார் அவர். இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார் என்பதே படத்தின் கதை.
பள்ளியின் முன்பு சிகரெட் விற்கும் கடைக்காரரை ஜோதிகா தட்டிக்கேட்பதை பார்க்கும் சிறுவனுக்கு ஆக்ரோசமான காளியாகவும், அதே சிறுவன் கீழே விழுந்தவுடன் தூக்கிவிடும் போது சிறுவனுக்கு அவர் ஏஞ்சலாகவும் தெரிகிறார்.அந்த ஒரு காட்சியிலேயே ஜோதிகாவின் கேரக்டரை நமக்கு புரிய வைக்கிறார் இயக்குநர்.
அரசு பள்ளி மாணவர்களை அரசியல் கட்சி மீட்டிங்கிற்கு அழைத்து செல்லுதல் போன்ற தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடக்கும் பிரச்சனைகளை தைரியமாக பேசியிருக்கிறது இந்த படம். மேலும் வெறும் பிரச்சனைகளை பற்றி மட்டுமே சொல்லாமல் பாடம் நடத்தும் முறை , மாணவர்களை கையாளும் முறை உள்ளிட்ட தீர்வுகளையும் சொல்லியிருப்பது சிறப்பு.
பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் என அனைவரும் சரியான தேர்வு. பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும் பூர்ணிமா பாக்யராஜ், இறுதி காட்சியில் கண் கலங்க வைக்கிறார். சத்யன் பேசும் டைமிங் டயலாக்குகள் சிரிப்பை வரவழைக்கின்றன. "ஆசிரியர்கள் சரியாக வேலை செஞ்சா போதும் போலிஸிற்கு வேலை குறைந்திடும்" போன்ற டயலாக்குகள் கவனம் ஈர்க்கின்றன.
படத்தில் வீரியமிக்க காட்சிகளுக்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். ஒரே போனில் பள்ளியையே புதிதாக மாற்றிக் காட்டுவது, பிரச்சனைகளையெல்லாம் வெகு சுலபமாக சமாளிப்பது போன்ற குறைகள் படத்தில் இருக்கின்றன. இருப்பினும் அரசு பள்ளிகளில் நிகழும் பிரச்சனைகளை சரியான தருணத்தில் பேசி கவனம் ஈர்க்கிறாள் இந்த 'ராட்சஷி'.