இயக்குநர் அமுதவாணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கோட்டா'. ஜீ தமிழின் ஜூனியர் சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த பவாஸ், நிஹாரிகா, 'நக்கலைட்ஸ்' செல்லா, சஜி சபர்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆலன் செபாஸ்டியன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை Team A Ventures நிறுவனம் வழங்கியுள்ளது.
தமிழக - கேரளா எல்லையோரம் அமைந்திருக்கும் சிறிய மலைக்கிராமத்தில் மனைவி, மகன், மகள் என வாழ்ந்து வருகிறார் செல்லா. கடுமையான கடன் சுமைகள் இருந்தாலும், அடுத்த தலைமுறை பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற கனவொன்றையே கண்ணில் வைத்து உறங்குகிறார் தினமும். நிலைமை இப்படியிருக்க திடீரென, ஒரு கட்டத்தில் அவர் இறந்து போகிறார். அப்பா இல்லாத அந்த குடும்பத்தின் நிலை என்ன ஆனது..? செல்லா கண்ட கனவு நிறைவேறியதா..? என்பதே 'கோட்டா' படத்தின் மீதிக்கதை.
ஏழ்மையிலிருக்கும் குடும்பத்தை நிலைநிறுத்தும் சாதாரண குடும்பத் தலைவராக செல்லா, இக்கதைக்கு சரியான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். ஆங்காங்கே அவரிடம் இருந்து வெளிப்படும் ஆற்றாமையும் சின்ன சின்ன சந்தோஷங்களும் ரசிக்க வைக்கிறது. சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்தால், நிச்சயம் குணச்சித்திர நடிகர்களுக்கான இடத்தில் நம்பிக்கையளிப்பார் என தோன்றுகிறது. அவரது மனைவியாக நடித்துள்ள சஜி அபர்னாவும் அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
அண்ணன் - தங்கைகளாக வந்து முடிந்தளவு ஸ்கோர் செய்கிறார்கள், ஜீ தமிழ் பிரபலங்களான பவாஸும், நிஹாரிகாவும். எமோஷனல் காட்சிகளில் கூட, இந்த குட்டீஸின் நடிப்பு நம்மை கரைக்க செய்வது அழகு. சில இடங்களில் நடிகர்களின் வசன உச்சரிப்பும், ரியாக்ஷன்களும் செயற்கைத்தனம் காட்டுவது மட்டுமே குறையாக தெரிகிறது.
அமுதவாணன் மற்றும் கவாஸ்கர் ராஜுவின் ஒளிப்பதிவு, அக்கிராமத்தின் குளிர்ச்சியை சரிவர கடத்துகிறது. ஆலன் செபாஸ்டியனின் இசை காட்சிகளுக்கு ஏற்ப ரம்மியமாக ஒலிக்கிறது. பாடல்களிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். வினோத் ஶ்ரீதரின் எடிட்டிங் படத்தின் இயற்கையான போக்கை கெடுக்காமல் நிதானமாகவே பயணிக்க உதவுகிறது.
ஒரு சமூகத்தின் கனவை முன்னிறுத்தி படம் ஆரம்பமானாலும், பெரிதான பிரச்சார வாசனைகளை தவிர்த்து, ஒரு குடும்பத்து மனிதர்களின் உணர்வுகளையே முதன்மைப்படுத்தி இக்கதையை எழுதியிருக்கும் இயக்குநர் அமுதவாணனுக்கு பாராட்டுக்கள். கலைப்படம் என்கிற ரீதியில் அவர்களின் சோகத்தை தாண்டி, அந்த மனிதர்களுக்குள் இருக்கும் சின்னச்சின்ன சந்தோஷங்களையும், குறும்புகளையும் காட்சிப்படுத்த முயற்சித்திருக்கிறார் இயக்குநர். அதுவே படத்தை தொய்வில்லாமல் நகர்த்த உதவி செய்கிறது.
ஒரு ஜோடி கிழிந்த ஷூக்களை கொண்டு கதையை நகர்த்தியதில், ஈரான் திரைப்படமான 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' படத்தை ஞாபகப்படுத்துகிறது படக்குழு. கிரிக்கெட், ஃபுட்பால் போன்ற விளையாட்டுக்களைத் தாண்டி ஜிம்னாஸ்டிக் போன்ற போட்டிகளுக்கும் நம்மிடம் திறமையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதற்கான பயிற்சியும், வழிமுறைகளும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சிக்கிறது 'கோட்டா'. ஆனால் ஒரு சில இடங்களில் பட்ஜெட் சிக்கல்கள் வெளிப்படையாக தெரிவதும், வலிந்து திணிக்கப்பட்ட வசனங்களால் க்ளைமாஸ் நிறைவடைவதும் லேசான நெருடலை தருகிறது.