உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சைக்கோ. டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை மிஷ்கின் எழுதி இயக்கியுள்ளார்.
பார்வை மாற்றுத்திறனாளியான உதயநிதிக்கு ஆர்ஜே, அதிதி ராவ் மீது தீவிர காதல். அவர் தன் காதலை நிரூபிக்கும் தருணத்தில், அதிதி கொடூரமான சைக்கோவால் கடத்தப்பட உதயநிதி அவரை எப்படி மீட்டார் என்பதே படத்தின் கதை.
கௌதம் என்ற பார்வை மாற்றுத்திறனாளியாக உதயநிதி. அனைத்து உணர்ச்சிகளையும் இயல்பாக வெளிப்படுத்தி தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை நிரூபித்திருக்கிறார். முன்னாள் காவல்துறை அதிகாரியாக உதயநிதிக்கு துணையாக படமுழுக்க வரும் வேடம் நித்யா மேனனிற்கு. தன் இயலாமைகளை கோபத்தில் மறைக்கும் இடங்களில் செம.
சைக்கோவாக ராஜ்குமார், ஆக்ரோஷம், கோபம் என பார்வையிலேயே மிரட்டுகிறார். உதயநிதியின் காதலியாக அதிதி ராவ் , சிங்கம் புலி, போலீஸாக இயக்குநர் ராம், பவா செல்லத்துரை உள்ளிட்டோர் தங்கள் பங்கை நிறைவாக செய்துள்ளனர். குறைவான வசனங்கள் , நடிகர்களின் அளவான நடிப்பு என நகரும் படத்தில் பயத்தையும் டென்ஷனையும் தன் பின்னணி இசையால் பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார் இளையராஜா.
வழக்கமான மிஷ்கின் படங்களைப் போலவே இந்த படத்திலும் ஒளிப்பதிவு மிக முக்கிய பங்காற்றியிருக்கிறது ஒளிப்பதிவு. வித்தியாசமான கேமரா கோணங்கள், ஒளி அமைப்பு என கதை சொல்லும் கருவியாக பயன்பட்டிருக்கிறது தன்வீர் மிர்ரின் கேமரா.
நீங்க முடியுமா பாடலும் அது படமாக்கப்பட்டிருந்த விதமும் நன்றாக இருந்தது. தான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி என்னால் என்ன செய்ய முடியும் என உதயநிதி வருந்தும் இடமும் அதற்கு நித்யா மேனன் சொல்லும் இடமும் செம. இப்படி படமுழுக்க உணர்வுப்பூர்வமான காட்சிகளால் திரைக்கதை அமைத்திருக்கிறார் மிஷ்கின்.
நீண்ட வருடங்களாக போலீஸிடம் சிக்காமல் சைக்கோ கொலை செய்து வருவதை முடிந்த வரை நம்பகத்தன்மையுடன் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் ஹீரோவின் வருகைக்காக சைக்கோ காத்திருப்பதற்கு சரியான காரணங்கள் சொல்லப்படவில்லை.
படத்தில் சில கொலை சம்பங்கள் மனதை உறைய வைக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்துக்கு சென்சாரில் A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் பலவீனமான இதயம் கொண்டோர் இந்த படத்தை தவிர்த்தல் நலம்.