2.0 என்ற பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பேட்ட. ஆனால் 2.0 சயின்ஸ் பிக்சன் படம் என்பதால் ரஜினிக்கான மாஸ் எலிமனட்ஸ் சற்று குறைவாகவே இருக்கும்.
ஆனால் முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டிருக்கும் படம் பேட்ட. படையப்பாவில் ரம்யாகிருஷ்ணன் ரஜினியை பார்த்து, வயசானாலும், உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல என்பார்.
அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்து விட்டன. இன்னமும் ஆக்சன், சென்டிமென்ட், காதல், காமெடி என அனைத்து ஏரியாலும் முழு எனர்ஜியுடன் மனிதர் ரவுண்டு கட்டி அடிக்கிறார். படம் முழுக்க ரஜினியிசம். படத்தின் முதுகெலும்பே அவர் தான் என்பதால் கடினமாக உழைத்திருக்கிறார். அந்த உழைப்பு காட்சிகளில் தெரிகிறது.
தன் நாடி நரம்பு, ரத்தம், சதை என ரஜினி வெறி ஊறி போனவரால் மட்டுமே இப்படி ஒரு படம் எடுக்க முடியும். அந்த வகையில் ரஜினியின் பிளஸ் என்ன ? ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார். குறிப்பாக ரஜினி வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்கிறது.
படத்தில் விஜய் சேதுபதி, நவாஸூதின் சித்திகி , சசிக்குமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா என தமிழ் சினிமாவின் அத்தனை பிரபல நடிகர்கள் இருந்தாலும் இது முழுக்க முழுக்க ரஜினி படம் தான்.
அப்பேர் பட்ட ரஜினிக்கு நிகரான வில்லன் வேண்டாமா ? அதான் விஜய்சேதுபதி இருக்கிறாரே. விஜய் சேதுபதி சிறப்பாக நடித்திருக்கிறார் என்பது எஸ்.பி.பிக்கு நன்றாக பாடத் தெரியும் என்பது போல. ஏற்கனவே நெகட்டிவ் ரோலில் விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் முழுநேர வில்லனாக மிரட்டியிருக்கிறார்.
அடுத்த பிளஸ் அனிருத். பாடல்கள் வெளியாகி ஏற்கனவே அதிரி புதிரி ஹிட். படத்தின் தன்மையை புரிந்து கொண்டு பின்னணி இசையிலும் அதகளம் புரிந்திருக்கிறார். திரையில் ரஜினி தோன்றும் ஓவ்வொரு காட்சியிலும் மிரட்டலான இசையை வழங்கியிருக்கிறார்.
மற்றொரு பிளஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கான பில்டப் ஷாட், பாடல்காட்சிகள், கலர் புல்லான பிளாஸ்பேக் காட்சிகள் என ஓவர் டைம் உழைத்திருக்கிறார். மதுரை, வட இந்தியா போன்ற இடங்களை தன் நேர்த்தியான ஒளிப்பதிவால் கண் முன் நிறுத்தியிருக்கிறா
மேலும், சண்டைக் காட்சிகளும் அது இடம் பெறும் இடமும் படத்துக்கான கூடுதல் பலமாக இருக்கிறது.
முதலில் சொன்னது போல விஜய் சேதுபதி, சசிக்குமார், சிம்ரன், திரிஷா போன்ற தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள். ஆனால் ரஜினி படம் என்பதால் யாருக்கும் பெரிய ஸ்கிரீன் ஸ்பேஸ் இல்லை. மேலும் என்ன தான் கமர்ஷியல் படமென்றாலும் சில லாஜிக் மீறல்கள்.
ஆனால் மீண்டும் பழைய ஸ்டைலான ரஜினிகாந்த் பரபரப்பான திரைக்கதை, ஆங்காங்கே டிவிஸ்ட்கள் என படத்தின் ஒட்டுமொத்த குறைகளையும் மறக்கடிக்கிறது.