ஈகிள் ஐ புரொடக்சன் சார்பாக A .குமார் தயாரிப்பில் தமன்னா, யோகி பாபு, காளி வெங்கட், முனீஷ்காந்த் நடிப்பில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பெட்ரோமாக்ஸ்.
தமன்னா மற்றும் அவரின் குடும்பம் பேயாக மாறி தொலைந்து போன தனது அம்மாவை பார்ப்பதற்காக அவர்களுடைய வீட்டில்காத்திருக்கின்றனர். தமன்னாவுடைய அண்ணனான பிரேம் அந்த வீட்டை விற்க முயற்சி செய்கிறார்.
அது பேய் வீடு என்பதால் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. பிரேம் அந்த வீட்டில் பேய் இல்லை என்பதை நிரூபிக்க அந்த வீட்டிற்கு முனிஷ்காந்த் தலைமையில் காளி வெங்கட், சத்யன் மற்றும் டி.ஸ்.கே போன்றவர்களை அனுப்புகிறார். இந்த நான்கு பேரிடமும் சிக்கிக்கொண்டு பேய் படும் அவஸ்த்தையே இந்த பெட்ரோமாக்ஸ்.
தமன்னா இந்த படத்தில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய கதாப்பாத்திரத்திற்கு என்ன தேவை என்பதை புரிந்து சிறப்பாக செய்துள்ளார்.
ஒரே ஒரு வீட்டை மட்டுமே வைத்து நீண்ட நேரம் காட்சிகள் அமைப்பது என்பது ஒரு கடினமான வேலைதான். இருந்தாலும், சலிப்பு தட்டாமல் நல்ல பிரேமிங் சென்சுடன் எடுத்திருப்பது இயக்குனரையும் ஒளிப்பதிவாளரையும் பாராட்ட வைக்கிறது.
ஜிப்ரான் பட்டய கிளப்பி இருக்கிறார் என்று சொல்லலாம். கண்டிப்பாக இப்படி ஒரு பின்னணி இசை இல்லை என்றால் இந்த படத்தில் உள்ள திகில் சுவாரஸ்யம் குறைந்து விடும்.
முனிஷ்காந்த நடிப்பில் கலக்கியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் தான் இப்படத்தின் மையப்புள்ளியாக செயல்படுகிறது. காளி வெங்கட், டிஸ்கே, சத்யன் உள்ளிட்டோர் அவரவர் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கின்றனர் .
முதல் பாதியில் நிறைய பிளாஷ்பேக்குகள் வருவதால் அவை பார்ப்பவர்களை சலிப்படைய செய்கிறது. மேலும் தானாக கதவு திறப்பது , ஜன்னல் சாத்திக்கொள்வது போன்ற காட்சிகள் பல பேய் படங்களில் வந்துள்ளதால் இதிலும் அத்தகைய காட்சிகள் இருப்பது சற்று அலுப்பு தட்டி விடுகிறது. அதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். காமெடியுடன் வரும் பேய் கதைகள் வந்துகொண்டே தான் இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று என்று விட்டு விடாமல் தியேட்டர் சென்று பார்த்து ரசிக்கலாம்.