கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பெண்குயின்'. ஈஸ்வர் கார்த்திக் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
கீர்த்தி சுரேஷின் மகன் உட்பட குழந்தைகள் தொடர்ந்து காணாமல் போகின்றனர். குழந்தைக் கடத்தலின் பின்னணியில் உள்ளது யார்? குழந்தைகள் மீட்கப்பட்டனரா என்ற கேள்விகளுக்கு திரில்லர் பாணியில் பதில் சொல்லியிருக்கும் படமே 'பெண்குயின்'.
ரிதம் என்ற வேடத்தில் கீர்த்தி சுரேஷ். வருடங்கள் கடந்தாலும் தனது குழந்தை மீண்டு வருவான் என்ற நம்பிக்கையில் தவிப்பதாகட்டும், தனது குழந்தையை எப்பாடுபட்டாலும் மீட்க துணிவதாகட்டும் ஒட்டுமொத்த படத்தையும் தனது தேர்ந்த நடிப்பால் தோளில் சுமந்திருக்கிறார் கீர்த்தி.
மற்ற கதாபாத்திரங்களான லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ், மாஸ்டர் அத்வைத் உள்ளிட்டோர் தங்கள் வேடங்களுக்கு உரிய நியாயம் செய்திருக்கின்றனர். குறிப்பாக மருத்துவராக வரும் மதி உச்சகட்டகாட்சி ஒன்றில் மிரட்டலான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
முதல் பாதி வரை காட்சிகளில் பெரிய அழுத்தம் இல்லாமலேயே படம் நகர்கிறது. இரண்டாம் பாதிக்கு மேல் படத்தில் ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்கள் படத்தை சுவாரஸியப்படுத்துகின்றன. குறிப்பாக கீர்த்தி ஏழு மாத கர்ப்பத்துடன் குழந்தைக் கடத்தல் பிரச்சனையை எதிர்கொள்வது பதற்றத்தை உருவாக்குகிறது,
எமோஷனல் மற்றும் த்ரில்லர் காட்சிகளில் தனது பின்னணி இசையின் மூலம் மேலும் அழுத்தம் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன். மலைபிரதேசத்தை அழகாகவும், படத்துக்கு தேவையான மர்மமான தன்மையையும் திறம்பட காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி.
பெண்களுக்கு இருக்கும் வலிமை அசாத்தியமானது என்பதை கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் மூலம் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். இருப்பினும் மற்ற கதாபாத்திரங்களையும் சற்று வலுவானதாக அமைத்திருக்கலாம்.
பலவருடங்களாக தொடர் குழந்தை கடத்தல் நிகழ்வுகள் நடைபெறுவதாக காட்டப்படுகிறது. ஆனால் படத்தில் போலீஸ் சற்று மேம்போக்காகவே நடந்து கொள்வதாக காட்டப்பட்டிருப்பது நம்பும்படியாக இல்லை. இருப்பினும் ஆங்காங்கே சுவாரஸியமான ட்விஸ்டுகளுடன் ஒரு சைக்கோ திரில்லர் படமாக கவனம் ஈர்க்கிறது இந்த பெண்குயின்.