சந்தானம் நடிப்பில் ஏ-1 திரைப்படத்தை இயக்கியவர் ஜான்சன்.கே. அப்படம் காமெடியில் பட்டையைக் கிளப்பியதை அடுத்து இதே காம்போ இப்போது கே.குமாரின் தயாரிப்பில் இந்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் இணைந்துள்ளது. படம் எப்படி இருக்கு?
வடசென்னை பின்னணியில் நடக்கும் இந்த கதையில் வியாசர்பாடி, புளியந்தோப்பு, பாரிஸ் உள்ளிட்ட ஏரியாக்களில் கானா பாட்டுகள் பாடும் ஹீரோதான் 'பாரிஸ் ஜெயராஜ்' (சந்தானம்). கானா பாடலுடன் மாநகர பேருந்தில் அறிமுகமாகும் சந்தானம் தர லோக்கலாக சஷ்டிகா ராஜேந்திரனை கரெக்ட் செய்கிறார். ஆனால் சஷ்டிகாவின் தந்தை சிவாஜியின் சூழ்ச்சியால் அந்த காதல் 'புட்டுக் கொள்ள' அடுத்து அறிமுகமாகும் அனைனா சோதி சந்தானத்தை கல்லூரி விழாவில் பாட அழைக்கிறார். அனைனாவின் 'சூப்பர் குட்' மோட்டிவேஷனால் மூடு மாறி, லவ் மோடுக்கு செல்லும் சந்தானத்துக்கு அனைனாவின் காதல் தெரிய வருகிறது. அந்த காதலுக்கு சந்தானத்தின் தந்தை ‘வக்கீல்’ பிருதிவ் ராஜ் வேட்டு வைக்க சந்தானத்தின் ரூட் க்ளியராகிறது.
அதன் பிறகு அறிமுகமாகும் மொட்ட ராஜேந்திரன் மற்றும் பிருதிவ் ராஜினால் இடைவேளையில் உண்டாகும் மிகப் பெரிய 'கலாச்சார ட்விஸ்ட்' ஆகியவற்றால் தன் காதலில் ஏற்படும் பிரச்சனைகளை, கானா பாடல்களுக்கு நடுவே பயணிக்கும் கதையில் அமர்ந்து எதிர்கொள்ளும் சந்தானம், அனைனாவை அடைகிறாரா என்பதே இந்த பாரிஸ் ஜெயராஜின் மீதிக் கதை. கதைதான் வீரியமின்றி இருக்கிறதே தவிர, திரைக்கதையில் சாதுரியம் காட்டியிருக்கிறார்கள்.
'எந்த ஊருக்கா?.. மாங்கா ஊறுகா?', 'நாராயணா எனக்கு எதுக்குப்பா பேக்ரவுண்ட மியூசிக்?', 'இப்ப நான் இருக்குறது கைலாஷ்', 'வொர்க் ஆகாத மெமரி கார்டு மூஞ்சி', 'இந்த ஆளலாம் பேச உடகூடாது.. ஃபேஸ்லயே உடணும்', 'அர்ஜூன் ரெட்டிய 3 டைரக்டர்கள் எடுத்துருக்காங்க. நீங்க எதை சொல்றீங்க?'.. என வசனத்துக்கு வசனம் பஞ்ச் இருந்தாலும் பஞ்ச் கொஞ்சம் மிஞ்சியே இருக்கிறது. முதல் பாதியில் அதகள காமெடிக்கு கொஞ்சம் பஞ்சம் தான்.
‘புகைப்பிடித்தல் கேடு தரும்’ என்கிற ஆரோக்கிய அறிவுரையை மொட்டை ராஜேந்திரன் குரலில் கேட்கும்போதே தொடங்குகிறது குதூகலம். ட்ரேட்மார்க் வடசென்னை நாயகனாக 'சந்தானம்' கலக்குகிறார். ஃபைட், காமெடி, டான்ஸ், கெட்-அப் என விதவிதமான ஸ்கோப் இருந்தாலும், உணர்வுகளில் வெரைட்டி காட்டாமல் படம் முழுவதும் ஒரே ‘பீட்டில்’ இருக்கிறார். அலப்பறை இல்லாமல் அளவாக நடித்த அனைனா மீதுதான் கடைசி நிமிடக் கதை வேறலெவலில் டிராவல் ஆகிறது.
இடைவேளைக்கு கொஞ்சம் முன்னாள் தொய்வாகும் திரைக்கதை மீண்டும் இடைவேளையில் 'பிருதிவ் ராஜால்' தூக்கி நிறுத்தப்பட்டு அதே ஸ்பீடில் பிற்பாதியில் பயணிக்கிறது. பிருதிவ் ராஜின் கதாபாத்திரம் படத்தின் பிற்பாதிக்கு பலம் சேர்க்கிறது. அவ்வப்போது வந்தாலும் காமெடியில் அசத்துகிறார் கணேஷ். கணணாடி மீது மோதிக்கொள்ளும் போது மட்டும் மொட்டை ராஜேந்திரன் காமெடி மனதில் பதிகிறது. மாறன், தங்கதுரை, சேசு என அனைவருமே கதையை நகர்த்த உதவுகின்றனர்.
டைட்டில் கார்டு தொடங்கி படம் முழுவதும் பிண்ணனி இசையில் புழுதி கிளப்புகிறார் சந்தோஷ் நாராயணன். ஆர்துர் வில்சனின் ஒளிப்பதிவு தூரமான காட்சிகளிலும் தரமாகவே இருக்கிறது. ரோகேஷ், அசல் கொலார் பாடல் வரிகளில் டான்ஸில் சிதற விடுகிறார் சாண்டி. க்ளைமேக்ஸில் இன்ப அதிர்ச்சியும் தருகிறார். எடிட்டர் பிரகாஷ் மப்பா இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டு படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த கதை கலாச்சார ரீதியாக கத்திமேல் நடப்பது போன்றது. ஆனாலும் இதை சுவாரசியமாக திரைக்கதைப் படுத்தியுள்ள விதமும் இறுதியில் கதையில் அவிழும் முடிச்சுகளும் செம்ம பா(ரி)ஸ். கானா பாடல்கள் வடசென்னை மார்க்கமாக இருந்தாலும் இப்படத்தை ஜாலியாக குடும்பத்துடன் அனைத்து பகுதி பார்வையாளர்களும் பார்க்கலாம். சிரித்து மகிழலாம்.