ஐந்து இளைஞர்கள் ஒரு இசைநிகழ்ச்சியில் நட்பாகிறார்கள். அதே சூட்டில் Trip போகும் அவர்கள் ஒரு புத்தகத்தை வைத்து விளையாடும்போது நிகழும் அமானுஷ்ய சம்பவங்கள் தான் ’பஞ்சராக்ஷரம்’.
புல்லட்டுடன் உலகை வட்டமடிக்கும் பறவையாக (கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்) சந்தோஷ். இசையே கதி என்றிருக்கும் கோகுல். பணக்காற வீட்டு பொறுப்பற்ற பிள்ளையாக அஷ்வின் ஜெரோம். எழுத்தாளராக விரும்பும் பெண்ணாக மதுஷாலினி. தேவைக்கு ஓடி ஓடி உதவும் கருணை உள்ளம் கொண்டவளாக சனா அல்தாப். இப்படி ஐந்து பேருக்கும் ஐந்து Characterizations.
’ஆயிரத்தில் ஒருவனு’க்குப் பிறகு தமிழில் ஒரு Supernatural Adventure படம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாலாஜி வைரமுத்து.
சந்தோஷ், மதுஷாலினி இருவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். பாடகராக வரும் கோகுலுக்கும், ஜாலி டைப் இளைஞன் அஷ்வின் ஜெரோமுக்கும் கதாப்பாத்திரம் கச்சிதமான பொருத்தம். சனா அல்தாப்பின் குழந்தைத் தன்மை கலந்த நடிப்பு சில இடங்களில் பிசிறடிக்கிறது.
கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை கதைக்கு வலு சேர்க்கிறது. சித் ஸ்ரீராமின் குரலில் தீராதே பாடல் இதயத்தை வருடுகிறது. யுவாவின் ஒளிப்பதிவில் அமானுஷ்யங்கள் நிகழும் காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் வரும் கார்ட்டூன் விவரிப்பு எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
முதல் பாதியில் எதிர்காலத்தை கணிக்கும் புத்தகத்தின் மர்மத்தை புதிரவிழ்ப்பது போல் தொடங்கும் கதை பின்னர் காணாமல் போன ஒருவரை தேடும் கதையாக சுருங்குவது எதிர்பாராதது.
தமிழில் வெளியான ‘6174’ நாவலைப்போன்று புராணத்தையும் அறிவியல் கூறுகளையும் புரட்டிப்பார்க்கும் கதையாக ’பஞ்சராக்ஷரம்’ எடுக்கப்பட்டிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.