நெட்ஃப்லிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் 'பாவக்கதைகள்'. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளனர். அண்மையில் வெளியான டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தது. இப்போது படம் எப்படி என்று பார்க்கலாம்.
நான்கு வெவ்வேறு கதைகள். அதன்மூலம் 'பெண்கள் என்பவர்கள் மானமும் கௌரவமும் காக்கும் பொருளாக, ஓர் உடலாக, எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை சமூகத்தின் வெவ்வேறு அடுக்களில் நிலவும் உண்மையுடன் பேசியிருக்கிறது' இந்த பாவக்கதைகள். பெண் தண்மை கொண்ட ஆண் முதல், வேற்று சாதிப் பையனை காதலித்த பெண் வரை, ஏன் இவர்கள் எப்போதும் இச்சமூகத்தால் விரட்டப்பட்டு கொண்டே இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பியதற்காகவே இம்முயற்சி பாராட்டத்தக்கதாகிறது.
சுதா கொங்கரா இயக்கியுள்ள தங்கம். எப்போதுமே கேலியும் கிண்டலும் செய்யப்படும் திருநங்கை குணம் கொண்ட சத்தாருக்கு (காளிதாஸ்) 6 வயதில் இருந்தே தனது நண்பனான தங்கம் (ஷாந்தனு) மீது பெரும் பிரியம். ஆனால், தங்கம் அவன் தங்கை (பவானி) மீது காதல் வளர்க்க, சமூகமெனும் மிருகம் அவர்களுக்கு என்ன செய்தது.? அவர்கள் கொடுத்த பதில் என்ன.? என்பதே மீதிக்கதை.
கனம் பொருந்திய களத்தை எடுத்து கொண்டு, அதில் வித்தியாசமும் காட்டி தனது ஃபிலிம் மேக்கிங்கால் வெற்றி பெறுகிறார் சுதா கொங்கரா. சத்தார் கதாபாத்திரத்தில் காளிதாஸ் நடிப்பில் தேர்ச்சி காட்டி சபாஷ் போட வைக்கிறார். ஷாந்தனு பவானி ஶ்ரீ உள்ளிட்டோரின் நடிப்பும் பக்கா.
லவ் பண்ணா உட்றனும்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கல்கி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சாதி, கௌரவம், ஆணவம் என்றெல்லாம் கூறப்படுவதையே Next-Gen இளைஞர்களின் பார்வையில் Just Like That-ஆக தட்டிவிட்டு செல்கிறது இந்த லவ் பண்ணா வுட்றனும்.
இந்த வலிமையான களத்திலும் அட்டகாசமான நகைச்சுவையால் அமர்களம் செய்கிறார் விக்னேஷ் சிவன். நிச்சயம் இப்படி சரவெடியாக ஒரு திரைப்படத்தை எதிர்ப்பார்க்கலாம் போல.!!
அஞ்சலி க்ளாமரும் அடக்கமும் கலந்து காட்ட, மழலை தமிழால் லைக்ஸ் அள்ளுகிறார் கல்கி. நரிக்குட்டியாக நடித்திருப்பவரும் நகைச்சுவையில் மிரட்டல் காட்டி கவனிக்க வைக்கிறார். அனிருத் இசையும் கூடுதல் பலம் சேர்க்கிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் வான்மகள். பெரும் கனவுகளை சுமந்து திரியும் நடுத்தர குடும்பம், அதன் கடைக்குட்டி மகள் மிக கொடுந்துயரத்தை கண்ட பின்பு அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்..? பொது பார்வை குறித்த அவர்களின் நிலை என்னவாகிறது..? என்பதை தனது ட்ரேட்மார்க்குடன் சொல்லி இருக்கிறார் ஜி.வி.எம். அவரே அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வாரணம் ஆயிரத்தையும் நியாபகப்படுத்துகிறார்.
தனது நடிப்பால் இந்த பகுதிக்கு மேலும் கணம் கூட்டுகிறார் சிம்ரன். மகளை நினைத்து கலங்கும் போது பார்வையாளர்களையும் கரையச் செய்கிறார். 96 ஆதித்ய பாஸ்கருக்கும் நல்ல ரோல், அதை சரியாக செய்திருக்கிறார்.
கடைசியாக வெற்றிமாறனின் ஓர் இரவு. வேறு சாதிப் பையனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் மகள் (சாய் பல்லவி). அவள் இப்போது கர்ப்பமாக இருக்க, வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார் அப்பா (பிரகாஷ் ராஜ்). ஆனால், இந்த பொதுச்சமூகம் கட்டி எழுப்பியிருக்கிற கௌரவமும் மானமும் அவரை எப்படி நடந்து கொள்ள வைக்கிறது என்பதை ஆழமாக காட்சி படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.
வெறும் அரைமணி நேரம் கிடைத்தாலும் போதும், காட்சி மொழியில் எப்படி அதன் அடர்த்தியை கூட்ட முடியும் என்பதை நிருபித்து, மீண்டும் மீண்டும் வெற்றி பெறுகிறார் வெற்றிமாறன்.
சாதியின் இறுக்கத்தை வெள்ளை வேட்டி சட்டையுடன் சுமந்து திரியும் பிரகாஷ் ராஜ் கச்சிதம். கண்களில் கனவையும் முகத்தில் அப்பாவித்தனத்தையும் சுமந்து அழகு சேர்க்கிறார் சாய் பல்லவி. க்ளைமாக்ஸ் காட்சியில் பிரகாஷ் ராஜ் - சாய் பல்லவியின் நடிப்பு க்ளாசிக் பந்தயம் அடிக்கிறது.
கதைக்களங்களில் மட்டுமில்லாமல் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை என தொழில்நுட்ப ரீதியாகவும் நேர்த்தி காட்டியிருக்கிறது படக்குழு. அதற்கு நிச்சயம் ஒரு பாராட்டுக்கள்.