அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சிவா ஷாரா, உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'ஓ மை கடவுளே'. ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து எழுதி, இயக்கியுள்ளார்.
அசோக் செல்வன், ரித்திகா சிங், சிவா ஷாரா மூன்று பேரும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள். ஒரு கட்டத்தில் ரித்திகா சிங்கை, அசோக் செல்வன் எதிர்பாராதவிதமாக கல்யாணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்படுகிறது. பின்னர் அது தவறான முடிவு என வருந்தும் அசோக் செல்வனுக்கு, திருமண வாழ்க்கையில் இருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை அசோக் செல்வன் எப்படி பயன்படுத்திக்கொள்கிறார் என்பதே படத்தின் கதை.
ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞனாக அசோக் செல்வன் அந்த வேடத்துக்கு மிகச் சரியாக பொருந்துகிறார். எதனையும் தைரியமாக எதிர்கொள்வதும், அதே நேரம் அன்பை வெளிப்படுத்த தெரியாமல் தவிப்பது என சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் ரித்திகா சிங். இயக்குநர் கனவுடன் அவ்வளவு யதார்த்தமாக, சின்ன சின்ன expressionகளில் கவர்கிறார் வாணி போஜன். வாழ்க்கை குறித்து பேசும் காட்சிகளில் அவ்வளவு முதிர்ச்சி. சில நேரமே வந்தாலும் எம்.எஸ்.பாஸ்கர், அசோக் செல்வனிடம் வாழ்க்கை குறித்து பேசும் காட்சிகள் எமோஷனலாக இருந்தது.
பெரும்பாலும் காதல் காட்சிகளாக நகரும் படத்தில் தனது ஒன் லைனர்களால் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கிறார் சிவா ஷாரா. குறிப்பாக ஆமா நீ என்ன 'பூவே உனக்காக' விஜய்யா என கேட்கும் காட்சி சிரிப்பை வரவழைத்தன.
படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஆனால் கதையின் போக்கை மாற்றக்கூடிய முக்கிய வேடங்களை ஏற்றிருக்கிறார்கள் விஜய் சேதுபதி மற்றும் ரமேஷ் திலக். கொஞ்ச நேரமே வந்தாலும் படம் முழுக்க அவர்கள் இருப்பது போன்ற உணர்வு. குறிப்பாக இருவரும் முதல் பாதியில் அவ்வப்போது தோன்றி படத்தை கலகலப்பாக்குகிறார்கள். விஜய் சேதுபதியை, அவரது பிளஸ் பாயிண்ட்களை உணர்ந்து நன்றாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அஸ்வத்.
காட்சிகளை கலர் ஃபுல்லாகவும் நேர்த்தியாகவும் படம் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விது அய்யனா. குறிப்பாக இரண்டாம் பாதியில் எழில்மிகு கேரளாவின் அழகை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார். தனது பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறார் லியோன் ஜேம்ஸ்.
ஒருவனுக்கு தனது தவறுகளை திருத்திக்கொள்ள இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆகும் என்ற படத்தின் கதையே படத்தின் விறுவிறுப்புக்கு காரணம். அதனை முடிந்த வரை சுவாரஸியமான திரைக்கதை, அழுத்தமான காட்சிகளுடன் சொல்லி கவனம் ஈர்த்துள்ளார் அஸ்வத்.
ஒரு விஷயம் பக்கத்தில் இருந்து பார்த்தால் பிரச்சனையாகவும், அதையே தள்ளி நின்று பார்த்தால் இயல்பாகவும் தெரியும் என்ற கருத்து சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. முதல் பாதி கலகலப்பாகவும், ஆங்காங்கே திருப்பங்களுடன் நகர்வதால், இரண்டாம் பாதியில் அதிகமான காதல் மற்றும் காதல் சார்ந்த காட்சிகள் ஒரு சிலருக்கு சலிப்பை தரலாம்.