அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்களின் வழியாக தமிழகத்திலும் நன்கு பரிச்சயமான நடிகர் விஜய் தேவரகொண்டா 'நோட்டா' படத்தின் வழியாக தமிழில் நேரடியாக களமிறங்கி இருக்கிறார். (ஏற்கனவே நடிகையர் திலகம் படத்தில் நடித்திருந்தாலும் நோட்டா அவரின் முழுநீள முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது) தேர்தலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நோட்டா விஜய் தேவரகொண்டாவின் நேரடி தமிழ் அறிமுகத்துக்கு உதவியதா? என்பதை இங்கே பார்க்கலாம்.
மாநிலத்தின் முதல்வரான வினோதன் (நாசர்) எதிர்பாராத விதமாக ஒரு ஊழல் வழக்கில் சிக்குகிறார். இதனால் தனது மகன் வருணை (விஜய் தேவரகொண்டா) தற்காலிக முதல்வராக அறிவித்து அந்த வழக்கை எதிர்கொள்கிறார். ஆனால் வினோதன் எதிர்பார்ப்புக்கு மாறாக அந்த வழக்கு அவரை மாபெரும் சிக்கலுக்கு இட்டுச்செல்கிறது. இதனைத் தொடர்ந்து வினோதன் அந்த வழக்கில் இருந்து மீண்டாரா? வருண் தனது முதல்வர் பதவியை சரியாகக் கையாண்டாரா? என்பதே நோட்டாவின் கதை.
நாயகன் விஜய் தேவரகொண்டா நோட்டாவுக்கு அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். முழுநீள தமிழ்ப்படம் என்பதால் வசன உச்சரிப்பு, நடிப்பு என பார்த்துப்பார்த்து உழைத்திருக்கிறார். இதேபோல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நாசர், சத்யராஜ் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். நாசர், சத்யராஜுக்கு இணையான குணச்சித்திர நடிப்பை எம்.எஸ்.பாஸ்கர் வழங்கியுள்ளார்.
நாயகிகள் மெஹ்ரீன் கவுர், சஞ்சனா இருவரும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். குறிப்பாக சஞ்சனாவுக்கு இப்படத்தில் ஸ்கோர் செய்திட நிறைய வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரும் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். வருணின் நண்பர்களாக வரும் 'பிக்பாஸ்' புகழ் யாஷிகா ஆனந்த், கருணாகரன் இருவரும் சிறிய கதாபாத்திரங்களில் வந்தாலும் தங்களது கதாபாத்திரத்திற்கு முடிந்த அளவு நியாயம் செய்துள்ளனர்.
சமகால அரசியலை ஆங்காங்கே வசனங்களில் தூவியதில் இயக்குநர் ஆனந்த் சங்கர் கவனம் ஈர்க்கிறார். பின்னணி இசையில் கவனம் ஈர்த்த சாம்.சி.எஸ் பாடல்களில் பெரிதாகக் கவரவில்லை. சந்தான கிருஷ்ணன் கேமரா படத்தின் பிரம்மாண்டத்துக்கு பெரிதும் கைகொடுத்துள்ளது. எனினும் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள், எளிதில் யூகிக்கக் கூடிய திருப்பங்கள் ஆகியவை படத்தின் வீரியத்தை குறைக்கின்றன. படத்தில் இடம்பெறும் பாடல்கள் மற்றும் சில காட்சிகளுக்கு கத்திரி போட்டு படத்தின் நீளத்தை சற்றே குறைத்திருந்தால் நோட்டா இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.