எம்டெக் படித்துவிட்டு தன் விருப்பத்தின் பேரில் இயற்கை விவசாயம் செய்கிறார் நந்தகோபாலன் குமரன். ஊரில் யாருக்கு ஒரு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக நிற்கிறார்.
பெற்றோர் , மனைவி என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் வாழ்வில் அரசியல் குறுக்கிடுகிறது.அடிமட்டத்தில் இருந்து அரசயலைக்கற்று அதில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே என்ஜிகே படத்தின் கதை.
என்ஜிகேவாக சூர்யா, இயல்பான குடும்பத்து பிள்ளையாகவும், அரசியலில் இறங்கிய பிறகு கோபம், நக்கல் நய்யாண்டி என நவரசத்தையும் காட்டுகிறார். நிறைய இடங்களில் துறுதுறுவென இருக்கும் சூர்யாவை படத்தில் காணலாம்.
படத்தில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் என இரண்டு நாயகிகள். யாரிடமும் தன் கணவரை விட்டுக்கொடுக்காமல் பேசுவது, தன் கணவரிடம் நீ போடா கண்ணா என உத்வேகமளிப்பது என தன் வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக சூர்யாவை சந்தேகப்படும் காட்சிகளில் அதகளம்.
போல்டான நாயகியாக ரகுல் பிரீத் சிங், மிடுக்கான நடிப்பை வழங்கியிருக்கிறார். பாலாசிங், பொன்வண்ணன், நிழல்கள் ரவி, உமா பத்பநாபன் என தங்களது வேடங்களுக்கு நியாயம் செய்திருக்கின்றனர்.
லைட்டிங், வித்தியாசமான கோணங்கள் என தன் ஒளிப்பதிவாலும் கதை சொல்ல முயற்சித்திருக்கிறார் சிவகுமார் விஜயன். யுவனின் பின்னணி இசை காட்சிகளில் வீரியத்தை அதிகரித்திருக்கிறது.
ஆங்காங்கே சுவாரசியமான காட்சிகள் இருந்தாலும் சில லாஜிக் மீறல்கள், வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல சில காட்சிகள் படத்தின் மீதான சுவாரசியத்தை குறைக்கின்றன.
முக்கிய காட்சிகளில் அதன் பின்னணி சரியாக சொல்லப்படாததால் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.