‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, அஜ்மல் அமீர், மணிகண்டன், சரண் சக்தி மற்றும் பலர் நடிப்பில், Ahn Sang Hoon இயக்கிய ‘Blind’ கொரியன் திரைப்படதை தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகியுள்ளது.
விபத்தில் தம்பியை இழந்து, பார்வை மாற்றுத்திறனாளியாக மாறும் நயன்தாராவுக்கு, பார்வை பறிபோனதால் சிபிஐ வேலையும் பறிபோகிறது. அதன் பின் சிட்டியில் பெண்களை கடத்தும் பாலில் சைக்கோ வில்லனின் வலையில் சிக்கப் போய், அந்த வில்லனை தன் சிபிஐ மூளையால் எப்படி பிடிக்கிறார் என்பதே கதை.
நானும் ரவுடிதான் காதம்பரிக்கு பிறகு, ‘நெற்றிக்கண்’ துர்காவாக நயன்தாரா கண்ணுக்குள் நிற்கிறார். வளர்ப்பு நாய் ‘கண்ணா’வை பறிகொடுத்த பின்பு நயன்தாராவின் அழுகை கலங்க வைக்கிறது. மணிகண்டன் வேற லேவல். ‘சீனு.. சீனு’ சீனுக்கு சீன் அமைதியான நடிப்பால் காமெடியில் தெறிக்கவிடுகிறார். இறுதியில் அழ வைக்கிறார். “நைட்ல என்ன கண்ணாடி..? மிஷ்கின் தங்கச்சியா..? நீ” என ஒரே வசனத்தில் லைக்ஸ் அள்ளுகிறது படம். இடையில் சொல்லப்படும் “நரியும் ஆட்டுக்குட்டியும்” கதையும் கூட மிஷ்கினை நினைவுபடுத்துகிறது. பாலியல் சைக்கோவாக அஜ்மல் மிரட்டியிருக்கிறார்.
முதல் அரை மணி நேரத்துக்கு பின் படம் சூடுபிடிக்கிறது. நயன்தாராவின் யோசிக்கும் திறன்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. சரண் சக்திக்கும் நயன்தாராவுக்குமான செண்டிமெண்ட் போர்ஷன் வொர்க் அவுட் ஆகிறது. கவனச் சிதறல்கள் இல்லாத திரைக்கதை படத்துக்கு பலம். பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் அதிரிபுதிரி வசனங்கள் தவிர்க்கப்பட்டு, அளவான அட்வைஸூடன் தேவைப்பட்டும் இடத்தில் மட்டும் நறுக்கென நயன்தாரா பேசும் வசனங்களுக்கு க்ளாப்ஸ்.
நயன்தாராவும் அவரது தம்பியும் விபத்துக்குள்ளான இடத்தில் ஒரு கார் கூட வராதது; சிட்டியில் இரவு 9 மணிக்கு வீட்டு வாசலில் வைத்து இளம் பெண்ணிடம் அஜ்மல் சில்மிஷம் செய்வதை அக்கம் பக்கத்தினர் யாருமே கவனிக்காதது; Untime-ல் பெரிய மாலுக்குள் நுழைந்து அஜ்மல், நயன்தாராவை அடிப்பதும், நாயை கொல்வதும் எப்படி சாத்தியம் என லாஜிக்கல் பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன. வீடியோ காலில் அஜ்மலை பார்க்கும்போதே சரண் சக்தி, ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்திருக்கலாம். ஆனால் ஸ்கெட்ச் ஆர்ட்டிஸ்ட் கொண்டு வரையச் சொல்வது கதையின் நீளத்தை அதிகரிக்கிறது. பெண்களை கடத்தி கொல்லும் பெரும்பாலான பாலியல் சைகோக்கள் டாக்டர்களாகவே காண்பிக்கப்படுவது வழக்கமாக தோன்றுகிறது. அஜ்மலின் கேரக்டரை இன்னும் தனித்துவமாக செதுக்கியிருக்கலாம்.
மிகவும் நுணுக்கமான ஒளிப்பதிவால் அசரவைக்கிறார் ஆர்.டி.ராஜசேகர் . கதையோட்டம் தடைபடாமல் எடிட்டிங் செய்துள்ளார் லாரன்ஸ் கிஷோர். லேடி சூப்பர் ஸ்டாருக்கு வேற லெவல் பயிற்சி அளித்து அசரவைக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன். கதையோடு சேர்ந்த பாடல், திரைக்கதைக்கு உதவும் பின்னணி இசை என ஆர்ப்பாட்டமில்லாமல் பணிபுரிந்திருக்கிறார் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.
பெண்களின் ஆடை, பாலியல் சுதந்திரம் உள்ளிட்டவற்றை கொண்டு அவர்களின் ஒழுக்கம் மதிப்பீடு செய்யப்படுவதற்கு எதிரான நயன்தாராவின் வசனங்கள் “நச்!”. “இவன ஜெயில்ல போடாதீங்க.. முடிச்சுவிட்ருங்க” என நயன்தாரா ஜெயிலில் வைத்து அஜ்மலை திட்டுவது வேற லெவல். பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணாக எந்த கழிவிரக்கமும் இல்லாமல், இத்தனை துணிச்சலுடன் பேசும் நயன்தாராவின் கேரக்டர் பாராட்ட வைக்கிறது. காவல்துறையில் நிலவும் உள்அதிகார ஒடுக்கம் போகிறபோக்கில் சுட்டிக் காட்டியிருப்பது சிறப்பு, அதனாலேயே க்ளைமாக்ஸில் மணிகண்டனின் பாத்திரம் தேர்ச்சிபெறுகிறது.
தம்பியின் இழப்பால் ஒரு குற்றவுணர்ச்சியில் இருக்கும் நயன்தாரா, சரணை காப்பாற்றும்போது அதில் இருந்து மீள்வதும், க்ளைமாக்ஸில் காட்டும் ‘முக்கியமான’ ஆவேசமும் படத்தின் உணர்வுகளை தாங்கி பிடிக்கின்றன.