சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷனின் இரண்டாவது தயாரிப்பாக வெளியாகியிருக்கும் படம் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'. ஒரு யூடியூப் சேனல் வைத்துக் கொண்டு பிரபலமாக முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் ரியோவும் ஆர்ஜே விக்னேஷ் காந்தும்.
அவர்களுக்கு வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கிறார்கள். அவர்களது நோக்கத்தை புரிந்துகொள்ளும் ராதா ரவி, அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்குவதாகவும் அதற்காக அவர்கள் 3 டாஸ்க்குகள் நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள்.
ராதா ரவி எதற்காக அப்படி செய்கிறார்?, அந்த மூன்று டாஸ்க்குகளை அவர்கள் எப்படி நிறைவேற்றுகிறார்கள்? என்பதே இந்த படத்தின் கதை. துவக்க பாடலிலேயே யூடியூப் பிரபலங்கள் அனைவரையும் இடம் பெறச் செய்து மரியாதை செய்திருக்கிறார்கள்.
ஹீரோவா ரியோ ராஜ். முதல் படத்திலேயே காமெடி, சென்டிமென்ட் என ஒரு தேர்ந்த நடிப்பை வழங்க முயற்சித்திருக்கிறார். அவருக்கு இந்த படம் ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும். ஜர்னலிஸ்டாக ஷிரின் காஞ்ச்வாலா. குறைவான வேடம் என்றாலும் ஆங்காங்கே நடிப்பதற்கு சிரமப்படுகிறார்.
ரியோவின் நண்பனாக படம் முழுக்க வரும் முக்கியமான வேடம் ஆர்ஜே விக்னேஷ்காந்திற்கு. அவரது கவுண்டர்கள் மற்றும் ரியாக்ஷன்களும் சிரிப்பை வரவழைக்கின்றன. படம் முழுக்க ஜாலியாக நகர்ந்து கொண்டிருக்க, முக்கியமான கட்டத்தில் வரும் எமோஷனல் காட்சி ஒன்றில் தனது அனுபவ ரீதியான முதிர்ச்சியான நடிப்பால் தன் இருப்பை பதிவு செய்கிறார் ராதா ரவி. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் விவேக் பிரசன்னா சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
படம் முழுக்க ஆங்காங்கே பிளாக் ஷீப் பிரபலங்கள் ஒவ்வொருத்தராக வந்து சர்ப்ரைஸ் அளித்துக்கொண்டே இருக்கிறார்கள். பிளாக் ஷீப் வீடியோக்களை பார்ப்பவர்கள் அந்த காட்சிகளை ரசிக்கலாம்.
படம் தொடங்கி கதைக்குள் செல்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால் அது சற்று அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் அதனை ஈடு செய்யும் விதமாக இரண்டாம் பாதி பரபரப்பாக நகர்கிறது. படத்தில் ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் இருக்கிறது.
படத்தில் ராஜ் மோகனுக்கு நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் இல்லை. அவரது குரல் பலம் வாய்ந்தது என்பதால் அவரை சற்று இன்னும் அதிகம் பயன்படுத்தியிருக்கலாம். ஒரு அரசியல்வாதி வேடத்துக்கு மிகச் சரியாக பொருந்துகிறார் நாஞ்சில் சம்பத். இரண்டாம் பாதியில் அவர் வரும் காட்சிகளில் அதகளம் புரிகிறார்.
புதுமுக இயக்குநராக கார்த்திக் வேணுகோபால் இன்றைய சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை கமர்ஷியலாக வழங்கியிருக்கிறார். இந்த படத்தின் கிளைமேக்ஸ் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.