செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
பணக்கார வீட்டு பெண்ணை திருமணம் செய்து, பெரிய பங்களாவில் புது பணக்காரனாக வாழ்ந்து வருகிறார் ராம்சே (எஸ்.ஜே.சூர்யா). அவர்களின் குழந்தையை பார்த்து கொள்ளும் வேலைக்கு வருகிறாள் மரியம்(ரெஜினா). சர்ச்சில் வளர்ந்து கடவுள் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருக்கும் மரியம், ராம்சேவால் கொல்லப்படுகிறாள். அதன் பிறகு நடக்கும் கடவுளுக்கும் சாத்தானுக்குமான யுத்தமே படத்தின் மீதிக்கதை.
ராம்சே என்கிற ராமசாமியாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா தனது நடிப்பால் திரையரங்குகளில் சரவெடி கொளுத்துகிறார். காட்சிகளுக்கு ஏற்ப மாறும் அவரின் வசன உச்சரிப்புகள் க்ளாப்ஸை அள்ளுகிறது.
ரெஜினா படம் முழுக்க தனது பார்வையினாலேயே மிரட்டுகிறார். பர்ஃபார்மென்ஸ்க்கு ஏதுவான இடங்களில் மிகையில்லாது நடித்து கனம் கூட்டுகிறார். நந்திதாவின் கதாபாத்திரமும் அவரின் நடிப்பும் கச்சிதம்.
வேலைக்காரர்களாக நடித்துள்ள நால்வரும் கவனிக்க வைக்கிறார்கள். செல்வா படம் என வந்தாலே தனி குஷி ஆகிவிடுகிறார் யுவன். பாடல்கள் ஆல்ரெடி சூப்பர் ஹிட் அடித்த நிலையில் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்.
அரவிந்த் கிருஷ்ணாவின் கேமரா கோணங்களும் லைட்டிங்கும் வித்தியாசம் காட்டுவதுடன் படத்தின் அடர்த்தியை நமக்குள் கடத்துகிறது. ஜி.கே.பிரசன்னாவின் எடிட்டிங் மற்றுமொரு பலம்.
எப்போதுமே தனது தனித்துவமான திரை மொழிக்காக கொண்டாடப்படும் செல்வராகவன், அதே தனித்துவத்துடன் இந்த ஹாரர் படத்தை கொடுத்து வெற்றி பெறுகிறார். படத்தினூடாக பயணிக்கும் ப்ளாக் காமெடி அசத்தலாக இருக்கிறது. பாடல் காட்சிகள் படமாக்கபட்ட விதமும் ரசிக்க வைக்கிறது.
ரகளையாக செல்லும் திரைக்கதை எதிர்பார்த்த க்ளைமாக்ஸுடன் முடிந்து விடுவதை தவிர்த்து, ஒரு பேய் படத்தை புதியதொரு அனுபவமாக கொடுத்ததில் நெஞ்சம் மறப்பதில்லையை நெஞ்சம் மறப்பதற்கில்லை.