மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் தயாரிப்பில் நெட்பிளிக்ஸில் நேரடியாக ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் நவரசா.
திரைத்துறை நலனுக்காக பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளமில்லாமல் பணிபுரிந்துள்ள இந்த ஆந்தாலஜி படத்தின் தொகுப்பு வாரியான விமர்சனங்களை பார்க்கலாம்.
எதிரி (கருணை - Compassion)
இந்த பகுதியில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி மூவருமே கதைக்கு வலுசேர்க்கும் நடிப்பை தந்துள்ளனர். ரேவதியின் கணவரை கொலை செய்யும் விஜய் சேதுபதியின் குற்றவுணர்வுக்கும், அதற்காக விஜய் சேதுபதியை தண்டிக்காத ரேவதியின் எண்ணத்துக்கும் இடையில் ஊசல் ஆடுகிறது பிஜோய் நம்பியாரின் ‘எதிரி’. பழிவாங்கல் உணர்ச்சியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த பகுதியில் திரைக்கதையை இன்னும் என்கேஜ்டாக உருவாக்கியிருக்கலாம். படத்தின் கதையை இன்னும் புரியவைப்பதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்தின் பலம்.
சம்மர் ஆஃப் 92 ( நகைச்சுவை - Laughter)
நகைச்சுவை நடிகராக வளர்ந்துவிட்ட வேலுசாமி (யோகிபாபு), பழைய பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக போகிறார். பள்ளிக் காலத்தில் தான் செய்த குட்டி குட்டி சேட்டைகளால் தம் மதிப்பெண்கள் குறைந்தது, பற்றி உரையாற்றுகிறார். அதே பள்ளியில் டீச்சராக வேலை செய்யும் ரம்யா நம்பீசனுக்கு(யோகிபாபுவின் சிறுவயதிலும் அவரே டீச்சர்) செவ்வாய் தோஷம். அவருக்கு திருமணம் நடக்க, அவர் வளர்க்கும் நாயின் சேட்டைகள் தடையாக இருக்கிறது. அந்த நாயை ஒழிக்கும் வேலையை யோகிபாபுவிடம் ஒப்படைக்கிறார் ரம்யாவின் தந்தை. இது ஒரு காமெடியில் சென்று முடிகிறது. இதையும் மேடையில் யோகிபாபு ரிவீல் செய்யும்போது அரங்கமே வெடித்து சிரிக்கிறது. க்ளைமாக்ஸில் நாய் செய்யும் சேட்டை அட்டகாசம். மன்னன் எனும் வார்த்தையை ஸ்பெல்லிங் மிஸ்டேக்காக எழுதும் மாணவன் யோகிபாபுவை கண்டுபிடிக்கும் படலம் அருமை. ப்ரியதர்ஷன், தனக்கே உரிய திரைமொழியில் இந்த காமெடி படத்தை இயக்கியிருக்கிறார்.
புராஜக்ட் அக்னி (ஆச்சர்யம் - Wonder)
அரவிந்த் சுவாமிக்கும் அவரது இஸ்ரோ நண்பரான பிரசன்னாவுக்கும் ஒரு மழை நாளில் நடக்கும் அறிவார்த்த உரையாடல் தான் படம். முடிவில் அரவிந்த் சுவாமி ஒரு ஆச்சர்யத்தை ரிவீல் செய்கிறார். விஷ்ணு, கல்கி, கிருஷ்ணா என கதாபாத்திரங்களின் பெயர்கள் தொடங்கி, ஜோசியம் வரை பேசப்படுவதாலேயே இந்த ஹை கான்செப்ட் படத்தின் கோர் ஐடியா மீது மீண்டும் நம்பிக்கை இழந்து மித்தாலஜிக்குள் செல்லவேண்டி இருக்கிறது. சும்மாவே புரிந்துகொள்ள கஷ்டமான இந்த கான்செப்டில் வசனத்தில் வரும் அதிக ஆங்கில ஆதிக்கம் புரிந்துகொள்ள தடையை ஏற்படுத்துகிறது. எனினும் ஹாலிவுட்டில் பேசப்படும் அளவுக்கான கான்செப்ட் மற்றும் கார்த்திக் நரேனின் மேக்கிங் இந்த படத்தை வியந்து பார்க்கவைக்கிறது.
பாயாசம் ( அருவருப்பு - Disgust)
தி.ஜானகிராமன் எழுதிய கதையை, வசந்த் S சாய் இப்பகுதியில் இயக்கியுள்ளார். டெல்லி கணேஷின் அண்ணன் மகன் குடும்பத்தில் அனைத்துமே நல்லதாய் நடக்கிறது. தன் மகள் அதிதி, திருமணம் ஆன சில மாதங்களில் விதவை கோலம் பெறுகிறாள். எனவே தன் அண்ணன் மகன் குடும்பத்தில் தற்போது நடக்கும் விசேஷத்தில் சென்று பொறுமிக்கொண்டே இருக்கிறார் டெல்லி கணேஷ். சமையல் செய்யும் பகவதி பெருமாள் கேரக்டர் கவனிக்க வைக்கிறது. ரோகிணி ஒரு சர்ப்ரைஸ் கேரக்டர். இருப்பினும் டெல்லி கணேஷ் விரக்தியில் செய்யும் சில்லி தனமான எண்ணத்தை இறுதியில் அதிதி பாலன் ஒரு சவுக்கடி கேள்வியால் விமர்சித்திருக்கலாம். படம் முழுமை பெற்றிருக்கும்.
அமைதி ( அமைதி - Peace)
போலீஸாக மட்டுமே நாம் பார்த்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், இப்படத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த மாஸ்டராக கெத்து காட்டுகிறார். இறுதியில் சிங்கள வீரர்களை ஒரு நொடியில் மனிதாபிமானம் உள்ளவர்கள் என நம்பி, பாபி சிம்ஹா நன்றி சொல்லும் காட்சி உருகவைக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரு அழகான குட்டி ஸ்டோரியை சோமீதரன் எழுத்தில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். படத்தில் பேசப்படும் ஈழமொழி, பலருக்கும் புரியாமல் போகலாம். ஆனாலும் சமரசம் செய்துகொள்ளாமல் உள்ளபடியே பேச்சுமொழியை வசனங்களில் கொடுத்துள்ளார்கள். கொத்து கொத்தாக உயிர்த் தியாகம் செய்த ஒரு இயக்கம் நாய்க்குட்டிக்காக இரக்கப்படும். ஆனால் ஒரு வீரரின் உயிரைக் கொடுத்து காப்பாற்ற முயலும் அவ்வளவு ரிஸ்க் எடுக்குமா? இயக்கத்தின் ஒவ்வொரு வீரரும் பெரிய சக்தி வாய்ந்த பலம் எனும்போது இலட்சியம் இல்லாத செண்டிமெண்ட்களுக்கு அந்த வீரர்கள் இடம் கொடுப்பார்களா? என்பது கேள்வி. மையக் கதையில் நாய்க்குட்டியை தாண்டி இன்னும் வலுவான ஒன்றில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ரௌத்திரம் ( கோபம் - Anger)
ஓடிப்போன கணவரை அடுத்து, பிள்ளைகளின் வளர்ப்புக்காக, வீட்டு வேலை செய்யும் ரித்விகாவின் தாயார் வேறுவழியின்றி முதலாளியுடன் உறவுகொள்ள, இதை அறிந்த ரித்விகாவின் அண்ணன் அந்த முதலாளியை அடிக்க, அவர் இறக்கிறார். அம்மாவின் செயல் பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிய ரித்விகா பல வருடம் கழித்து போலீஸ் ஆகிறார் என்பது கதை. ஆனால் ரித்விகாவின் தாயாருக்கான பாலியல் சுதந்திரம் என்று கூட அதை சொல்ல முடியும். என்ன ஒன்று.. அவர் விருப்பம் இல்லாமல், வேறு வழியில்லாமல், பிள்ளைகளின் வாழ்க்கைக்காக மட்டுமே முதலாளியுடன் உறவில் இருக்கிறார். இதை வளர்ந்த பின்னும் கூட ரித்விகா புரிந்துகொள்வதில்லையே? அதற்காக, சாகும் தருணத்தில் தாயார் இருக்கும்போது கூட, ரித்விகா போகாமல் இருப்பது என்ன மனநிலை? ரித்விகாவின் சகோதரர் சிறை சென்றாரா? அந்நேரத்தில் ரித்விகாவின் தாயாரை யார் பார்த்துக் கொண்டார்? ரித்விகா எப்படி போலீஸ் ஆகிறார்? என பல கேள்விகள். எனினும் இயக்குநராக அரவிந்த் சுவாமி தேர்ச்சி பெறுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் ஆர்ப்பாட்டம் இல்லாமல், இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு படத்தின் திரைமொழிக்கு உதவுகிறது.
இன்மை ( பயம்- Fear)
ரதீந்திரன் R பிரசாத் இயக்கத்தில் சித்தார்த், பார்வதி திருவோத்து நடித்துள்ள படம் இன்மை. இசுலாமிய மார்க்கத்தின்படி, பயம் மற்றும் வாழ்க்கை என்ன ஆகுமோ என்கிற நிலையாமைத் தத்துவம் பற்றி பேசுவது போல் படம் ஒரு கட்டம் வரை செல்கிறது. ஆனால் இறுதியில் படத்தில் ஒரு அறம் பேசப்படுகிறது. திரைக்கதை தான், இந்த படத்தின் சுவாரஸ்யத்துக்கு முக்கியக் காரணம். சில இடங்களில் யூகிக்க முடிந்தாலும், யூகிக்க முடியாத சித்தார்த்தின் நடிப்பு சர்ப்ரைஸாக அவிழும் ப்ளாஷ்பேக் கதை என அனைத்துமே படத்துக்கு பலம். விஷால் பரத்வாஜின் இசை படத்தின் சஸ்பென்ஸை அதிகரிக்கிறது.
துணிந்த பின் (தைரியம் - Courage)
மணிரத்னம் கதை எழுத, சர்ஜூன் இயக்கத்தில் அதர்வா, அஞ்சலி, கிஷோர் நடித்துள்ள படம் துணிந்த பின். நக்சல்களை கொல்லும் ஆபரேஷனுக்கு முதல் முதலில் டியூட்டிக்கு செல்கிறார் ராணுவ வீரன் அதர்வா. நக்சல்பாரியாக வரும் கிஷோர் குண்டடி பட, அவரை மருத்துவமனையில் சேர்த்து ஹெட் ஆபீஸில் உயிரோடு ஒப்படைக்கும் பொறுப்பு அதர்வாவுக்கு. இருவரின் நடிப்பும் அருமை. ஆனால் அதற்கு முழுமையான ஸ்கோப் திரைக்கதையில் இல்லை. இருவருக்குமான உரையாடல் போர்ஷன் ரசிக்க வைத்தாலும், அது வழக்கமானதாகவே உள்ளது. கணவர் அதர்வா பற்றிய தகவலுக்காக காத்திருக்கும் மனைவி(அஞ்சலி) கதாபாத்திரம் வலுவாக இல்லை. அதர்வாவுக்கு ஆபத்து இருப்பதாகவே கதையில் சூழல்கள் இல்லை. க்ளைமாக்ஸூம் கதையின் மையக்கருவும் இன்னும் கைகூடி வந்திருக்கலாம்.
கிடார் கம்பியின் மேலே நின்று ( அன்பு (காதல்) - Love )
தனியிசைக் கலைஞரான சூர்யா தன் அழகான சிறிய காதல் கதையை ஒரு ஸ்டேஜில் பகிர்கிறார். முதல் சந்திப்பு, படபடக்கும் தருணம், பார்த்ததும் மனம் பட்டாம் பூச்சியாய் பறப்பது, ஏதோ உணர்வில் தவிப்பது, இசை, பேச்சு, பார்வை, என ஜி.வி.எம்-மின் கிட்டார் கம்பி ‘இதயத்தில்’ நிற்கிறது. இதே மாதிரி கதையில் நடித்த சுவடே இல்லாமல் சூர்யா புதுமை காட்டுகிறார். அறிமுகம் முதலே ப்ரயகா வசீகரிக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் மனம் விட்டு பேசும் உரையாடல் போர்ஷன் பரவசத்தில் ஆழ்த்துகிறது. ‘தூரிகா பாடல்’ படத்தின் நடுவே அமைந்த ஒரு ஹைக்கூ. இம்முறை ஜி.வி.எம் கொஞ்சம் எதார்த்தமாகவும் திரைக்கதையை அமைத்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் என்கேஜ்டாக இருந்திருக்கலாம். வசனங்களிலும் அதே எதார்த்தம் இருந்திருக்கலாம். அந்த காதலின் முடிவு நிறைவாக இருந்திருக்கலாம் என மனம் ஏங்குவதை தவிர்க்க முடிவதில்லை. கார்த்திக்கின் இசை படத்துடன் இழையோடுகிறது. பி.சி.ஸ்ரீராம் ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கியிருக்கிறார். போரடிக்காமல் கத்தரி போட்டிருக்கிறார் ஆண்டனி. கார்க்கியின் வரிகள் படத்தின் தலைப்பில் மட்டுமில்லாமல், பாடல்களிலும் கதையோடு சேர்ந்து காதல் ரசம் ததும்ப வைக்கிறது.