பல நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்து நிறுவனத்தை, காரைக்காலில் உள்ள பழம்பெருமை வாய்ந்த ஹாக்கி கிரவுண்டை நீக்கி விட்டு ஆரம்பிக்க நினைக்கிறது ஒரு மல்டி நேஷனல் கம்பெனி.
பணத்திற்கு ஆசைப்பட்டு அதற்கு துணை போகிறார் விளையாட்டுத்துறை அமைச்சரான கரு.பழனியப்பன். இந்த சிக்கலில் இருந்து கிரவுண்டை காப்பாற்ற, அந்த கிரவுண்டில் விளையாடும் ஹாக்கி அணி தேசிய அளவிலான போட்டியில் விளையாடி தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.
தேசிய அளவிலான போட்டியில் அந்த அணி வெற்றி பெறுகிறதா ? அதற்கு ஹீரோ ஹிப்ஹாப் ஆதி எந்த விதத்தில் உதவி புரிகிறார் என்பதே இந்த படத்தின் கதை.
ஒரு விளையாட்டை கதைக் களமாக தேர்ந்தெடுத்ததிலேயே இந்த படம் பாதி வெற்றி பெறுகிறது எனலாம். காரணம் அந்த விளையாட்டு போட்டிகளை சரியாக காட்சிப்படுத்திவிட்டாலே அது பரபர திரைக்கதைக்கு பெரும் பங்கு வகிக்கும்.
இந்த படத்தின் நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதி. ஸ்போர்ட்ஸ், நடனம், நடிப்பு என தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான பங்களிப்பை தர முயற்சித்திருக்கிறார்.
படத்துக்கு மிகப்பெரிய பலம் அரசியல்வாதி வேடத்தில் நடித்திருக்கும் கரு.பழனியப்பன். டயலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் என தனது அரசியல்வாதி வேடத்தை நியாயப்படுத்தியிருக்கிறார். அவர் பேசும் டயலாக்குகளுக்கு திரையரங்கில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அவருக்கு அடுத்து ஹாக்கி கோச்சாக நடித்திருக்கும் ஹரீஸ் உத்தமன். படத்தின் முக்கிய கட்டங்களில் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ஆர்ஜே விக்னேஷ், ஷாரா, எரும சாணி, விஜய், பிஜிலி ரமேஷ் ஆகிய யூடியூப் ஸ்டார்ஸ் இணைந்து சிரிப்பை வரவழைக்க முயற்சித்திருக்கிறார்கள். ஹாக்கி போட்டிகள் நடைபெறும் இறுதிக்கட்ட காட்சிகளில் தனது நேர்த்தியான ஒளிப்பதிவால் கூடுதல் பரபரப்பு சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங். ஹிப்ஹாப் தமிழாவின் இசை அதற்கு துணை புரிந்திருக்கிறது.
கிரிக்கெட் உள்ளிட்ட சில விளையாட்டுக்களுக்கு மட்டும் அளிக்கப்படும் முக்கியத்துவம், இந்தியாவில் ஹாக்கி வீரர்களுக்கான பிரச்சனைகள் என கொஞ்சம் அழுத்தமான காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன.
சாதி, மதத்தால் பிரிந்திருப்பது, வாக்களிப்பதன் அவசியம் போன்று சமூக நலன் குறித்து பேசப்படும் வசனங்கள் ஒருபுறம் இருக்க, கூப்டாலே வந்திருப்பாளே போன்ற வசனங்களை தவிர்த்திருக்கலாம்.
ஹாக்கி போட்டிகள் நடைபெறும் போது இருக்கும் சுவாரஸியம் படத்தில் இடம் பெறும் காதல் காட்சிகளில் இல்லை. ஆங்காங்கே இருக்கும் செயற்கைத்தனமான காட்சிகள் படத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது. ஆனாலும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இந்த படம் ரசிகர்களை கவரும்.