சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஸ், அனு இமானுவேல், பாரதிராஜா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'. இயக்குநர் பாண்டிராஜ் இந்த படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
பெரியப்பா, சித்தப்பா, மாமன், மச்சான் என பெரிய சொந்தங்களுடன் வாழ்கிறார்கள் அண்ணன் - தங்கையான சிவகார்த்திகேயனும், ஐஸ்வர்யா ராஜேஷும். ஊருக்குள் நல்லது செய்யும் சிவகார்த்திகேயனுக்கு நடராஜ் உடன் பகை ஏற்படுகிறது. பின்னாளில் அவரே தன் தங்கைக்கு மாப்பிள்ளையாக வர அவரை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதை.
அண்ணன் - தங்கையாக சிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யா ராஜேஷும் அந்த வேடங்களுக்கு சரியாக பொருந்துகிறார்கள். அப்பா இல்லாமல் வளரும் பிள்ளைகளாக ஒருவொருக்கொருவர் காட்டும் பாசத்தினால் நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்கள். பேரப்பிள்ளைகள் மீது அவர் காட்டும் அக்கறையில் பாரதிராஜாவின் நடிப்பில் நிஜ கிராமத்து தாத்தா தெரிகிறார். தன்னைச் சுற்றி நிகழும் கதையின் தன்மையை உணர்ந்து உணர்வுகளில் விளையாடும் வில்லனாக மிரட்டுகிறார் நட்டி.
சிவகார்த்திகேயனின் அண்ணனாக படம் முழுக்க தனது காமெடிகளால் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் சூரி. பத்தாதற்கு அவரது மகனாக வரும் சிறுவனின் டைமிங் கவுண்டர்களால் தியேட்டரே சிரிப்பலைகளால் அதிர்கிறது. மேலும் யோகிபாபுவும் ஒன் லைனர்களால் தன்பங்கிற்கு சிரிக்கவைக்கிறார்.
சிவகார்த்திகேயனின் அழகான மாமா பொண்ணாக வசீகரிக்கிறார் அனு இமாணுவேல். சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், சிவகார்த்திகேயனின் அம்மாவாக அர்ச்சனா, வேல ராமமூர்த்தி, சுப்பு பஞ்சு, ஆடுகளம் நரேன் என ஒவ்வொருவரும் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள். வீட்டு விஷேங்கள், திருவிழா, சண்டைக்காட்சிகள் என கிராமத்து நிகழ்வுகளை அழகாகவும் கலர் ஃபுல்லாகவும் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. படத்தின் ஆன்மாவான அண்ணன் - தங்கை சென்டிமென்ட் காட்சிகளுக்கு தனது பின்னணி இசையால் மேலும் வலுவூட்டுகிறார் இசையமைப்பாளர் டி.இமான்.
படத்தின் முக்கிய பாத்திரங்களான சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் - தங்கை வேடம் நன்றாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நம் உறவுகளின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு கதாப்பாத்திரங்களின் வழியே உணர்வுப்பூர்வமாக காட்டியிருக்கிறார் இயக்குநர். படம் முழுக்க திருவிழாவிற்கு நம் சொந்த ஊருக்கு போய் வந்த உணர்வு இருக்கிறது.
சிவகார்த்திகேயன் மற்றும் நடராஜ் ஆகியோருக்கு இடையே இருக்கும் பிரச்சனை தான் படத்தின் கதை என்பதால் ஃபிளாஷ்பேக் காட்சிகளின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். இரண்டாம் பாதிக்கு மேல் விறவிறுப்பாக நகரும் கதையில் பாடல்களை தவிர்த்திருக்கலாம். இருப்பினும் உறவுகளின் மேன்மையை உணர்வுப்பூர்வமாக சொன்னவிதத்தில் கவனம் ஈர்க்கிறது.