ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'நான் சிரித்தால்'. அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்துள்ள இந்த படத்தை , ராணா எழுதி, இயக்கியுள்ளார்.
பிரச்சனைகள் மற்றும் துயரங்களை எதிர்கொள்ளும் போது சிரிக்கும் வியாதி ஹிப்ஹாப் ஆதிக்கு. இந்த வித்தியாசமான வியாதியோடு தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே நான் சிரித்தால் படத்தின் கதை.
ஹிப்ஹாப் தமிழாவிற்கு வழக்கமான ஜாலி இளைஞர் வேடம். சிரிக்கும் வியாதி உள்ள அவருக்கு ஒரு துன்பம் நேர்கையில் சிரிக்க வேண்டும், அதே நேரம் அவர் அழுவது நமக்கு புரிய வேண்டும். இந்த சவாலான வேடத்தை முடந்தவரை சிறப்பாக கையாண்டுள்ளார். ஹீரோயினாக ஐஸ்வர்யா மேனன் தனது அழகிய நடிப்பால் வசீகரிக்கிறார்.
தாதாவாக கே.எஸ்.ரவிக்குமார் தெனாவாட்டான பார்வை , நக்கலான பேச்சு என் அந்த வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். ரவி மரியா, முனீஸ்காந்த், சிவா ஷாரா, படவா கோபி உள்ளிட்டோர் தங்கள் வேடங்களை சிறப்பாக செய்துள்ளனர். இறுதியாக வரும் யோகி பாபுவின் காமெடிகள் ஆங்காங்கே சிரிக்கும்படி இருந்தது.
காதல், காமெடி என நகரும் படத்துக்கு தனது எனர்ஜியான இசையின் மூலம் கூடுதல் டெம்போ ஏற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா. பாடல்கள் இன்னும் சரியான இடங்களில் சேர்க்கப்பட்டிருக்கலாம். காட்சிகளை கலர் ஃபுல்லாக படமாக்கியிருக்கிறார் வாஞ்சிநாதன் முருகேசன்.
துயரம் நேரும் போது சிரிக்கும் வியாதி உள்ள ஹிப்ஹாப் தமிழாவின் கேரக்டரை ஆங்காங்கே சுவாரஸியமான காட்சிகள் மூலம் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர் ராணா. உதாரணமாக விஜய், அஜித் படங்களுக்கு போகும் ஹிப்ஹாப் ஆதி சோக சீன்களுக்கு சிரிக்க, அதனை பார்த்து ரசிகர்கள் காண்டாகும் காட்சிகள் செம காமெடி. ஆனால் இப்படி ஒரு சில காமெடி காட்சிகள் தவிர முதல் பாதியில் சுவாரஸ்யம் குறைவு.
படவா கோபி தன் மகன் ஹிப்ஹாப் தமிழாவுக்காக ஹீரோயின் வீட்டுக்கு நியாயம் கேட்க போய் செய்யும் ரகளைகள் படத்தில் கலகல மூமெண்ட்ஸ். காதல் காட்சிகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம். பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்த படத்தின் மெசேஜ் நன்றாக இருந்தது. குறிப்பாக தனது பிரச்சனையுடன் மக்களின் ரியாகசன்களை கனெக்ட் செய்த விதம் நச்சுனு இருந்தது.
இரண்டாம் பாதியில் சுவாரஸியமாகவே இருந்தாலும் அவ்வளவு பெரிய தாதாவான கே.எஸ்.ரவிக்குமார் துளியும் ஆராயாமல் ஹிப் ஹாப் தமிழா அண்ட் கோ-வை துரத்துவது போன்ற காட்சிகள் நம்பும்படியாக இல்லை.