சசிக்குமார், அஞ்சலி, பரணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'நாடோடிகள் 2'. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பாக S.நந்தகோபால் தயாரித்துள்ள இந்த படத்தை சமுத்திரக்கனி எழுதி இயக்கியுள்ளார்.
கம்யூனிச ஆதர்வாளர்களான சசிக்குமார், பரணி, அஞ்சலி உள்ளிட்டோர் குழுவாக இயங்கி சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். சாதியால் பிரிக்கப்பட்ட காதல் ஜோடியை சேர்த்து வைக்க போய், அதனால் சசிக்குமார் அண்ட் கோ என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதே நாடோடிகள் 2 படத்தின் கதை.
சமூக அவலங்களுக்கு பொங்கி எழும் ஆங்கிரி யங் மேன் வேடம் சசிக்குமாருக்கு. செங்கொடி என்ற மருத்துவர் வேடம் அஞ்சலிக்கு. இருவரும் சத்தமான பேச்சு, ஆக்ரோஷமான உடல் மொழி என அந்த வேடத்துக்கு சரியாக பொருந்துகிறார்கள்.
வழக்கமான தனது யதார்த்த மதுரை தமிழால் கவர்கிறார் பரணி. சமுத்திரக்கனியின் தாய் மாமாவாக கு.ஞானசம்பந்தத்தின் முகபாவனைகள் சிரிப்பை வரவழைக்கின்றன. அதுல்யா, துளசி, நமோ நாராயணன், ஸ்ரீரஞ்சனி, பவன் உள்ளிட்டோர் தங்கள் வேடங்களை நிறைவாக செய்துள்ளனர்.
படமுழுக்க போராட்டம் பிரச்சனைகள் என பரபரப்பாக நகர, தன் பங்குக்கு, இசையால் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன். சில இடங்களில் இசை இரைச்சலாக இருந்தது. காட்சிகளை முடிந்த வரை நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறது என்.கே.ஏகாம்பரத்தின் கேமரா.
நாடோடிகள் படத்தின் பார்ட் 2 என்பதை நியாபகப்படுத்தும் விதமாக சம்போ சிவ சம்போ பாடல் மிகச் சரியான இடத்தில் வருகிறது. கடந்த 10 வருடங்களில் தமிழகத்தில் நடைபெற்ற சமூக பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.
சாதித் தலைவரின் பொய் வேசத்தை நிரூபிக்க ஒரே சாதியிலும் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கு என்று சசிக்குமார் வசனம் பேசும் காட்சி நன்றாக இருந்தது. திருநங்கை கதாப்பாத்திரத்தை நேர்மறையாக சித்தரித்த விதம் சிறப்பு. சமூக அவலங்களுக்கு எதிராக பேசியிருக்கும் படத்தில் பெரும்பாலான காட்சிகள் வெறும் கருத்துக்களை பிரச்சாரம் செய்வது போல சொல்லியிருப்பது படத்தின் சுவாரஸியத்தை குறைக்கிறது.
பல்வேறு பிரச்சனைகளை மட்டுமே பேசியிருக்கும் படம், ஒரு பாயிண்ட்டுக்கு மேல் சற்று தொய்வான உணர்வை தருகிறது. மாற்றத்தை உடனே எதிர்பார்க்கவில்லை, இப்பொழுது முயன்றால் அடுத்த தலைமுறைக்கு அந்த வெற்றி பக்கத்தில் இருக்கும் என்கிற படத்தின் கோர் லைன் நச்சுனு இருந்தது . ஆனால் ஒரு என்கேஜிங் கதையாக கொடுத்திருக்கலாம்.