விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்டரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். XB Film Creators தயாரித்துள்ள இத்திரைப்படம் இன்று நேரடியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கல்லூரி பேராசிரியராக வேலை பார்க்கும் ஜேடி (விஜய்) குடி பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார். அதுவே அங்கு பிரச்சனையாக அங்கிருந்து வில்லன் பவானி (விஜய் சேதுபதி) தவறான வழியில் பயன்படுத்தி கொண்டிருக்கும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு வருகிறார். அங்கு நடக்கும் தவறுகளை கண்டபின் அவர் எடுக்கும் அதிரடி ரெய்டுகளால் வில்லன் கூட்டத்திடம் இருந்து சிறுவர்களை எப்படி மாஸ்டர் மீட்கிறார்.? என்பதே மீதிக்கதை.
ஜேடியாக விஜய் தனது வழக்கமான பாணியில் இருந்து முற்றிலுமாக விலகி அக்கதாபாத்திரத்தில் மட்டுமே கவனம் செலுத்தியது நிச்சயம் பாராட்டத்தக்க வேண்டிய விஷயம். ரசிகர்களுக்கான மாஸையும் விடாமல் க்ளாஸ் ஸ்டைல் காட்டி மாஸ்டர் ஸ்ட்ரோக் கொடுக்கிறார்.
ஹீரோவுக்கு இணையான ரோல் வில்லன் விஜய் சேதுபதிக்கு. தனது அலட்டலான நடிப்பாலும் நக்கலான பேச்சாலும் கிடைத்த கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்து அசத்துகிறார். அர்ஜுன் தாஸும் தனது கதாபாத்திரத்தில் உயிர்ப்புடன் நடித்து கவனிக்க வைக்கிறார்.மாளவிகா மோகனன், அண்ட்ரியா, ஷாந்தனு, கௌரி கிஷன், தீனா, பூவையார் என எல்லோரின் பங்கும் கச்சிதமாக வேலை செய்துள்ளது.
மாஸ்டர் படத்தின் நேர்த்தியை ஒளிப்பதிவில் சத்யன் சூர்யனும் எடிட்டிங்கில் பிலோமின் ராஜும் தூக்கி பிடிக்க, தனது BGM மற்றும் பாடல்களால் திரையரங்குகளை தெறிக்க விடுகிறார் அனிருத். சண்டை காட்சிகளில் ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவின் பங்கு கவர்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ராவான சினிமாவையும் விடாமல் பக்கா ஹீரோயிக் படமாக மாஸ்டரை இயக்கியதில் வெற்றி பெறுகிறார். சிறுவர் சீர்திருத்த பள்ளி காட்சிகளில் சுவாரஸ்யம் கூட்டி ரசிகர்களுக்கும் விருந்து வைத்ததில் லோகேஷூக்கு சபாஷ்.
மூன்று மணி நேரத்திற்கு நெருங்கிய நீளமும் ப்ரீ க்ளைமாக்ஸ் காட்சியும் கதையின் ஓட்டத்தில் ஸ்பீட் பிரேக்கர் போடுகிறது. சில காட்சிகள் பரபரப்பாக நகர்ந்து கவனிக்க முடியாத நிதானத்தில் செல்வது மைனஸ்.