யோகி பாபு நடிப்பில் அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ள திரைப்படம் மண்டேலா. சங்கிலி முருகன், ஷீலா ராஜ்குமார், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நேரடியாக இப்படம் விஜய் டிவியில் வரும் ஞாயிறன்று ரிலீஸ் ஆகிறது. மேலும் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாகவுள்ளது.
சூரங்குடி என்கிற கிராமம் வடக்கூர் - தெக்கூர் என இரண்டு சாதிகளாக பிரிந்து கிடக்கிறது. அந்த ஊரில் பிரசிடெண்ட் எலக்ஷன் நடைபெற, அவ்வூர் மக்களால் ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கின்ற மண்டேலா (யோகிபாபு), யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறுகிறார். மண்டேலாவின் ஒற்றை ஓட்டுக்காக என்னவெல்லாம் நடக்கிறது..? இறுதியில் வெற்றி பெற்றது யார்.? என்பதே மீதிக்கதை.
நெல்சன் மண்டேலாவாகவும் கதையின் நாயகனாகவும் யோகி பாபு, இப்படத்திற்கு சரியான தேர்வு. அவரின் சுருட்டை முடி தோற்றமும், அப்பாவித்தனம் வழியும் முகமும் இக்கதாபாத்திரத்திற்கு பக்கவாக பொருந்துகிறது. நடிப்பிலும் நகைச்சுவையிலும் எந்த குறையுமின்றி நடித்து க்ளாப்ஸ் அள்ளுகிறார். நிச்சியம் விருதுகளை எதிர்பார்க்கலாம்.
ஷீலா ராஜ்குமாரின் முகம் கிராமத்து களத்திற்கேற்ப அமைந்திருக்கிறது. தனது கணீர் குரலால் நம்மை கவனிக்க வைக்கிறார். சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி ஆகியோர் யதார்த்தமான நடிப்பை கொடுத்து செல்கிறார்கள். மேலும் அவ்வூரின் மாந்தர்களாக நடித்திருக்கும் அனைவருமே, சூரங்குடியின் யதார்த்தத்தை நமக்குள் கடத்துகிறார்கள். அனைத்து கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் முழுமையாக நிறைவடையும் வகையில் அமைந்திருப்பது, சிறப்பான எழுத்துக்கு கிடைத்த வெற்றி.
படத்தின் மற்றுமொரு ஹீரோ, இசையமைப்பாளர் பரத் சங்கரின் இசை. மண்டேலா என்கிற பெயருக்கு ஏற்ப, அவர் படம் நெடுக பின்னணி இசையில் பயன்படுத்தியிருக்கும் ஆப்பிரிக்க ஒலி அமைப்பு படத்தை எந்த இடத்திலும் தொய்வுண்டாகாமால் கடத்த உதவுகிறது. மேலும் அதுவே இக்களத்திற்கு பொருந்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது அழகு. பாடல்களிலும் அதே அளவுக்கு ரசிக்க வைத்து லைக்ஸ் அள்ளுகிறார். பலமான திரைப்பயணம் காத்திருக்கிறது.
வித்யூ அய்யன்னாவின் கேமரா அவ்வூரின் அசல் தன்மையை நேர்த்தியாக திரையில் கொண்டு வந்துள்ளது. பிலோமின் ராஜின் எடிட்டிங் படம் போகும் வேகத்தில் நம்மை ஒன்றி பயணிக்க வைக்க உதவுகிறது. ஒரு சிறிய கிராமத்தின் அத்தனை உணர்வுகளையும் நமக்குள் கொண்டு வந்துவிடுவதில் ஆர்ட் டைரக்டர் ராமு தங்கராஜுக்கு சபாஷ்.
ஷார்ட் பிலிம்களில் இருந்து பெரிய திரைக்கு எண்ட்ரி கொடுத்திருக்கும் புதியதொரு இயக்குநர் மடோன் அஷ்வின், முதல் படத்திலேயே கவனிக்க வைக்கிறார். பொலிட்டிக்கல் சட்டையர் என எடுத்து கொண்டு, நிகழ்கால அரசியல் நடப்புகளை வலிந்து திணிக்காமல், படத்தின் இயல்போடு பயன்படுத்தியிருப்பது அழகு. படம் முழுக்கவே அரசியல் நையாண்டி பளீச்சிடுகிறது.. பாராட்டுக்கள்.!
ஆரம்பத்தில் படு ஜோராக ஆரம்பிக்கும் கதை, அதை தொட்டு ஒரே இடத்தில் தேங்கியிருப்பதான உணர்வுகள் சில இடங்களில் எட்டிப்பார்க்கின்றன. அது மட்டுமே குறையாக இருக்கிறது. ஆனால், க்ளைமாக்ஸ் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, புத்திசாலிதனமாக அதற்கு நேர்மையும் சேர்த்திருக்கிறார் இயக்குநர்.
ஓட்டுரிமை, தேர்தல் என அவசியமான களத்தில் ஆழமான கருத்தை பேசிய மண்டேலாவை நிச்சியம் தவிர்க்கவிட கூடாது.!