வைபவ், வெங்கட் பிரபு, வாணி போஜன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கும் படம் 'லாக்கப்'. நடிகர் நிதின் சத்யா தயாரித்திருக்கும் இந்த படத்தை எஸ்.ஜி.சார்லஸ் எழுதி இயக்கியுள்ளார்.
இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் மல்லிகா என்ற பெண்ணின் மரணங்களை ஈஸ்வரி ராவ் தலைமையிலான போலீஸ் குழு விசாரிக்கிறது. ஒரு கட்டத்தில் இரண்டு கொலைகளுக்குமான தொடர்பை கண்டுபிடிக்கிறார் ஈஸ்வரி ராவ். அந்த தொடர்பு என்ன ? குற்றவாளிகள் யார் ? என்ற கேள்விகளுக்கு திரில்லர் பாணியில் விடை சொல்லியிருக்கும் படமே 'லாக்கப்'.
போலீஸ் எஸ்ஐ வெங்கட் பிரபு, போலீஸ் கான்ஸ்டபிளாக வைபவ், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி ராவ் ஆகியோரின் கதாப்பாத்திரங்களை மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்ஜி சார்லஸ். அவர்களும் அவற்றை திறம்பட கையாண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக கிளைமேக்ஸிற்கு முன்பாக வெங்கட் பிரபு - வைபவ் மிரட்டியிருக்கின்றனர். அதுவும் வெங்கட் பிரபு வேற லெவல். வைபவின் காதலியாக வாணி போஜன், எளிய குடும்பத்து டீன் ஏஜ் பெண்ணின் அம்மாவாக பூர்ணா தங்கள் வேடங்களை சரியாக செய்திருக்கின்றனர்.
முதலில் இருந்தே இரண்டு கொலைகளுக்கும் வெங்கட் பிரபு மற்றும் வைபவிற்கு தொடர்பு இருப்பதாக பார்வையாளர்களுக்கு உணர்த்தி விட்டு, ஆனால் அது எப்படி என்று வழக்கமான திரில்லர் பாணியில் இருந்து விலகி வித்தியாசமான கோணத்தில் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
'நிரபராதிகளை கொலை பண்றதுக்கு நாங்க என்ன போலீஸா?' என்பது போன்ற வசனங்கள் சில இடங்களில் நன்றாக இருந்தது. சில காட்சிகளை முன்பே கணிக்க முடிவதால் அக்காட்சிகளில் சுவாரஸியம் குறைவு. மேலும் சில முக்கிய காட்சிகள் உணர்வுப்பூர்வமாக சரியாக இருந்தாலும் லாஜிக் ரீதியாக குறையாக தெரிகின்றன.
அரோல் கரோலியின் பின்னணி இசை காட்சிகளின் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கிறது. குறிப்பாக சில உணர்வுப்பூர்வமான காட்சிகளில் வயலின் இசை மேலும் வலு சேர்த்துள்ளது. காட்சிகளை நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தானம் சேகர்.
ஒரு திரில்லர் படத்தில் சட்ட ரீதியாக குற்றவாளிகளை அணுகுவது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டோர் கோணத்திலும் குற்றவாளிகளை அணுகுவதை காட்டியிருப்பது நன்றாக இருந்தது. சில குறைகள் இருந்தாலும் ஒரு உணர்வுப்பூர்வமான திரில்லர் படமாக கவனம் ஈர்த்தது 'லாக்கப்'.