மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் லாபம். விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், கலையரசன், ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி புரொடக்ஷன் மற்றும் 7c’s Entertainment இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
6 வருடங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி உலகம் முழுவதும் சுற்றி திரிந்துவிட்டு ஊருக்கு வருகிறார் பக்கிரி (விஜய் சேதுபதி). அங்கே உள்ளூர் முதலாளிகளால் விவசாய மக்கள் சுரண்டுப்பட்டு வருவதை அறிந்து, அவர்களுக்கான மீட்பு போராட்டத்தை கையில் எடுக்கிறார். இந்த போராட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
பக்கிரியாக விஜய் சேதுபதி எப்போதும் போல தனது அலட்டலான உடல் மொழி காட்டி அசத்துகிறார். பெரும்பாலான வசனங்கள் தகவல்களாக இருக்க, அதை முடிந்தளவு பிரச்சாரமாக இல்லாமல் நமக்குள் கடத்துகிறார். எனினும் படங்களில் அல்லாமல் எதார்த்தமாக நாம் பார்க்கும் விஜய் சேதுபதியாகவே வருகிறார். பக்கிரி கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் வெரைட்டி காட்டியிருக்கலாம்.
க்ளாராவாக ஸ்ருதி ஹாசன். அறிமுக பாடலிலேயே தனது நடனத்தால் கவர்கிறார். நடிப்பதற்கென்று பெரிதாக இடம் இல்லாவிட்டாலும், கிடைத்த இடங்களில் கலகலப்பூட்டி ரசிக்க வைக்கிறார். கலையரசன், டேனியல், ப்ருத்விராஜ் என விஜய் சேதுபதிக்கு பக்கபலமாக வரும் இளைஞர் பட்டாளம் படத்திற்கும் பலம் சேர்க்கிறார்கள்.
டி.இமானின் பாடல்கள் கேட்டதும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையிலும் படத்தின் தேவையை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார். ராம்ஜியின் கேமரா, பசுமையையும் வறட்சியையும் ஒருங்கே படம் பிடித்து காட்டுகிறது.
எப்போதுமே தனது படங்களின் வழியாக உலக அரசியலையும், மக்களுக்கான கருத்துக்களையும் தொடர்ந்து பேசி வந்த எஸ்.பி.ஜனநாதன், இத்திரைப்படத்திலும் அதற்கு குறை வைக்கவில்லை. குறிப்பாக வசனங்களில் தீப்பொறி தெறிக்கிறது. உணவு அரசியல், பொருளாதாரம், லாபம் என்கிற பெயரிலான கொள்ளை, பொதுவுடமை என படம் நெடுக புரட்சிகர கருத்துக்களை எளிமையாகவும் ஆழமாகவும் சொல்லியதற்காகவே, இயக்குநருக்கு ரெட் சல்யூட்.
கருத்தியல் ரீதியாக உரக்க பேசும் திரைப்படத்தில், திரைக்கதை துவண்டு போவது மைனஸ். படமாக்கப்பட்ட விதத்திலும் சட்டென முடியும் க்ளைமாக்ஸிலும் கூடுதல் மெனக்கெடலை காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.