தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் கர்ணன். கலைப்புலி S தாணு தயாரித்துள்ள இத்திரைப்படம் நேரடியாக தியேட்டரில் வெளியாகியுள்ளது.
பொடியங்குளம் என்கிற கிராமத்தினர் நெடுநாட்களாக தங்களது ஊரில் பஸ் நிற்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஒருகட்டத்தில் அதே கோரிக்கையை கர்ணன் (தனுஷ்) வாளேந்தி கேட்க, அதற்கு பின்னர் என்ன ஆனது.? அடக்க நினைக்கும் அதிகார வர்க்கத்திற்கு அவர்கள் கொடுத்த பதில் என்ன? என்பதே மீதிக்கதை.
கர்ணனாக தனுஷ் அந்த கிராமத்து ஆளாகவே மாறியிருக்கிறார். நடிப்பதில் கொஞ்சமும் சிரமம் காட்டாமல் பார்வைகளாலேயே அசத்துகிறார். தனுஷின் கரியரில் கர்ணன் மற்றுமொரு மகுடம்.
ஏமராஜாவாக வரும் லால், தோற்றத்திலும் நடிப்பிலும் கம்பீரம். ரஜிஷா விஜயன், கௌரி, லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி உள்ளிட்டோர் இக்கதைக்கு சரியான பங்களிப்பை கொடுக்கிறார்கள். வில்லத்தனத்தில் நட்டி அசால்டு காட்டுகிறார். குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில் நம்மை உறைய வைக்கிறார். யோகி பாபுக்கு காமெடியை கடந்த நல்ல ரோல் இப்படத்தில்.
படத்தின் உணர்வுகளை நமக்குள் கடத்துவதில் சந்தோஷ் நாராயணன் இசைக்கு பெரும் பங்குண்டு. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பாடல்கள் அனைத்துமே ரசிக்க வைக்கிறது.
தேனி ஈஸ்வரின் கேமரா இயக்குநரின் சிந்தனையை அப்படியே திரையில் கொண்டு வருகிறது. அக்கிராமத்தின் நிலப்பரப்பை அழகாகவும் நேர்த்தியாகவும் படம் பிடித்திருக்கிறது.
ஆர்ட் டைரக்ஷனில் ராமலிங்கம் காட்டியிருக்கும் உழைப்பு அபாரம். அந்த கிராமமே செட் என்பதை நம்ப முடியாத வகையில் அமைத்திருக்கிறார். செல்வாவின் எடிட்டிங் கச்சிதம்.
பரியேறும் பெருமாள் மூலம் பெரும் பாராட்டுக்களை குவித்த மாரி செல்வராஜுக்கு இயக்குநராக அடுத்தக்கட்ட பாய்ச்சல் இது. பெரிய ஹீரோவின் படத்திலும் தனது ட்ரேட்மார்க்கை பதித்துள்ளார். பல்வேறு குறியீடுகளுடன் காட்சி மொழியில் படத்தை அணுகியிருப்பது சிறப்பு.
இடைவேளையில் இருந்த மிரட்சி க்ளைமாக்ஸில் மிஸ் ஆகிறது. எனினும் சொல்ல வந்த விஷயத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்லிய விதத்தில் கர்ணன் கவர்கிறது.