லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, உள்ளிட்டோர் நடித்து வெளியாகியிருக்கும் படம் காப்பான். இந்தியாவின் பிரதமராக சத்யபிரகாஷ் வர்மா. அவருக்கு எஸ்பிஜி என்ற பாதுகாவல் அதிகாரியாக கதிரவன். பிரதமரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட, அதனை தடுத்து அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அழிக்கிறார் என்பதே இந்த படத்தின் கதை.
கதிரவன் என்கிற எஸ்பிஜி அதிகாரியாக சூர்யா. கமர்ஷியல் ஹீரோவாக ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ், சென்டிமென்ட் என அனைத்து ஏரியாக்களிலும் சிக்ஸர் அடிக்கிறார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் அவரது கடின உழைப்பு தெரிகிறது. பிரதமராக மோகன்லால் அந்த வேடத்துக்கு சரியாக பொருந்துகிறார். பரபரவென நகரும் படத்தில் துறுதுறு இளைஞனாக தனது குறும்புத்தனமான படிப்பால் வசிகரிக்கிறார் ஆர்யா.
தனது முதிர்ச்சியான நடிப்பால் சூர்யாவிற்கு மட்டும் அல்லாமல் படத்துக்கும் பெரும் துணை புரிந்திருக்கிறார் சமுத்திரக்கனி. நடிப்பதற்கான வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார் சாயிஷா, ஆனால் விறுவிறுப்பான ஆக்ஷன் திரைக்கதையில் ரொமாண்டிக் காதல் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகிறது. நாட்டின் நடப்பு அரசியலையும், தமிழ்நாட்டின் முக்கிய சமூக பிரச்சனைகளையும் படத்தில் கதையுடன் சரியாக இணைத்திருப்பது படத்தின் நம்பகத்தன்மையை அதிகரித்தது.
ஆக்சன் காட்சிகளின் வடிவமைப்பும் அதனை படமாக்கியவிதமும் சிறப்பாக இருந்தது. பிரதமரின் பாதுகாப்பு முறைகள் எப்படி இருக்கும் என்பதே விவரமாக சொல்லப்பட்டிருக்கிறது.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு பரப்பான சண்டைக்காட்சிகளில் கூடுதல் பரபரப்பை சேர்த்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளை வலுவூட்டியிருக்கிறது.
சூர்யாவின் அதிகப்படியான அதிகாரம் படத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைத்தாலும், ஒரு மாஸ் கமர்ஷியல் படத்தில் அதை ரசிக்கலாம். ஒரு பாதுகாப்பு அதிகாரியாக இருந்து கொண்டு உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிடுவது போன்ற காட்சிகளை இன்னும் நம்பும்படியாக பதிவு செய்திருக்கலாம். இருப்பினும் ஒரு ஆக்சன் டிராமாவாக கவனம் ஈர்க்கிறான் இந்த காப்பான்.