நாளைய இயக்குநர் சீசன் – 3யில் கலந்து கொண்டு, இறுதி சுற்றி வரை முன்னேறி இப்போது கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ஸ்ரீசெந்தில், காளிதாஸ் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் பரத், ஆன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சென்னையில் பெண்கள் வரிசையாக உயரமான கட்டடங்களில் இருந்து விழுந்து இறக்கிறார்கள். தற்கொலைகள் என்று ஆரம்பத்தில் நம்பப்படும் அந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் மர்ம நபர் யார் என்பதை கண்டுபிடிக்க நடக்கும் இன்வஸ்டிகேஷன் தான் 'காளிதாஸ்'.
அரம்பத்தில் தற்கொலைகளுக்கு 'ப்ளூ வேல்' விளையாட்டு தான் காரணம் என்று நம்பவைக்கும் இயக்குனர் அடுத்தடுத்த திருப்புமுனைகள் மூலம் கதையை முற்றிலும் மாறுபட்ட பாதையில் திருப்புகிறார்.
போலீஸ் அதிகாரி என்றாலே மிடுக்காகவும், 24X7 புத்திசாலிகளாகவும் மட்டுமே இருப்பார்கள் என்ற ஸ்டீரியோடைப்பை உடைக்கிறார் பரத். காளிதாஸ் கதாப்பாத்திரத்தில் அவர் நிறைகுறைகள் கொண்ட ஒரு யதார்த்தமான போலீஸாக மனதில் நிற்கிறார்.
ஆதவ் கண்ணதாசன் ஒரு வித்தியாசமான ரோலுக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பாடலும் பின்னணி இசையும் மனதை வருடுகின்றன.
ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா தேவையற்ற ஷாட் எதையும் வைக்காமல் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
பரத்தின் விசாரணையில் முதல் 30 நிமிடத்திலேயே கதையை முடிக்கப் போவது போல் எதிர்பார்க்க வைத்துவிட்டு மீண்டும் அதே கேசை வேறு கோணத்தில் தொடங்கியது புதிய யுக்தி. வசனங்கள் ஒரு சில இடங்களில் நெருடினாலும் பல திருப்புமுனைகள் நிறைந்த விறுவிறுப்பான படம் காளிதாஸ்.