ஈரோஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால், ஸ்ரியா பில்கோன்கர், ஜோயா ஹுசைன் நடித்துள்ள திரைப்படம் காடன்.
காசிரங்கா காட்டுக்கு நடுவில் டவுன்ஷிப் கட்டப்படுவதற்கு எதிராக நடந்த நிஜ போராட்டத்தை கண்முன் கொண்டு வந்துள்ளது இப்படம்.
'பாகுபலி' ராணா தன் கட்டுமஸ்தான உடல் எடையை குறைத்து, உழைப்பை கொடுத்து நடித்துள்ளார். க்ளைமாக்ஸில் காட்டு யானையே அவரை வாரி அணைத்துக் கொள்ளும் காட்சியில் நம் உள்ளத்தில் அமர்கிறார். கும்கி யானையுடனான நடிப்பிலும் சரி, ஃபிட்டான உடற்கட்டிலும் சரி வித்தியாசமான விஷ்ணு விஷாலை பார்க்க முடிகிறது. கும்கி யானை 'ஜில்லு' இறக்கும்போது அவரின் நடிப்பு நெஞ்சில் பதிகிறது.
‘யானைகளின் வீட்டுக்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்’, ‘மரம் பூமியின் நுரையீரல்.. அத புடுங்கி போட்டா பூமி திணறும்’, ‘அசோகர் மரத்த நட்டார்னு மட்டும் சொல்லிக் கொடுக்காதிங்க. அந்த மரத்த வெட்டக்கூடாதுனு சொன்னார்னு சொல்லிக் கொடுங்க’ என வசனங்கள் ப்ளீச்.
7 காடுகளுக்குள் புகுந்து விளையாடி ஒரே பிரம்மாண்ட காடாக நம் கண் முன்னே காடனை பரிசளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.அஷோக் குமார். சாந்தனு மோயித்ரா தடதடக்கும் இசையில் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறார். யானைகளை வைத்து சண்டைக் காட்சிகளை ரியாலிட்டியுடன் கொடுத்துள்ளனர் ஸ்டன்னர் சாம் மற்றும் ஸ்டண்ட் சிவா.
கும்கி யானைகள் பற்றி சரியான புரிதலை கும்கி படத்தில் கொடுத்த பிரபு சாலமன் இப்படத்தில் 15க்கும் மேற்பட்ட யானைகளை நடிக்க வைத்து அவற்றின் சைக்காலஜி வரை டீடெயில் செய்து பிரித்து மேய்கிறார். காட்டுக்குள் கார்ப்பரேட் அரசியல், யானைகளின் உயிர் வள ஆதாரம், காட்டை ஒட்டிய மக்களின் வாழ்க்கை போராட்டம் என அனைத்தையும் அக்கறையுடன் பேசியிருக்கிறார்.
ராணாவின் அளவுக்கு காட்டை ஒட்டி இருக்கும் மக்களின் வாழ்வியல் ரிஜிஸ்டர் ஆகவில்லை. கார்ப்பரேட் வில்லன்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். ரிப்போர்ட்டராக வரும் நாயகி ஸ்ரியா உட்பட கதையில் யாருமே இந்த பிரச்சனைக்காக 'இன்றைய உலகின் பலம் பொருந்திய' சோஷியல் மீடியாவை ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என தோன்றுகிறது.
காட்டுக்குள் இருக்கும் இன்னொரு நாயகி ஜோயா ஹுசைனின் ஆயுதப் படையும், விஷ்ணு விஷாலின் மேலோட்டமான ஒருதலைக் காதலும் கதைக்கு உதவவில்லை. தன் கும்கி யானை இறந்ததுமே அவர் போர்ஷனும் கதையிலிருந்து துண்டிக்கப்பட்டு விடுவது வருத்தமளிக்கிறது. விஷ்ணு விஷால் மற்றும் ரகுபாபுவின் காமெடி காட்சிகள் பெரிதாக ஒட்டவில்லை.
இத்தனை லாஜிக் விஷயங்களும், வலுவான திரைக்கதைக்கான தேவையும் படத்தில் இருந்தாலும் மனிதர்களின் ஆடம்பர தேவைக்காக அத்தியாவசிய காடுகள் அழிக்கப்படுவதால் யானைகளின் எண்ணிக்கை விகிதம் குறைகிறது. இது தொடர்ந்தால் அந்த இனமே அழிந்து விடும் என்பதை கிட்டத்தட்ட இந்திய அளவில் முதல் முறையாக பதிவு செய்திருக்கிறது பிரபு சாலமனின் காடன்.