8 தோட்டாக்களுக்கு பிறகு வெற்றி ஹீரோவாக களமிறங்கியிருக்கும் படம் 'ஜீவி'. ஹீரோ வெற்றி, கடை ஒன்றில் பணியாளராக வேலை செய்கிறார். அவருக்கு ஏற்படும் காதல் தோல்வி, வாழ்வில் முன்னேற்றமில்லாமை போன்றவற்றால் மன அழுத்தத்தில் இருக்கிறார்.
ஒரு நாள் அவரும் அவர் நண்பர் கருணாகரனும் இணைந்து அவர்களது வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்து நகைகளை கொள்ளையடித்து அதனை மறைக்க முயல்கின்றனர். அதனால் ஏற்படும் பின் விளைவுகளே இந்த படத்தின் கதை.
ஹீரோவாக வெற்றி, தன் கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். கருணாகரன் வெறும் காமெடியனாக மட்டும் இல்லாமல் இந்த படத்தில் அவருக்கு கனமான வேடம். அதனை சிறப்பாக செய்திருக்கிறார். மேலும் அவரது காமெடிகள் சிரிப்பை நன்றாகவே வரவழைக்கின்றன.
பட்டர்பிளை எஃபெக்ட் என்பதற்கேற்ப பல்வேறு கிளைக்கதைகளை நேர்த்தியாக ஒன்றிணைத்திருக்கிறார்கள் எழுத்தாளர் பாபு தமிழும், விஜே கோபிநாத்தும். சுந்தரமூர்த்தி கே எஸ், ஒரு திரில்லர் படத்துக்கு தேவையான இசையை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்.
பல்வேறு கதைகளை இணைவதால் சற்று குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருந்தும் அதனை நேர்த்தியான திரைக்கதையின் மூலம் எளிமையாக மக்களுக்கு புரியும் படி சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதனை தெளிவாகவும் , சுலபமாகவும் புரியும் படி எடிட் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல்.
சில தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்று சஸ்பென்ஸ் திரில்லருக்கு தேவையான திரைக்கதையால் மனதில் நிற்கிறது இந்த ஜீவி.