ஜோதிகா & சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார்.
தமிழகத்தில் 1995-ல் தொடங்கும் கதையில் ராஜாக்கண்ணுவாக வரும் மணிகண்டன் உள்ளிட்ட 3 பழங்குடி இருளர் இன இளைஞர்களை சந்தேக திருட்டு கேஸில் பிடித்து தங்கள் பாணியில் விசாரிக்கிறது போலீஸ். அவ்வின பெண்களையும் மனித உரிமைக்கு அப்பாற்பட்டு போலீஸார் விசாரிக்கின்றனர். ஒரு கட்டத்தில் அந்த இளைஞர்கள் காணாமல் போனதாக போலீஸ் கூற, செங்கேனியாக வரும் மணிகண்டனின் மனைவி ஊரில் இருக்கும் படித்த பெண்ணான ரஜிஷா விஜயன் மூலமாக சூர்யாவை நாடுகிறார். சந்துரு எனும் நேர்மையான வழக்கறிஞரான சூர்யா எவ்வித எதிர்பார்ப்புமின்றி இவ்வழக்கில் நீதிக்காகவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காகவும் போராடுகிறார்.
ஷான் ரால்டன் இசையிலும் குரலிலும் திரைக்கதை பார்வையாளரின் கரிசனத்தை பெறுகிறது. கிராமம் - நகரம், கருப்பு - வெள்ளை மனிதர்கள், காவல் நிலையத்தின் கோர பக்கம், இருளர்களின் வாழ்வில் நிலவும் இருள் என அனைத்தையும் அதன் தன்மை மாறாமல் காட்டுகிறது எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு. ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் நூல் பிடித்தாற்போல் செல்கிறது. வீரப்பன் வழக்கு, பம்பாய் திரைப்படம் என காலக்கட்டத்தை பிரதிபலிப்பதிலும் சரி, பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் நாகரிகத்தை காட்டியதிலும் சரி, கோர்ட் ரூமை புதிதாக காட்டியதிலும் சரி கலை இயக்குநர் கதிரின் பணி கவனிக்க வைக்கிறது.
எண்ட்ரி முதல் இறுதிவரை சூர்யாவின் துடிப்பு குறையவில்லை. நிஜ நீதிமான் சந்துரு அவர்களை கண்முன் கொண்டுவந்துள்ளார். கோபம், ஆற்றாமை, அறச்சீற்றம் என காட்சிக்கு காட்சி அசரவைத்துள்ளார். பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியலையும், வலிகளையும் தாங்கி சுமக்கும் மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் இருவரும் உடல், மொழி, உணர்ச்சி என தேர்ந்த நடிப்பை தந்துள்ளனர். காவலர்களிடம் அடிவாங்கும்போது மணிகண்டன் கலங்கவைக்கிறார்.
கொடுக்கப்பட்ட களத்தில் நின்றாடுகிறார் ரெஜிஷா விஜயன். மணிகண்டனின் அக்காவாக வரும் சுபத்ரா, காவல் நிலைய அநீதியின் கீழ் நசுங்கும்போது நடுங்கவைக்கும் நடிப்பை பங்களித்துள்ளார். பிரகாஷ் ராஜின் கதாபாத்திரம் ஒரு முன்னுதாரணம். அசுரன் படத்தில் ஈட்டியுடன் சண்டைக்கு வரும் இயக்குநர் தமிழரசன் ஜெய்பீமில் மிரட்டியிருக்கிறார். சூர்யா - எம்.எஸ்.பாஸ்கரின் காம்போ சுவாரஸ்யம் கூட்டுகிறது. அவர்களுக்கு இடையிலான காட்சிகளை கூட்டியிருக்கலாம். கதை முழுவதும் பயணிக்கும் ஜெயபிரகாஷ் பாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார்.
ரெஜிஷா விஜயனின் பாத்திர படைப்பு இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம். இருளர் இன குழந்தைகளின் கல்வி வாய்ப்புகள், அவர்களுக்கான சாதி பிரிவு மற்றும் சாதிய இட ஒதுக்கீட்டு வாய்ப்புகள் என்ன? உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்தி இருக்கலாம். போலீஸ் ஜீப்பில் லிஜோ மோல் ஜோஸ் ஏற மறுத்த பின்னும் அவரது ஊர், தெரு, வீடுவரையிலும் காவல்துறையினர் ஜீப்பில் ஏறும்படி கெஞ்சிக்கொண்டு பின்னாலேயே போவது நம்பும்படியாக இல்லை. மணிகண்டனின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவர் இறந்த நேரம் கணக்கிடப்பட முடியாததற்கு வலுவான காரணம் இல்லை. இருட்டப்பனின் போன் கால் விவகார சாட்சியில் உள்ள ட்விஸ்ட் மேலோட்டமானது. சூர்யா உட்பட கோர்ட்டில் இருக்கும் யாருக்குமே அது தோன்றாமல் போவதும், இத்தனை பெரிய கூட்டத்தை எதிர்க்கும் சூர்யாவுக்கு சிறு அளவிலும் மிரட்டல்கள் வராமல் போவதும் திரைக்கதையில் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவை.
அம்பேத்கர், தோழர்கள், புரட்சி, கருத்து, பழங்குடி மக்கள், கோர்ட் டிராமா உள்ளிட்ட காரணிகள் இருந்தாலும், சமரசம் செய்துகொள்ளாமல் ஒரு க்ரைம் த்ரில்லர் திரைக்கதைக்கு உண்டான சஸ்பென்ஸை கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது. இதேபோல் சூர்யா போன்ற ஒரு நடிகர் ஃபைட், டான்ஸ் என வெகுஜன பொழுதுபோக்கு அம்சங்களை சமரசம் செய்து கொண்டு சந்திரு எனும் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து இருப்பது பாராட்டுதலுக்குரியது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்படும் நீதி, அவர்களுக்கு நடந்த அநீதியை விட கொடுமையானது என்று சூர்யா பேசும் வசனத்தை சம்மட்டி அடித்தாற்போல் உணரவைக்கிறது ஜெய்பீம். அப்பாவி இருளர்களை அடித்து இழுத்துச் செல்லும்போது பச்சிளம் குழந்தை ஒன்று அழுதுகொண்டே ஓடிவரும் அந்த ஒரு ஷாட் உலுக்கி எடுக்கிறது. காவல்துறையும், நீதித்துறையும் ஜனநாயகத்தின் தூண்கள் என்பதை உணர்த்தும் காட்சிமொழியாக, கடைசி காட்சிகளில் தூண்களுக்கு நடுவில் போலீஸாக பிரகாஷ் ராஜூம், வக்கீலாக சூர்யாவும் நிற்கும் அந்த ஃப்ரேம் ‘ஜெய்பீம்’ படத்துக்கு சல்யூட் அடிக்க வைக்கிறது!