பரியேறும் பெருமாளுக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு நீலம் புரடக்ஷன்சின் இரண்டாம் தயாரிப்பு ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. பா.ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கி உள்ளார்.
இரும்புக்கடை ஒன்றில் லாரி ஓட்டுநராக பணியாறுகிறார் தினேஷ். பல கைகள் மாறி அவரிடம் வந்து சேர்கிறது ஒரு குண்டு. அதை வைத்து அதிகாரம் மிக்க ஒருவரின் முகத்திரையை கிழிக்க துடிக்கிறார் செய்தியாளர் ரித்விகா. இதை தடுக்க முயற்சிக்கிறது போலீஸ். விளைவு என்ன என்பதை வரலாறும், சமூக நோக்கும் கலந்த Seat Edge த்ரில்லராக தந்திருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.
தினேஷ் அடித்தட்டு வாழ்வில் இருந்து மீளத்துடுக்கும் லாரி டிரைவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னை டிரைவர் என்று அதட்டும் கார் ஓட்டுனர் மீது எரிந்து விழும் காட்சி ஒரு உதாரணம். அவருக்கு ஜோடியாக வரும் ஆனந்தி அழகில் மிளிர்கிறார்.
ஆரம்பத்தில் நெகட்டிவ் ரோல் போல வந்தாலும் படம் முழுக்க சிரிக்க வைக்கிறார் முனீஸ்காந்த். தீவிர சமூக செயல்பாட்டில் ஈடுபடும் பெண்ணாக ரித்விகா கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
வரலாற்றின் இருண்ட நிகழ்வு ஒன்றை, ஒரு சமூகத்தின் விளிம்புநிலை மனிதனோடு பிணைத்து புதுவிதமாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.
அடித்தட்டு மக்கள் மீதான அறுவறுப்பு, தினமும் நாம் கடந்து போகும் தொழிற்சாலை விபத்து செய்திகள் அவைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மைகள், அதிகாரம் மிக்கவர்களின் திட்டங்கள் என்று ’குண்டு’ பல்வேறு விவகாரங்களின் மறுபக்கத்தை பேசுகிறது.
கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு கதையோட்டத்துக்கு வலு சேர்த்திருக்கிறது. தென்மாவின் இசையில் தனிக்கொடியின் ’மாவுளியோ மாவுளி’ பாடல் மீண்டும் கேட்க தூண்டுகிறது. பின்னணி இசையில், முக்கியமாக குண்டு வரும் காட்சிகளில் பதற வைக்கிறார் தென்மா.
ஜப்பானில் அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டு, மீண்டுவாழ வேண்டும் என்ற ஆசையில் ஆயிரம் காகித கொக்குகள் செய்த சிறுமி சடாக்கோவின் கதை படத்தில் சிறப்பாக பயன்படுத்தப் பட்டுள்ளது.
சமூக பிரச்சினை பற்றின படம் என்றாலே வறட்சியான திரைக்கதை கொண்டவை என்றொரு பொதுக்கருத்து உண்டு. ஆனால், அதை விறுவிறுப்பாகவும் சொல்ல முடியும் என்று இரண்டாவது முறை நிரூபித்திருக்கிறது நீலம் புரடக்ஷன்ஸ்.