குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கியிருக்கும் படம் ‘ஜிப்ஸி’.ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S.அம்பேத் குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படத்தில் ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஸ், சன்னி வெய்ன், சுசிலா ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு SK. செல்வகுமார், படத்தொகுப்பு ரேமெண்ட் டெரிக் க்ராஸ்டா. காதலைப் பின்புலமாக வைத்து சமூகச் சிந்தனையுடன் உரத்த குரலில் அரசியல் பேசுகிறது ஜிப்ஸி.
குழந்தையாக இருக்கும் போதே பெற்றோரை இழந்துவிட்ட ஜிப்ஸியை (ஜீவா) நாடோடியான வழிப்போக்கரான சீனியர் என்பவர் வளர்த்தெடுக்கிறார். அவனுக்கு தன்னுடைய இசையையும், ஞானத்தையும் ஊட்டி வளர்த்து ஆளாக்குகிறார். ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிட, ஜிப்ஸி தனியனாகிறான். ஆனாலும் தொடர்ந்து பயணத்தையே வாழ்க்கையாக மாற்றி கொண்டாடி மகிழ்கிறான். அப்படி ஒரு பயண இளைப்பாறலில் சந்திக்கும் வஹிதா (நடாஷா சிங்) மீது காதல் வயப்பட, அங்கிருந்து அவனது வாழ்க்கைப் பாதை மாறுகிறது. அதீதக் கட்டுப்பாடுகளை உடைய இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தப் பெண்ணான வஹிதாவுக்கு, எப்போதும் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் ஜிப்ஸியின் மீதும் அவனது வாழ்க்கைமுறை மீதும் ஆச்சரியமும் ஈர்ப்பும் ஏற்படுகிறது.
காதலர்கள் ஒன்று சேர்ந்தாலும் அவர்களைச் சுற்றி நிறைய பிரச்னைகள் உருவாக, அதன் பின் நேரும் சம்பவங்களைத் தொடர்ந்து இந்த ஜோடியின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதை அரசியல் பின்புலத்துடன் கூறியிருக்கிறார் இயக்குநர். காதலில் தொடங்கிய ஒரு இளைஞனின் வாழ்க்கை, சமூக அக்கறை சார்ந்து எப்படி மாறுகிறது, எந்தப் புள்ளியிலிருந்து ஒரு மனிதன் சுயநலச் சேற்றுக்குள்ளிருந்து சற்றுவிலகி சமூகம் சார்ந்தும் சிந்திக்க தொடங்குகிறான் என்பதை இப்படத்தின் மூலம் நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல கூறியுள்ளார் இயக்குநர்.
சிறுபான்மையினரான இஸ்லாமியர்களை, தீவிரவாதிகள் வேட்டையாடி படுகொலை செய்த, நாட்டின் கறையாகக் கருதப்படும் இனப் படுகொலையை மையமாக வைத்து இக்கதை எடுக்கப்பட்டுள்ளது. பல காட்சிகள் பார்வையாளர்களை உறைய வைக்கிறது. ஆனால் பிரச்னையின் வேரிலிருந்து தொடங்காமல், ஒரு புள்ளியிலிருந்து தொடங்குதால், முழுமையான புரிதலை உருவாக்க தவறிவிட்டது எனலாம். நிச்சயம் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் படுகொலைகளை ஒருபோதும் நியாயப்படுத்தவே முடியாது. ஒரு கொலைக்கு இன்னொரு கொலையும் தீர்வாகாது. அரசியல் பேசும் படங்கள் கத்தியில் நடப்பது போன்றுதான். இப்படம் கத்தியில் வெட்டு வாங்கியிருப்பது கண்கூடு.
உருவாக்கப்பட்ட மதக் கலவரத்தால் அப்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் வாழ்விடத்தை விட்டு துரத்தப்படும் காட்சிகள் மனதைக் கலங்கடிப்பவை. அதே வேளையில் அடிப்படைவாதத்தை ஒரு கதாபாத்திரம் மூலம் கேள்விக்குட்படுத்தி இருப்பதும் துணிச்சலான முயற்சி. இஸ்லாமியப் பெண்களுக்கு குடும்பத்திலும் சரி சமூகத்திலும் சரி பேச்சற்றவர்களாகத் தான் இன்றளவும் உள்ளார்கள். ஒடுக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் ஏங்குவது கட்டுப்பாடற்ற சுதந்திரத்துக்குத்தான். வஹிதா தன் குடும்பத்திலிருந்து அதற்காகத்தான் விலகியோடுகிறாள். ஆனால் அவளுக்கு சமூகம் தந்த தண்டனை பித்து நிலை. சுற்றி நடக்கும் சம்பவங்களால் பாதிக்கப்படும் யாரொருவருக்கும் வஹிதாவின் நிலைதான் ஏற்படும். இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் நிகழ்த்தப்படும் அரசியல் படுகொலைகள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கும். ஆனால் பகடைக்காய்களாக மாறுவதும், பலியாடுகளாக வீழ்வதும் ஓட்டு எந்திரங்களான பொதுமக்கள்தான் என்பதை இப்படம் மெய்ப்பிக்கிறது.
இறையாண்மை பேசும் ஒரு நாட்டில் நிகழ்த்தப்படும் இனப்படுகொலைகள் அனேகம். கருத்து சுதந்திரம் கூட இல்லாத ஒரு தேசத்தில் யாரும் பேசத் துணியாத விஷயங்களைப் பேசும் ஒருவனுக்கு கிடைக்கும் பரிசு சிறை தண்டனையும், அடி உதைகளும்தான். இதுபோன்ற பல உள் அடுக்குகளை இக்கதை கொண்டிருந்தாலும், கதையோட்டத்தில் ஆழமாகப் பதிவு செய்யவில்லை. இந்தியாவின் பல பகுதிகளையும், மதக் கலவரங்களையும், படத்தின் முக்கியக்காட்சியான கைக்கூப்புதலும், வாளேந்துதலையும் வெகு துல்லியமாக ஜீவனுடன் பதிவு செய்துள்ளார் செல்வகுமார். குறிப்பாக படத்தின் ஆரம்பத்தில் காதல் காட்சிகளிலில் கவிதை பேசிய கேமரா, பின்னர் வேகமெடுத்து சமூக அவலங்களைப் படம் பிடிப்பதில் சூறாவளியாகிறது. ஹாட்ஸ் ஆஃப் டு செல்வகுமார். பாடல்களிலும் பின்னணி இசையிலும் பின்னியெடுக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஆனால் க்ளைமேக்ஸ் பாடலில் போதிய அளவு கவனம் செலுத்தவில்லையோ என்று தோன்றுகிறது. போலவே இறுதிக் காட்சிகளில் படத்தொகுப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
இப்படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் ஜீவா. சாக்லெட் பாயாக நாம் பார்த்திருக்கும் ஜீவா, உறுதியான உடல்வாகுடன் கூடிய நாடோடியாகவும் மாறிவிட அவரது நடை உடை, பாடி லாங்குவேஜ், என அனைத்தும் மெருகேறியுள்ளார். துணையைப் பிரிந்து தேடும் காட்சிகளிலும், தோழர்களுடன் தங்கியிருக்கும் போது உயிரைவிட அதிகமாக நேசிக்கும் இசையைக் கூட மறந்து பிரிவுத் துயரில் தவிப்பதிலும் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகி விட்டார் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார். நடாஷாவின் அமைதியான நடிப்பும், கண்களால் காதலைக் கடத்தும் தருணங்களும் படத்தின் முதற்பாதியை ரசிக்க வைத்தன. சகாவாக நடித்த சன்னி வெய்ன் மற்றும் கதாநாயகியின் அப்பாவாக நடித்த மலையாள நடிகரும் இயக்குநருமான லால் ஜோஸ், சேவாக நடித்த குதிரை என அனைவரின் பங்களிப்பும் ஜிப்ஸிக்கு பலம் சேர்த்துள்ளன. திரைக்கதையில் ஆங்காங்கே சில தொய்வுகளும், தேய்வழக்கமான காட்சிகளும், கதைப்போக்கை மாற்றி சொல்ல வந்த மையக் கருத்தை திசை மாறச் செய்துவிட்டது.
ஒரு பயணியின் வாழ்க்கையில் மலர்ந்த காதலும், அது சார்ந்து நடக்கும் சமூக போராட்டங்களையும் காட்சிப்படுத்தியிருந்தாலும், இந்தப் படம் கருத்தியல்ரீதியாக மேலும் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். என்றாலும், துணிச்சலாகத் திரையில் ஒடுக்கப்பட்ட குரல்களை அடையாளம் காட்டியதற்கு இப்படத்தைப் பாராட்டலாம்.