நட்டி நடராஜன், லால், அனன்யா, அஸ்வந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் காட் ஃபாதர். ஜிஎஸ் ஆர்ட்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாப் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த படத்தை ஜெகன் ராஜசேகர் இயக்கியுள்ளார்.
கொடூரமான தாதாவான லாலின் மகனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அரிய வகை இரத்தம் கொண்டுள்ள சிறுவனின் இதயம் தேவைப்படுகிறது. நட்டியின் மகனின் இதயம் பொருந்தும் என்பதை தெரிந்து லால் அவரை கொலை செய்ய தேடுகிறார். லாலிடம் இருந்து தன் மகனை காப்பாற்ற, நட்டி எடுக்கும் முயற்சியே 'காட் ஃபாதர்' படத்தின் கதை.
பைப் லைன் துறையில் பணியாற்றும் பொறியாளராக நட்டி, தன் மகன் எதிரியிடம் மாட்டிவிடக் கூடாது என அவர் காட்டியிருக்கும் டென்ஷன் தான் படத்தின் விறுவிறுப்புக்கு பெரிதும் உதவியிருக்கிறது. ஒட்டு மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார் நட்டி. பயம் ஒரு பக்கம் இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற வேண்டிய பதட்டத்துடன் அவர் எடுக்கும் பிரயத்தனங்கள் என தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கொடூரமான தாதாவாக லால், நடிப்பதற்கான வாய்ப்பு ஒரு சில இடங்களே இருந்தாலும், மகனை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லக் கூடிய தந்தையாக இரண்டு பரிணாமங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சராசரியான குடும்பத் தலைவியாக அனன்யா தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். தன்னை சுற்றி நிகழும் கதையை உணர்ந்து கொண்டு துறுதுறு சிறுவன் வேடத்துக்கு சரியாக பொருந்துகிறார் அஸ்வந்த். லால் உட்பட கதாப்பாத்திரங்களின் பின்னணியை சற்று அழுத்தமாக வடிவமைத்திருக்கலாம்.
ஒரே அப்பார்ட்மென்ட்டில் ஓர் இரவில் நடைபெறும் கதை. பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாத வண்ணம் வித்தியாசமான கோணங்களால் சுவாரஸியப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம். நவீன் ரவிந்திரனின் பின்னணி இசையின் மூலம் திரில்லர் படத்தில் காட்சிகள் தொய்வடையாமல் பார்த்துக்கொண்டுள்ளார்.
கிளைமேக்ஸில் வரும் திடீர் திருப்பங்கள் நன்றாக இருந்தாலும், முன்பே கணிக்கக் கூடிய வகையில் இருந்தது. முதல் பாதியில் லால், அஸ்வத்தை தேடி அப்பார்ட்மென்ட் வரும் வரையில் இருக்கும் காட்சிகள் மெதுவாகவே நகர்கிறது. அந்த காட்சிகள் பெரிய அழுத்தமாகவும் இல்லை. அதன் பிறகே படம் சூடுபிடிக்கிறது.
ஒரே அப்பார்ட்மென்ட்டில், ஒரே இரவில் இரண்டு அப்பாக்கள் தங்கள் மகனின் உயிரை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் என விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜெகன் ராஜேசகர். அதனை முடிந்த வரை சிறப்பாக காட்சிப்படுத்தி பார்வையாளர்களுக்கும் அந்த பதட்டத்தை கடத்தியிருக்கிறார்.