சூர்யா, பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
வடநாடு - தென்னாடு என ஊர் இரண்டாம் இருக்க, கண்ணபிரானாக வரும் வழக்கறிஞர் சூர்யாவும் அவரது தந்தை சத்யராஜூம் ஊர்மக்கள், பெண்களின் நியாத்துக்காக நிற்கின்றனர். இதில் வடநாடு பெண்ணான ஆதினி எனும் நாயகியை சூர்யா காதலித்து கரம் பிடிக்கிறார். இதனிடையே கோடியில் டீலிங், பெரிய இட தொடர்பு என இருக்கும் செமி-கார்ப்பரேட் வில்லன் போல் தோனும் வினய், ‘பிக்பாஸ்’ சிபி, சரண் சக்தி உள்ளிட்ட சிலரை சேர்த்துக்கொண்டு பெண்களை குறிவைத்து பாலியல் துன்புறுத்தல், தகாத வீடியோ பதிவு உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார். அதை எப்படி "எதற்கும் துணிந்தவரான" வழக்கறிஞர் சூர்யா கண்டுபிடித்து தண்டிக்கிறார் என்பதே மீதிக்கதை.
கதை முழுவதும் துருதுருவென பரபரக்கிறார் & கோபத்தில் கொதிக்கிறார் சூர்யா. வழக்கமான ஹீரோயினுக்கான ரோலை தாண்டி, பிற்பாதியில் ‘கதை தன் மீது பயணிக்க’ தன் பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார் பிரியங்கா அருள் மோகன். தனித்துவமான நடிப்பில் கவனம் ஈர்க்கின்றனர் சத்யராஜ் - சரண்யா பொன்வண்ணன். எனினும் சூர்யாவின் குடும்பத்துக்குள் நடக்கும் காமெடி காட்சிகள் செயற்கையாகவே வந்து போகின்றன. இளவரசு- தேவதர்ஷினியின் ஹியூமர் ஃபேமிலி ஆடியயன்ஸ்க்கு வொர்க் அவுட் ஆகலாம்.
ரத்னவேலுவின் கலர்ஃபுல் கேமரா பட்டையை கிளப்ப, ராம்-லஷ்மண் & அனல் அரசுவின் ஆக்ஷன் பயிற்சி படத்தை காட்சிக்கு காட்சி தாங்கி நிற்கிறது. படத்தின் வேகத்துக்கும் விறுவிறுப்புக்கும் ஈடுகொடுக்கிறது டி.இமானின் பிண்ணனி இசை. கேட்கும்படியான வெரைட்டி பாடல்கள் தான் என்றாலும், அவை கதைக்கு நடுவில் ரிலாக்ஸ் பண்ணவே உதவுகின்றன.
முதற்பாதி கதையும் முக்கிய வில்லன் வினய்யின் கதாபாத்திரமும் வேகமெடுக்க வெகு நேரமெடுக்கிறது. சூர்யா - பிரியங்கா காதல் வழக்கமாகவே தென்படுகிறது. சூரி, புகழ், ராமர் என படத்தில் அத்தனை பேர் இருந்தும் அதகள காமெடிக்கு இடமில்லை. வில்லன் வினய் மற்றும் அவருடைய பின்னணி, கதைக்களத்துடன் ஒட்டாமல் துண்டாக தெரிகிறது.
வழக்கறிஞராக அதிகார பலம் மிக்கவர்களை எதிர்கொள்ள முடியாமல், வேட்டியை கட்டிகொண்டு, தானே நீதி வழங்கும் விதமாக தன் பாணியில் வில்லன்களை தண்டிப்பது என்பது கதைக்கு பொருந்தினாலும், அதுவரை கதையை தாங்கி நிற்கும் எதார்த்தம் அங்கு வலுவிழக்கிறது. வில்லன் தரப்பு கதையும் கதாபாத்திரங்களும் இன்னும் தெளிவாக ஸ்கெட்ச் செய்யப்பட்டிருக்கலாம்.
முதல் பாதியில் பெண்ணை தூக்குவதாக சொல்லி ஏமாற்றி சூர்யா செய்யும் சர்ப்ரைஸ் ரசிக்க வைக்கிறது. “ஆம்பள பசங்கள அழக் கூடாதுனு சொல்லி வளக்குறோம், ஆனால் உண்மையில் பெண் பிள்ளைகளை அழ வைக்க கூடாதுனு சொல்லி ஆம்பள பசங்கள வளக்கணும்” என சூர்யா பேசும் ஒற்றை வசனம் அப்ளாஸ் பெறுகிறது. வில்லனால் நாயகியே பாதிக்கப்படுவதால் பிரச்சனையும் அழுத்தமாக பதிவு செய்யப் படுவதுடன், ஹீரோவின் வலுவான கோபத்துக்கு மேலும் நியாயம் சேர்க்கிறார் இயக்குநர்.
குடும்ப பின்னணியில் முத்தாய்ப்பான ஒரு மெசேஜை சொல்லி இருப்பதற்கு பாராட்டுகள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக பேசும் அதே சமயம், பாதுகாப்புக்கு காவலன் ஆப், ‘எது நடந்தாலும் உடைந்து போகாமல் - எதிர்த்து சந்திக்க வேண்டும்’ என பிற்பாதியில் மனைவி பிரியங்கா அருள் மோகனிடம் சூர்யா பேசும் நம்பிக்கை வார்த்தைகள் என பெண்களுக்கான விழிப்புணர்வையும் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் மூலம் ஏற்படுத்த இயக்குநர் பாண்டிராஜ் தவறவில்லை.