தனுஷ் ஒரு கல்லூரி மாணவர். கல்லூரியில் நடக்கும் ஷூட்டிங்கில் நடிக்கும் மேகா ஆகாஷுக்கும் அவருக்கும் காதல் மலர்கிறது. திருமணம் செய்துகொள்ள வீட்டுக்கு அழைத்து செல்கிறார். ஆனால் மேகாவை நடிக்க வைத்து பணம் பார்க்க நினைக்கும் செந்தில் வீராசாமி அங்கிருந்து அவரை அழைத்து செல்கிறார்.
வருடங்கள் உருண்டோட, காதலை தூக்கி எறிந்த தனுஷுக்கு மீண்டும் மேகாவிடம் இருந்து ஒரு அழைப்பு வருகிறது. அது எப்படி ஒரு உயிரைக்குடிக்கும் தோட்டா அவரை நோக்கி பாயும் அளவு வாழ்வை புரட்டிப் போடுகிறது என்பதே படத்தின் கதை.
"ஒரு பெரிய ஜோசியர் கிட்ட என் கைய நீட்டி கேட்டேன். நான் 90 வயசு வர வாழ்வன்னு சொன்னான். இப்ப நான் செத்துட்டண்ணா என் பணம் எனக்கு திரும்ப வேணும். இல்ல ஜோசியக்காரன தேடி சாவடிப்பன்" என்று ஆரம்பக் காட்சியிலேயே துப்பாக்கி முனையில் தொடங்கும் வாய்ஸ் ஓவர் படம் முழுக்க விரவிக்கிடக்கிறது. காட்சி வழி கதை சொல்லலை மட்டுமே விரும்பும் புதிய அலை இயக்குனர்கள் மத்தியில் கவுதம் மேனன் Voice Over Narrativeவை க்ரிஸ்பாக கையாண்டிருக்கிறார்.
1950ல் வெளியாகி உலக புகழ் பெற்ற பில்லி வில்டரில் Sunset Boulevard படத்தின் ஓப்பனிங் சீனின் தாக்கம் 'காக்க காக்க'விற்கு பிறகு மீண்டும் கவுதம் மேனனிடம் தலை காட்டுகிறது.
தனுஷ் எந்த கதாப்பாத்திரத்துக்கு தான் பொருந்த மாட்டார் என தெரியவில்லை.
கவுதம் மேனனின் 'மாடர்ன் சிட்டி தேவதைகள்' பட்டியலில் புதிதாக இணைகிறார் மேகா ஆகாஷ். 'எனை நோக்கி பாயும் தோட்டா' அவருக்கு முதல் படமாக ரிலீசாகி இருந்தால், முதல் படம் என்று யாரும் நம்பி இருக்க மாட்டார்கள்.
'PhD பண்ணு என் மேல' என்று சொல்லும்போது மேகாவை ரசிப்பதா, கவுதமின் வசனத்தை ரசிப்பதா என்று தெரியவில்லை.
தனுஷுக்கு அண்ணனாக வரும் சசிகுமாருக்கு வழக்கத்துக்கு மாறான கச்சிதமான கதாப்பாத்திரம். வில்லனாக வரும் செந்தில் வீராசாமி மிரட்டல்.
தர்புகா சிவாவின் இசையில் படம் முழுக்க இனிமையாக இழைந்தோடுகிறது. அனைவரும் எதிர்பார்த்த மறுவார்த்தை பேசாதே காதுக்கு இனிமை என்றாலும் படத்தில் வரும் இடம் இழுவையாக உணர வைக்கிறது.
ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் ஜோமோன் டி ஜான் மும்பையின் இருளையும், பொள்ளாச்சியின் ரம்மியத்தையும் அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக தனுஷின் மனநிலையை பிரதிபலிக்க நிறங்களை கையாண்ட விதம் சூப்பர்.
எடிட்டர் பிரவீண் ஆண்டணி கதையை குறுக்க மறுக்க வெட்டி சிறப்பான திரைக்கதையாக்க துணை செய்திருக்கிறார்.
காதலித்த பெண்ணுக்கு பின்னால் வரும் ரவுடி வம்பு வழக்கமான கதை என்றாலும் அதற்கு கவுதம் மேனனின் ரெசிப்பி வேறு.