ரிஷி ரிச்சர்டு, ஷீலா, கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'திரௌபதி'. ஜிஎம் ஃபிலிம் கார்பரேஷன் சார்பாக மோகன்.ஜி இந்த படத்தை கதை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார்.
கொலை வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வரும் ரிஷி அதன் பிறகு தனது மனைவியான திரௌபதியின் லட்சியத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறார். எதற்காக ரிஷி சிறை சென்றார், அவரது மனைவியின் லட்சியம் நிறைவேறியதா என்று சொல்லும் படமே திரௌபதி படத்தின் கதை.
சிலம்ப ஆசிரியர், சிறை சென்று திரும்பிய பின் வாழ்க்கையை தொலைத்த எளிய மனிதர் என இருபரிமாணங்களில் பிரபாகர் என்ற வேடத்தில் ரிஷி ரிச்சர்டு. அவரது மனைவி திரௌபதி என்ற வீர தமிழச்சியாக ஷீலா.
வக்கீலாக கருணாஸ் சிறிய வேடம் என்றாலும் தனது முதிர்ச்சியான நடிப்பால் படத்தின் முக்கிய திருப்பத்திற்கு உதவியிருக்கிறார். ரிஷியின் நண்பராக ஆறு பாலா, சப் ரிஜிஸ்டராக சேசு, ஜீவா ரவி, லேனா உள்ளிட்டோரும் தங்கள் வேடத்துக்கு நியாயம் செய்துள்ளனர். இருப்பினும் முக்கிய காட்சிகளில் நடிகர்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.
கலப்பு திருமணங்கள் அதன் பின்னணி ஆகியவற்றை படத்தின் களமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர். அதற்காக ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையில் இந்த படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறார். பொதுவாக சமூகத்தில் சொல்லப்படும் சாதிய ரீதியான குற்றச்சாட்டுக்களை வசனங்கள் மூலமாக வெளியிட்டிருக்கிறார் இயக்குநர். ரிஷி பழிவாங்க எடுக்கும் முயற்சிகளில் லாஜிக் மீறல்களால் அந்த காட்சிகளில் சுவாரஸியம் குறைவு.
விசாரணையின் போது ரிஷி சொல்லும் பின்னணியை கேட்டுவிட்டு போலீஸ் அவருக்கு ஆதரவாக பேசுவது போன்ற காட்சிகள் படத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது.
தனது பின்னனி இசையின் மூலம் படத்துக்கு கூடுதல் பரபரப்பு சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜூபின். காட்சி வடிவமைப்பில் சில குறைகள் இருந்தாலும் பெரும்பாலான காட்சிகளை திறம்பட கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயண்.
சாதி மறுப்புத் திருமண நிகழ்வுகளில் சில தவறுகள் இருந்தாலும் பொதுவாக எல்லா சாதி மறுப்புத் திருமணங்களையும் தவறாக சித்தரித்திருப்பது முரணாக பட்டது. கொலைகளை படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் ஆதரித்து பேசுவது போன்ற காட்சிகள் தவறான முன்னுதாரணமாக வாய்ப்புள்ளது.