வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் ஜி5 தளத்தில் வெளியாகியிருக்கும் படம் 'டேனி'. கதை, திரைக்கதை எழுதி சந்தானமூர்த்தி இயக்கியிருக்கும் இந்த படத்தை பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பாக பி.ஜி.முத்தையா தயாரித்துள்ளார்.
ஒரு பெண்ணின் உடல் வயல்வெளியில் முற்றிலும் எரிந்து அடையாளம் காணமுடியாத நிலையில் கிடக்கிறது. முதலில் கள்ளக்காதல் விவகாரம் என்று போலீஸாரால் முடிவு செய்யப்படும் வழக்கை கையிலெடுக்கிறார் இன்ஸ்பெக்டர் குந்தவி. அவருக்கு உதவியாக மோப்பநாய் டேனி. இன்ஸ்பெக்டர் குந்தவியும் மோப்பநாய் டேனியும் குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை சொல்லியிருக்கும் படமே டேனி.
குந்தவி என்ற இன்ஸ்பெக்டராக வரலக்ஷ்மி சரத்குமார். விவசாயக் குடும்ப பின்னணியில் தன்னிடம் வரும் சின்ன சின்ன பிரச்சனைகளை வீட்டிலேயே பேசி சமரசம் செய்யும் அவருக்கு இன்ஸ்பெக்டர் உடை மிகச் சரியாக பொறுந்துகிறது.
வில்லனாக வினோத் கிஷன் வரலக்ஷ்மியின் தங்கையாக அனிதா சம்பத், வேலராமமூர்த்தி, குட்டிப்புலி சரவண சக்தி, கவின் என பிற நடிகர்களும் முடிந்த வரை தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு உயிர்கொடுத்திருக்கின்றனர்.
விவசாயம் பிரதான தொழிலாக உள்ள தஞ்சாவூர் பின்னணியில் கதை நகர்வதால் வயல்வெளிகள் சூழ ரம்மியமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார். முக்கியமான திரில்லர் காட்சிகளில் கூடுதல் பரபரப்பு சேர்த்திருக்கிறது சாய் பாஸ்கரின் பின்னணி இசை.
நாம் அதிகம் அறிந்திடாத மோப்பநாய் பற்றியும் காவல்துறையில் அது பயன்படுத்தப்படும் விதம் பற்றியும் விவரமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். மிக எளிய கதையுடன் படம் வெறும் 95 நிமிடங்கள் மட்டுமே நகர்கிறது.
முதல் 45 நிமிடங்களிலேயே படம் எதை நோக்கி நகர்வது என்று கணிக்க முடிகிறது. அதன் பிறகு படம் சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. வரலக்ஷ்மியின் கதாப்பாத்திரம் தவிர மற்ற எந்த கதாப்பாத்திரங்களும் வலுவாக அமைக்கப்படவில்லை. குறிப்பாக வில்லனின் கதாப்பாத்திரம் கூட தெளிவில்லாமல் இருக்கிறது.
படத்தில் ஆங்காங்கே வரும் காமெடி காட்சிகள் ரசிக்கும் படி இல்லை. மேலும் குற்றவாளி பற்றிய முக்கிய குறிப்புகள் தெரிந்த பிறகும் இறுதியில் தான் அதுகுறித்து விசாரணை செய்வதாக காட்டப்படுவது படத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது. மேலும் திரைக்கதையில் சுவாரஸியம் குறைவு.