சந்தானம், யோகி பாபு, ரித்திகா சென் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் டகால்டி. ஹோம் மேட் ஃபிலிம்ஸ் , 18 ரீல்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார்.
மிகப்பெரிய பணக்காரரான தருண் அரோரா, ஹீரோயின் ரித்திகா சென் மீது ஆசைப்பட, அவரை கண்டுபிடித்து அழைத்து வரும் பொறுப்பு எதிர்பாராதவிதமாக சந்தானத்திற்கு வருகிறது. பின்னர் நடக்கும் நிகழ்வுகளே படத்தின் கதை.
குரு என்ற வேடத்தில் சந்தானம். மும்பையில் drug மாஃபியா கும்பலின் கையாளாக வருகிறார். வழக்கமான தனது டைமிங் காமெடி, தெனாவட்டான பாடி லாங்குவேஜ் என்பதன் கூடவே இந்த முறை ஆக்சன் மற்றும் ரொமான்ஸிலும் சீரியஸாக முயற்சித்திருக்கிறார்.
சந்தானத்தின் தோழனாக யோகி பாபு. இருவரின் காம்பினேஷன் காட்சிகளில் ஒருவரையொருவர் கலாய்த்து கொள்ளும் இடங்கள் ஆங்காங்கே சிரிப்பை வரவழைத்தன. குறிப்பாக யோகி பாபு 'என்னால இதுக்கு மேல சீரியஸாக பேச முடியாது' என்று சொல்லும் காட்சியில் தியேட்டரே வெடித்து சிரித்தது. ஹீரோயினாக ரித்திகா சென் லிப் சிங்க் பிரச்சனைகள் இருந்தாலும் விவரம் அறியாத கிராமத்து பெண்ணாக அந்த வேடத்துக்கு சரியாக பொருந்துகிறார்.
மாஃபியா கும்பலின் தலைவராக ராதாரவி, வில்லனாக தருண் அரோரா, சந்தான பாரதி, ரேகா, மனோபாலா உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேடங்களுக்கு உரிய நியாயங்களை செய்திருக்கின்றனர். குறிப்பாக சில காட்சிகளே வந்தாலும் பிரம்மானந்தம் வரும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பு மழை.
காமெடி படத்துக்கு தனது பின்னணி இசையால் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார் விஜய் நரேன். படத்தில் ஏகப்பட்ட லொகேஷன்கள், முழுக்க பயணங்கள் என நகரும் கதையில் தனது நேர்த்தியான ஒளிப்பதிவால் கவனம் ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பதி.
படத்தில் கடைசி பதினைந்து நிமிடங்கள் காமெடி சரவெடி எனும் அளவுக்கு செமயாக இருந்தது. படித்த பெண்ணாக காட்டப்படும் ஹீரோயின் தன்னை காப்பாற்றினார் என்ற ஒரே காரணத்துக்காக சந்தானத்துடன் பயணிப்பது நம்பும்படியாக இல்லை.
மேலும் ஹீரோயினின் குடும்பத்தார் ஊரில் மிகவும் அந்தஸ்த்து உள்ளவர்களாக காட்டப்படுகிறார்கள். ஆனால் தன் பெண் தொலைந்து போனதும் தேடுவதற்கு பெரிய முயற்சிகள் எடுக்காமல் வருத்தப்படுவதாக மட்டுமே காட்டப்படுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் சந்தானத்தின் கதாப்பாத்திரம் டீட்டெயிலாக சொல்லப்படாததால் அவரது திடீர் மனமாற்றத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.