அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைதாரி, டயானா எரப்பா, பிரகாஷ்ராஜ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் செக்க சிவந்த வானம் ரசிகர்களை ரசிக்க வைத்ததா? பார்க்கலாம்.
பெரியவர் என அனைவராலும் அழைக்கப்படும் தாதா சேனாதிபதி (பிரகாஷ் ராஜ்) வரதன்(அரவிந் சாமி), தியாகு(அருண் விஜய்), எத்தி(சிம்பு) என 3 மகன்கள்,மகள், மனைவி என வாழ்ந்து வருகிறார். ஒருகட்டத்தில் பெரியவரைக் கொலை செய்ய முயற்சி நடக்கிறது.
தங்களது சொந்த வாழ்வில் நிகழும் சில எதிர்பாராத சம்பவங்களால், ஒரு கட்டத்தில் சொந்த அண்ணனான வரதனை தியாகுவும்,எத்தியும் எதிரியாக நினைக்கத் தொடங்கி அவரைத் தீர்த்துக்கட்ட கைகோர்த்து களத்தில் இறங்குகின்றனர்.
இந்த போராட்டத்தில் வரதனுக்கு துணையாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியும்,வரதனின் நண்பனுமான ரசூல் (விஜய் சேதுபதி) இருக்கிறார். சொந்த தம்பிகளே விரோதிகளாக மாறியதால் அவர்களிடமிருந்து தப்பிக்க வரதன் ஓட ஆரம்பிக்கிறார். தியாகுவும், எத்தியும் அவரைத் துரத்த ஆரம்பிக்கின்றனர். இதில் யார் வென்று பெரியவரின் இடத்தைப் பிடிக்கிறார்கள்? அண்ணன்-தம்பிகள் மீண்டும் ஒன்று சேர்ந்தனரா? பெரியவரைக் கொலை செய்ய முயற்சித்தது யார்? என்ற கேள்விகளுக்கான விடையே 'செக்க சிவந்த வானம்'.
வரதனாக நடித்திருக்கும் அரவிந்த் சாமி, தியாகுவாக நடித்திருக்கும் அருண் விஜய், எத்தியாக நடித்திருக்கும் சிம்பு, ரசூலாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி என நால்வரும் நடிப்பில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்திருக்கிறார்கள். எனினும் வசனங்களில் அதிகம் ஸ்கோர் செய்வது விஜய் சேதுபதியும், சிம்புவும் தான். சின்னச்சின்ன வசனங்களில் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சிக்சர் பறக்க விடுகின்றனர்.
இதேபோல கணவனை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத மனைவியாக, காதலிகளாக ,கணவனை வெறுக்கும் மனைவியாக ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா என நடிகைகளும் தங்களது கதாபாத்திரத்தை செவ்வனே செய்துள்ளனர்.
'நாயகன்', 'தளபதி' வரிசையில் மீண்டும் ஒரு கேங்ஸ்டர் படத்தை மணிரத்னம் தனது பாணியில் இயக்கி , அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். பாடல்களை காட்சிகளோடு திரையில் காண ரசிகர்கள் 'வெறித்தனமாக' வெயிட் செய்தாலும், கதையோட்டத்தை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாத வகையில் பாடல்களைப் பயன்படுத்தியிருப்பது சிறப்பு.
ஒரு கேங்ஸ்டர் படத்துக்கேற்ற தரமான ஒளிப்பதிவை சந்தோஷ் சிவனின் கேமரா வழங்கியிருக்கிறது. ரஹ்மானின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பெரும்பலம். எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாத வகையில் காட்சிகளை தொகுத்துக் கொடுத்த விதத்தில் ஸ்ரீகர் பிரசாத் கவர்கிறார்.ஆக்ஷன் காட்சிகளில் திலீப் சுப்பராயனின் உழைப்பு தனித்துத் தெரிகிறது.